புகழோடு வந்த புற்றுநோய்.. போராடி வென்ற லிசா ரே..


புகழோடு வந்த புற்றுநோய்.. போராடி வென்ற லிசா ரே..
x
தினத்தந்தி 4 March 2018 8:58 AM GMT (Updated: 4 March 2018 8:58 AM GMT)

லிசா ரே! பன்முகத் திறமை வாய்ந்தவர். நடிகை, எழுத்தாளர், கவிஞர், மாடல், டி.வி. நிகழ்ச்சித் தொகுப்பாளர்... எல்லாவற்றுக்கும் மேலாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டுவர ஊக்கம் கொடுக்கும் தன்னம்பிக்கை பேச்சாளர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை வெளிப்படையாய் தெரிவிக்கக்கூடத் தயங்கும் நிலை உள்ளது. ஆனால் அதைப் பற்றி, பலரின் மத்தியில் திரும்பத் திரும்பப் பேசி லிசா ரே விழிப்புணர்வை உருவாக்கி வருகிறார்.

அழகுப்பெண் லிசா, 1990-களில் தனது 16-வது வயதில் ஒரு பேஷன் இதழின் அட்டையில் இடம்பெற்றார். அவ்வளவுதான், அவருக்கு வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கிவிட்டன. ஏராளமான விளம்பரப் படங்களிலும், பாலிவுட், ஆலிவுட் படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். லிசாவே சொல்கிற மாதிரி, அவருடைய திரையுலகப் பிரவேசம் ஓர் இனிய விபத்து. ஆனால் அவருடைய வாழ்வில் அதற்கப்புறம் நிகழ்ந்த ‘விபத்து’தான் அவரது தைரியத்தை கடுமையாகச் சோதித்துப் பார்த்தது.

உடல்நலக் குறைவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், லிசாவின் ரத்த பிளாஸ்மா அணுக்களில் ‘மல்டிபிள் மையலோமா’ எனப்படும் புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இயல்பிலேயே போராளியான லிசா, புற்றுநோய்க்குப் பணிந்துவிடவில்லை, அதை எதிர்த்துப் போராடவும், அது குறித்து வெளிப்படையாகப் பேசவும் தயாரானார்.

தீவிரப் போராட்டத்தின் பின் புற்றுநோயை வென்றிருக்கிற லிசா, தற்போது தன்னை ஒரு ‘புற்றுநோய் பட்டதாரி’ என்கிறார்.

கனடாவின் டொராண்டோவில் பிறந்த லிசா ரேயின் பேச்சில் எப்போதும்போல் நம்பிக்கையும் தெளிவும் பளிச்சிடுகிறது!

பல்வேறு சோதனைகளுக்கு இடையிலும் நீங்கள் வெளிப்படுத்திய தன்னம்பிக்கை அசாதாரணமானது. அதற்கான சக்தி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?

எனக்குத் தெரியவில்லை (சிரிக்கிறார்). இதுதான் வாழ்க்கை என்று நான் நினைக்கிறேன். தற்போது நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நடிகை, எழுத்தாளர், மாடல், டி.வி. நிகழ்ச்சியை வழங்குபவர் என்று பல்வேறு பட்டங்களுக்குச் சொந்தக்காரர் நீங்கள். எந்தப் பட்டம் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக நினைக்கிறீர்கள்?

எனக்குப் பொதுவாகவே, முத்திரை குத்துவது பிடிக்காது. நான் நான்தான். நீங்கள் கூறிய எந்தப் பட்டத்தையும் நான் பயன்படுத்துவதில்லை. நானும் இன்னொரு மனுஷி. வேண்டுமானால், ‘புற்றுநோய் பட்டதாரி’ என்று சொல்லலாம்.

‘புற்றுநோயில் இருந்து மீண்டவர்’ என்பதற்கு ‘புற்றுநோய் பட்டதாரி’ என்பதன் மூலம் புதிய, நேர்மறையான அர்த்தம் கொடுக் கிறீர்கள் நீங்கள். இவ்வளவு பக்குவம் எப்படி வந்தது?

புற்றுநோய் தாக்கத்துக்கு உள்ளானது எனக்கு கிடைத்த மிகச்சிறந்த அனுபவம். நான் மட்டுமல்ல, புற்றுநோயிலிருந்து மீண்ட பலரும் அது தங்களுக்கு ஒரு பெரிய பாடம் என்று சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நேற்றிருந்தது மாதிரி வாழ்க்கை இன்று இருப்பதில்லை. நாம் ஒன்றில் தேர்ச்சி பெற நினைத்திருப்போம், ஆனால் மற்றொன்றில் தேர்ச்சி பெறுவோம். அதனால் நான் இதை, ‘புற்றுநோய் பட்டத் தேர்ச்சி’ என்று கூறுகிறேன்.

