இணையதளத்தில் ரஜினிகாந்தின் ‘2.0’ பட காட்சிகள் வெளியானது படக்குழுவினர் அதிர்ச்சி


இணையதளத்தில் ரஜினிகாந்தின் ‘2.0’ பட காட்சிகள் வெளியானது படக்குழுவினர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 4 March 2018 9:30 PM GMT (Updated: 4 March 2018 7:23 PM GMT)

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படம் எந்திரன் 2-ம் பாகமாக ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. இந்த படத்தை ஷங்கர் டைரக்டு செய்துள்ளார்.

ஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படம் எந்திரன் 2-ம் பாகமாக ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. இந்த படத்தை ஷங்கர் டைரக்டு செய்துள்ளார். எமிஜாக்சன் கதாநாயகியாகவும் இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் வில்லனாகவும் நடித்துள்ளனர். அடுத்த மாதம் (ஏப்ரல்) 27-ந்தேதி ‘2.0’ திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் தள்ளிவைக்கப்பட்டு அதே நாளில் ரஜினிகாந்தின் ‘காலா’ படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘2.0 படத்தின் டிரெய்லரை விரைவில் வெளியிட ஏற்பாடுகள் நடந்தன. ஹாலிவுட் ஸ்டுடியோக்களில் டிரெய்லரை தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் டிரெய்லரை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில் ‘2.0’ படத்தின் டிரெய்லர் நேற்று இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 1 நிமிடம் 27 நொடிகள் இந்த டிரெய்லர் ஓடியது. 2.0 படப்பிடிப்பை ஷங்கர் பாதுகாப்புடன் நடத்தினார். படத்தின் காட்சிகள் கதாபாத்திரங்களின் தோற்றங்கள் வெளியாகி விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார்.

இந்த பாதுகாப்பை மீறி டிரெய்லர் இணையதளத்தில் வெளியானது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீடியோ முழுமையாக முடிக்காமல் அறைகுறையாக உள்ளது. வில்லனாக வரும் அக்‌ஷய்குமார், நகரை குண்டு வீசி அழிப்பது போன்றும் ரஜினிகாந்த் எந்திரமனிதராக வந்து அவரை எதிர்த்து மக்களை காப்பாற்றுவதுபோன்றும் காட்சிகள் இருந்தன.

‘2.0’ படத்தின் எடிட்டிங் பணிகள் அமெரிக்காவில் உள்ள ஸ்டுடியோக்களில் நடந்து வருகிறது. அங்கிருந்து இது வெளியாகி இருக்கலாம் என்று படக்குழுவினர் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு சில இணையதளங்களில் இருந்து டிரெய்லர் காட்சிகள் நீக்கப்பட்டன. ஆனால் மேலும் பல இணையதளங்களில் அகற்றப்படாமல் உள்ளது.

ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் டிரெய்லரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே இணைதளத்தில் கசிந்தது.

Next Story