தமிழக அரசியலில் ரஜினிகாந்த்-கமல்ஹாசனால் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா கவுதமி பேட்டி


தமிழக அரசியலில் ரஜினிகாந்த்-கமல்ஹாசனால் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா கவுதமி பேட்டி
x
தினத்தந்தி 8 March 2018 11:00 PM GMT (Updated: 8 March 2018 9:01 PM GMT)

தமிழக அரசியலில் ரஜினிகாந்த்-கமல்ஹாசனால் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா என நடிகை கவுதமி பேட்டியளித்தார்.


ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கவுதமி அஞ்சலி செலுத்திய காட்சி.
உலக மகளிர் தினத்தையொட்டி நடிகை கவுதமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் நடிகை கவுதமி கூறியதாவது:-

“பெண்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர் ஜெயலலிதா. பெண்குலத்துக்கு ஒரு தூணாகவும் இருந்தார். எனவேதான் ஆசீர்வாதம் பெறுவதற்காக நினைவிடத்துக்கு வந்தேன். என் மனதில் இருக்கும் எண்ணங்களை பூர்த்தி செய்வதற்காகவும் இங்கு வந்து இருக்கிறேன். அதனை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன்.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கல்விக்கு என்ன தேவையாக இருக்கிறதோ அந்த திட்டங்களை தயாரித்து இருக்கிறோம். இன்று முதல் அந்த பணிகளை தொடங்க இருக்கிறோம். இந்த முயற்சிக்கு அனைவருடையை ஒத்துழைப்பும், ஆசீர்வாதமும் எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். உதவிகள் தேவைப்படுவோருக்கு தோள் கொடுக்க தயாராக இருக்கிறோம்.

திருச்சியில் கர்ப்பிணி பெண் இறந்ததை கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன். இது கொடூரமான சம்பவம். இந்த பிரச்சினையில் இருந்து நாம் நிறைய பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். எல்லோரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். பொறுப்பு எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

இவ்வாறு நடிகை கவுதமி கூறினார். அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு கவுதமி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழக அரசியலில் ஜெயலலிதா இல்லாத வெற்றிடம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

பதில்:- கண்டிப்பாக வெற்றிடம் இருக்கிறது. ஜெயலலிதாவை இரும்பு பெண்மணி என்று சொல்வார்கள். அவர் பெண்கள் மத்தியில் மட்டுமின்றி மனித சாதியிலேயே மிகப்பெரிய சக்தி உள்ள பெண்ணாக திகழ்ந்தவர். அப்படிப்பட்டவர் இல்லாமல் போனது வெற்றிடம்தான்.

கேள்வி:- ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அந்த வெற்றிடத்தை நிரப்புவார்கள் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- இவர்கள் திடீரென்று அரசியலுக்கு வந்து ஒரே நாளில் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்பது சாத்தியம் இல்லை. ஜெயலலிதாவின் வளர்ச்சி பாதை என்பது ஒரே நாளில் நடந்தது இல்லை. மக்கள் மத்தியில் அவர் நிலைப்பதற்கு பல வருடங்கள் ஆனது. இவ்வாறு கவுதமி கூறினார்.

Next Story