நீங்கள், தியானத்திலும், யோகாசனத்திலும் தீவிரமாக ஈடு படுபவர் என்று தெரியும். இது, புற்றுநோய்க்குப் பிறகு வந்ததா அல்லது அதற்கு முன்பே இருந்ததா?

நான், புற்றுநோய் கண்டறியப்படுவதற்கு முன்பிருந்தே தியானத்திலும் யோகாசனத்திலும் ஈடுபட்டு வருகிறேன்.

சுற்றுலா பிரியராகவும், இயற்கையை நேசிப்பவராகவும் நீங்கள் தோன்றுகிறீர்கள். குறிப்பாக எந்த மாதிரியான இடங்களுக்குச் செல்ல உங்களுக்குப் பிடிக்கும்?

பதிலளிப்பதற்கு மிகவும் கடினமான கேள்வி இது. சிறுவயது முதலே நான் ஒரு நாடோடி. நான் 16 வயது முதல் பணிபுரியத் தொடங்கி விட்டேன். அதுமுதலே நிறையப் பயணித்து வருகிறேன். என் வாழ்வின் இந்தக் கட்டத்தில் நான் இயற்கையை மிகவும் நேசிக்கிறேன். உலகின் பல பெருநகரங்களில் வாழ்ந்திருக்கிற எனக்கு, நகரங்களைவிட இயற்கையின் மடியில் இருப்பது பிடிக்கிறது. இயற்கையே குணப் படுத்தக்கூடியதுதான். அதனால்தான் நான் எல்லோரிடமும், அவ்வப்போது செல்போனை அணைத்துவிட்டு, இயற்கைச் சூழலில் சிறிதுநேரத்தைக் கழித்துவிட்டு வாருங்கள் என்கிறேன். நமக்குத் தேவையான எல்லாமும் இயற்கையிடம் இருந்து கிடைக்கும்.

சமீபத்தில் உங்களின் அபாரமான சில கவிதைகள் வெளிவந்தன. உங்களுடைய அதிகம் வெளித் தெரியாத இந்தப் பக்கத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்?

சொல்கிறேன்! நான் பல ஆண்டுகளாகவே எழுதிவருகிறேன். இன்னும் அதிக காலத்தை எழுத்தில் கழிக்க விரும்புகிறேன். நான் ஏற்கனவே எழுதிக்கொண்டிருக்கும் புத்தகத்தை இந்த ஆண்டு முடித்துவிடுவேன். அதற்குப் பிறகு, மேலும் நான் எழுதுவதற்கு நேரம் கிடைக்கும் என்று எண்ணுகிறேன். ஏற்கனவே நிறைய கவிதைகள் எழுதியுள்ளேன்.. எனது சுயசரிதையை முடித்தவுடன், நான் எழுதிய கவிதைகளை எல்லாம் தொகுத்துப் புத்தகமாக வெளியிடத் தீர்மானித்திருக்கிறேன்.

அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளர், விபத்தாகத்தான் நடிகையாகி இருக்கிறேன். எனவே, நடிப்புக்கு இணையாக எழுத்து, எப்போதும் எனக்குப் பிடித்தமான விஷயமாக இருந்திருக்கிறது. எனது தந்தை நிறைய புத்தகங்கள் வாசிப்பார். அதனால் சிறுவயதிலே எனக்கும் அந்த பழக்கம் வந்துவிட்டது. அத்துடன், நான் சிறுவயதில் யாருடனும் அதிகம் பேசாதவள். எனவே, நேரடி மனிதத் தொடர்பு இல்லாத வேலைதான் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் எழுத்தாளராக ஆசைப்பட்டேன். ஆனால் ஒரு கட்டத்தில் வாழ்க்கை திசைமாறிவிட்டது.

எப்போதும் மாறாத உங்களின் உற்சாகத்தின் ரகசியம் என்ன?

மற்றவர்களுக்காக மட்டும் வாழாமல் நாம் நமக்காகவும் வாழ வேண்டும். அதுதான் ரகசியம். அப்படித்தான், நான் எனது கருத்துகளை வெளிப்படுத்த, தியானம், யோகாசனம் செய்ய, பிடித்த இடங்களுக்குச் செல்ல நேரத்தைச் செலவிடுகிறேன். கிடைக்கும்போது அமைதியை அனுபவிக்காமல், எனது ஆரோக்கியம் கருதி நானே அதை நாடிச் செல்கிறேன்.

இப்போது உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருப்பது என்ன?

எனக்கு 45 வயதாகிவிட்டது. பணம்தான் முக்கியம் என்ற எண்ணம் மாறிவிட்டது. கலை, எழுத்து என்று எனக்குப் பிடித்த விதத்தில் வாழ விரும்புகிறேன்.

லிசா ரேயின் குரலில் உறுதி மட்டுமல்ல, உண்மையும் தெரிகிறது.

Next Story