உழைப்பு என்பது பணத்துக்கானது அல்ல மனித ஆரோக்கியத்துக்கானது -ஷாருக்கான்


உழைப்பு என்பது பணத்துக்கானது அல்ல மனித ஆரோக்கியத்துக்கானது -ஷாருக்கான்
x
தினத்தந்தி 11 March 2018 6:46 AM GMT (Updated: 11 March 2018 6:46 AM GMT)

‘பாலிவுட் பாட்ஷா’, ‘கிங்கான்’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஷாருக்கான் எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரைத்துறைக்குள் நுழைந்தவர்.

‘பாலிவுட் பாட்ஷா’, ‘கிங்கான்’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஷாருக்கான் எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரைத்துறைக்குள் நுழைந்தவர். கடின உழைப்பாலும், சொந்த முயற்சியாலும் படிப்படியாக உயர்ந்து உச்ச நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர். உலக அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை தன்வசம் வைத்திருக்கும் ஷாருக்கான் 50 வயதை கடந்த பின்னரும் புதுமுக நட்சத்திரம்போல சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.

52-வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த அவர், தன்னுடைய திரை உலக பயணம் குறித்தும், கற்றுக்கொண்ட விஷயங்கள் பற்றியும் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்.

பிறந்தநாள்:

குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோருக்கும் முக்கியமான ஒரு தினம், பிறந்தநாள். நான் சிறு வயதில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியை இன்றும் அனுபவிக்கிறேன். சிறுவயதில் நிறைய பரிசு கிடைக்கும், இப்போதும் நிறைய பரிசு கிடைக்கிறது. பரிசுப்பொருட்களை பிரித்து பார்ப்பதே தனி மகிழ்ச்சிதான். பிறந்தநாளை கொண்டாடும்போது நான் மீண்டும் குழந்தையாக மாறிவிடுகிறேன்.

நண்பர்களுடன் பிறந்தநாள்:

சிறு வயதில் நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடினேன். இப்போதும் அப்படிதான் கொண்டாட விரும்புகிறேன். நான் அவர்களை மதிக்கிறேன் என்பது அவர்களுக்கு புரிய வேண்டும். என்னை வெளியுலகத்திற்கு கொண்டு வந்தவர்கள் ஊடக நண்பர்கள். அவர்களை நன்றியோடு நினைக்கும் நாளாகவும் அதனை பார்க்கிறேன். எப்போது வேண்டு மானாலும் குடும்பத்தோடு சேர்ந்திருக்கலாம். ஆனால் நண்பர்களோடு சேர்ந்திருக்க என் பிறந்தநாளை தேர்வு செய்திருக் கிறேன். இது ரசிகர்கள் கொடுத்த வாழ்க்கை. அவர்களுக்காக, அவர்களுடன் ஒரு நாள். நானும் உங்களில் ஒருவன், என்று சொல்லும் நாள்.

குழந்தைகள்:

என் குழந்தைகளுடன் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. அவர்களுக்கும் மகிழ்ச்சி. நான் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்பவன். ஆரம்ப காலத்தில் சம்பாதிக்க வேண்டும், பேரும் புகழும் அடைய வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. இப்போது என் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.

நட்சத்திர அந்தஸ்து:

நட்சத்திர அந்தஸ்து என்றால் என்ன என்பது நடிக்க வந்த போது எனக்கு தெரியாது. எனக்கு கொடுத்த வேலையை செய்தேன், உழைத்தேன். ‘‘பாஜிகர்’’ தயாராகி இரண்டரை வருடம் கழித்து வெளியானது. அந்த நேரத்தில் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை சொல்லி மாளாது. நானும் ஒரு நட்சத்திரமாக முடியுமா? என்ற ஏக்கம் எனக்குள் இருந்தது. இன்று படம் வெளியாவதற்கு முன்பே நட்சத்திர அந்தஸ்து வந்துவிடுகிறது. சொல்லப் போனால் நட்சத்திர அந்தஸ்தை வைத்து தான் படமே தயாரிக்கப்படுகிறது. இது ஒரு தனி மனிதன் சம்பாதிக்கும் விஷயமல்ல. இதன் பின் ஒரு சமூகமே உள்ளது. வெறும் நடிப்பு மட்டுமே நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்துவிடாது. அதற்கு பின்னணியில் பலருடைய உழைப்பு உள்ளது. எப்படி சூரியனிடமிருந்து ஒளியை வாங்கி நிலவு பிரகாசிக்கிறதோ அதை போல தான் நானும். நான் எனக்கு பின் இருப்பவர்களை அறிவேன், என்றும் நன்றியோடு நினைத்துக்கொள்வேன்.

