மாணவி அஸ்வினி கொலை - ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் தலைகுனிவு -நடிகை கஸ்தூரி


மாணவி அஸ்வினி கொலை - ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் தலைகுனிவு -நடிகை கஸ்தூரி
x
தினத்தந்தி 10 March 2018 10:30 PM GMT (Updated: 10 March 2018 8:36 PM GMT)

மாணவி அஸ்வினி கொலை ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் தலைகுனிவு என நடிகை கஸ்தூரி கூறியிருக்கிறார்.

“கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்டது, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் தலைகுனிவு” என்று நடிகை கஸ்தூரி கூறியிருக்கிறார்.

இதுபற்றி நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
“சுவாதி, சித்ராதேவி, அஸ்வினி...என்று இன்னும் எத்தனை அப்பாவி பெண்களை காவு கொடுக்கப் போகிறோம்? காதல் என்ற பெயரில் தொடரும் இந்த கொலை பாதக ‘சைக்கோ’ போக்குக்கு முடிவு என்ன?

தமிழ் பண்பாடு பெண்களின் துப்பட்டாவில் ஒளிந்து கொண்டிருப்பதாக கூப்பாடு போடும் கலாசார காவலர்களே, ஒரு பெண்ணின் நிராகரிப்பை ஏற்றுக் கொள்ளும் மனவளர்ச்சி இல்லாத ஆண்களை வளர்த்து விட்டதுதான், உங்கள் சாதனை.

இதில், ஒருதலை காதலை மிகைப்படுத்தி காட்டி, பெண்களின் உணர்வுகளை திரித்து, மலிவுபடுத்தி பாலியல் ஆதிக்கத்தை வீரம் என்று சித்தரிக்கும் திரைப்படங்களுக்கும் பொறுப்பு உண்டு. ஏற்கனவே போலீசில் புகார் இருக்கும் நிலையில், அந்த இளைஞனை மீண்டும் சுதந்திரமாக எந்த கண்காணிப்பும் இல்லாமல் இயங்க அனுமதித்த நமது சட்டங்களையும் புனரமைக்க வேண்டும்.

கணவரை இழந்து தனி ஒருத்தியாக மகளை வளர்த்து அவள் எதிர்காலத்தை பற்றிய கனவுகள் அனைத்தையும் இப்பொழுது ஒட்டுமொத்தமாக தொலைத்து விட்டு பரிதவிக்கும் அந்த தாயை நினைத்தால், நெஞ்சை பிசைகிறது.

இது, அந்த தாய்க்கு இழைக்கப்பட்ட துரோகம். இது, நமது வாழ்வியலின் தோல்வி. ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் தலைகுனிவு.” இவ்வாறு நடிகை கஸ்தூரி கூறியிருக்கிறார்.

Next Story