பட அதிபர்கள் 5-வது நாள் போராட்டம் தியேட்டர்களில் 3 காட்சிகள் ரத்து ரூ.5 கோடி நஷ்டம்


பட அதிபர்கள் 5-வது நாள் போராட்டம் தியேட்டர்களில் 3 காட்சிகள் ரத்து ரூ.5 கோடி நஷ்டம்
x
தினத்தந்தி 6 March 2018 10:45 PM GMT (Updated: 6 March 2018 7:12 PM GMT)

திரையரங்கு உரிமையாளர்கள் நாளை அவசர கூட்டம் நடத்துகின்றனர்.


தியேட்டர்களில் படங்களை திரையிட கியூப், யூஎப்ஓ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கின்றன. அதை குறைக்க வலியுறுத்தி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தடையை மீறி படங்களை திரைக்கு கொண்டு வரும் தயாரிப்பாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்து உள்ளனர். இதனால் திரைக்கு வர தயாராக இருந்த பல படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. தயாரிப்பாளர்களுக்கும், டிஜிட்டல் சேவை அமைப்பினருக்கும் இடையே நடந்த சமரச பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளன.
தியேட்டர்களில் 3 காட்சிகள் ரத்து; ரூ.5 கோடி நஷ்டம்
திரையரங்கு உரிமையாளர்கள் நாளை அவசர கூட்டம் நடத்துகின்றனர்.

வேலை நிறுத்தம் தொடரும் என்று பட அதிபர்கள் அறிவித்து உள்ளனர். இதனால் திரையுலக பணிகள் முடங்கி உள்ளன. தியேட்டர் உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. திரையரங்குகளில் கூட்டம் குறைந்துள்ளது. ஏற்கனவே திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருந்த ஜீவாவின் கலகலப்பு-2, ஜோதிகா நடித்துள்ள நாச்சியார், விமலின் மன்னர் வகையறா உள்ளிட்ட சில படங்களை தொடர்ந்து திரையிட்டு வருகிறார்கள்.

சில தியேட்டர்களில் பழைய படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன. ஒரு காட்சியில் 10 பேர், 15 பேர் மட்டுமே படம் பார்க்க வருவதாகவும் இதனால் பல திரையரங்குகளில் காலை, பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் தியேட்டர் உரிமையாளர் ஒருவர் கூறினார். மேலும் சில தியேட்டர்களில் கூட்டம் இல்லாததால் 3 காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்னும் 2, 3 நாட்கள் பட அதிபர்கள் வேலை நிறுத்தம் நீடித்தால் சில தியேட்டர்களை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறும்போது, “பட அதிபர்கள் வேலை நிறுத்தம் காரணமாக திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தினமும் குறைந்தபட்சம் ரூ.1 கோடி வீதம் 5 நாட்களிலும் ரூ.5 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. பட அதிபர்கள் சங்கம் பிரச்சினையை சுமுகமாக தீர்த்து விரைவில் புதிய படங்களை திரைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க தியேட்டர் அதிபர்களின் அவசர கூட்டம் நாளை (8-ந் தேதி) மாலை 3 மணிக்கு சென்னையில் நடக்கிறது” என்றார்.

Next Story