குழந்தைகளின் அறிவு:

இன்றைய குழந்தைகளின் அறிவு பிரமிக்கவைக்கிறது. அவர்களின் வளர்ச்சியை பார்ப்பது மகிழ்ச்சியான விஷயம். ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர் களுக்கு நாம் கற்றுத் தருகிறோம். பிறகு அவர்கள் நமக்கு கற்றுத் தருகிறார்கள். புதிய தொழில் நுட்பங்களைப் பொருத்தவரை நம்மை விட வேகமாக அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அவர்களோடு போட்டி போடவே முடியாது.

வெளிப்படைத்தன்மை:


குழந்தைகளின் வெளிப்படைத்தன்மை தான் அவர்களை நல்லவர் களாக காட்டுகிறது. செய்த தவறுகளை ஒத்துக்கொள்ள அவர்கள் தயங்குவதில்லை. எனக்கு அது ரொம்பவே கஷ்டம், நிறையவே யோசிப்பேன். ஒரு உண்மையை அவ்வளவு சீக்கிரம் என் மனம் ஏற்றுக்கொள்வதில்லை. ‘இந்த சிகை அலங்காரம் உனக்கு நன்றாக இல்லை’ என்று யாராவது சொல்லிவிட்டால், மிகவும் வருத்தப்படுவேன். அதை மாற்றிக்கொள்ள முயற்சி செய்ய மாட்டேன். நாம் மாற வேண்டுமானால் முதலில் மனம் மாற வேண்டும். அது அவ்வளவு சீக்கிரம் நடக்காது. நான் என் குழந்தைகளிடம் இதை எல்லாம் பார்க்கிறேன். உண்மையில் அவர்களைப் போல் இருந்தால்தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை புரிந்து கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கையில் சமநிலை:


இது எப்போதும் அவசியம். இது ஒரு பயிற்சி. ஆன்ம நிலையில் நாம் அமைதியாக இருக்க நம்மை நாமே உட்படுத்திக்கொள்ள வேண்டிய பயிற்சி. எப்போதும் எந்த நிலையிலும் நம்மை நாம் சமநிலையில் வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். வாழ்க்கையின் ஏற்ற இறக்கம் எதுவும் நம்மை பாதிக்கக்கூடாது. ‘இந்த தேசமே நம்மை நேசிக்கிறது, அன்பு செலுத்துகிறது’ என்று நினைக்கும் போது ஒரு உற்சாகம், ‘பாசிட்டிவ் எனர்ஜி’ எனக்குள் உருவாகும். இதே நிலைமை வேறு மாதிரியாக இருக்குமானால் அப்போது அதை ஏற்றுக் கொண்டு சமநிலையில் மனதை வைத்துக்கொள்ள வேண்டும். உயர்ந்த நிலைக்கு வரும்போது ஆணவம், கர்வம் இதெல்லாம் தலை தூக்கும். நாம் அதற்கு இடமளிக்ககூடாது. அப்படி இருந்தால்தான் நாம் மதிக்கப்படுவோம்.

உழைப்பு:

நான் எப்போதும் உழைப்பின் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பவன். நம்முடைய உழைப்பு நல்ல பலனைத்தரும். அப்போது நாம் அனைவராலும் கவனிக்கப்படுவோம். உண்மையான உழைப்பிற்கு நிச்சயம் பலன் உண்டு. ‘போதும் ஷாருக், நீ அதிகம் உழைத்து விட்டாய், உனக்கு தேவையானது அனைத்தும் கிடைத்து விட்டது. ஓய்வெடுத்துக்கொள், இனி இவ்வளவு உழைக்க வேண்டிய அவசியமில்லை’ என்று பலர் என்னிடம் கூறுவதுண்டு. ஆனால் நான் அவர் களுக்கு சொல்லும் பதில், நான் உயிரோடு இருக்கும் வரை உழைத்தே ஆகவேண்டும். இல்லையென்றால் நான் நோயாளி ஆகிவிடுவேன். இது தான் உண்மை. உழைப்பு என்பது பணம், பெயர், புகழ் சம்பாதித்துக் கொடுக்கும் சாதனம் அல்ல. அதுமனித உடலுக்கு அவசியமான ஒன்று. உண்மையான உழைப்பின் பலன் எது தெரியுமா? ஆரோக்கியம் தான். நான் என் குழந்தைகளிடமும் உழைப்பின் உன்னதத்தை பற்றி சொல்லி இருக்கிறேன். நான் எத்தனை வயதானாலும் உழைத்துக் கொண்டிருப்பேன். அது எனக்கு பழகிவிட்டது.

Next Story