வித்யாபாலனின் ரேடியோ நண்பன்


வித்யாபாலனின் ரேடியோ நண்பன்
x
தினத்தந்தி 11 March 2018 6:53 AM GMT (Updated: 11 March 2018 6:53 AM GMT)

பிரபல நடிகை வித்யா பாலன் இந்தி திரை உலகில் தவிர்க்கமுடியாத நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார்.

பிரபல நடிகை வித்யா பாலன் இந்தி திரை உலகில் தவிர்க்கமுடியாத நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார். சென்சார் போர்டு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவமும், வித்தியாசமான கதைக்களமும் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘தும்ஹாரி சுலு’ யதார்த்தமான படம். எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது. கதாநாயகியை மையப்படுத்திய கதைக்களம்கொண்ட அந்த படத்தில் ரேடியோ ஜாக்கியாக அசத்தினார். நகைச்சுவை கதாபாத்திரத்திலும் கலக்கியிருக்கிறார்.

‘தும்ஹாரி சுலு’வில் வெளுத்து வாங்கியிருக்கிறீர்களே?

‘‘அது ஒரு காமெடி கதாபாத்திரம். இதுவரை சீரியசான கதாபாத்திரங்களில் நடித்த எனக்கு, இந்த நகைச்சுவை கதாபாத்திரம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நான் இயற்கையிலேயே நகைச்சுவை குணம் கொண்டவள். அதனால் என்னுடைய இயல்பான நடிப்பை அந்த படத்தில் வெளிப்படுத்த முடிந்தது’’

சீரியசான கதாபாத்திரங்களுக்கும், நகைச்சுவை கதாபாத்திரத்திற்கும் என்ன வித்தியாசம்?

‘‘நிறைய வித்தியாசம் இருக்கிறது. எதையும் மேலோட்டமான நடிப்பு என்று சொல்லிவிடக்கூடாது. முதலில் கதாபாத்திரத்திற்கேற்ற மாற்றத்தை நமக்குள் கொண்டு வர வேண்டும். உணர்வுபூர்வமான கதாபாத்திரங்கள் நமக்குள் ஆழமானதொரு அழுத்தத்தை உருவாக்கும். காட்சியில் நடித்து முடித்துவிட்டு வெளியே வந்தாலும், பல மணி நேரம் வரை அந்த அழுத்தம் நம்மை விட்டு அகலாது. அது வெறும் நடிப்புதான் என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொண்டு அதில் இருந்து வெளிவர சில மணி நேரமாகும். எனது குணாதிசயமே நகைச்சுவை கொண்டது என்பதால் அது என்னிடமிருந்து அதிக ஈடுபாட்டுடன் வெளிவருகிறது”

ரேடியோ ஜாக்கியாக நடித்திருக்கிறீர்கள். உண்மையிலே நீங்கள் ரேடியோ கேட்பீர்களா?

‘‘ரேடியோ கேட்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். அது நாம் எல்லோரும் ஆரம்ப காலத்தில் கேட்டுக்கொண்டிருந்த விஷயம் தானே..? இடையே பல ஊடகங்கள் வந்ததால் ரேடியோ ஓரம்கட்டப்பட்டது. அந்த காலத்தில் நேரம் பார்ப்பது, வானிலை அறிக்கையை தெரிந்து கொள்வது போன்ற பல விஷயங்களை ரேடியோதான் நமக்கு கொடுத்துக்கொண்டிருந்தது”

ரேடியோவில் எந்த நிகழ்ச்சிகளை விரும்பி கேட்பீர்கள்?

‘‘பாட்டு கேட்க பிடிக்கும். நான் வீட்டில் இருக்கும் நேரங்களில் ரேடியோ தான் எனக்குத் துணை. நல்ல பாடல்களை கேட்டால் சுகமாக தூக்கம் வரும். ரேடியோவை காதருகே வைத்துக்கொண்டு நமக்கு மட்டும் கேட்கும் ஓசையுடன் கேட்டுக்கொண்டிருக்கும் சுகமே அலாதி. மனதை உற்சாகப்படுத்திக் கொள்ளவும், அமைதிபடுத்திக்கொள்ளவும் ரேடியோ ஒரு நல்ல நண்பன்’’

பிரபல நடிகை மீனாகுமாரியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறீர்களாமே?

‘‘அது சம்பந்தமான மூன்று கதைகள் என்னிடம் வந்தது. மூன்றும் வெவ்வேறு மாதிரியாக இருக்கிறது. அவற்றில் எதை தேர்வு செய்வது என்று எனக்கு புரியவில்லை. ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி பேசும்போது கற்பனைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். உண்மைகள் மட்டுமே வெளிப்பட வேண்டும். அது தான் வாழ்க்கை வரலாற்றிற்கு கொடுக்கும் மரியாதையாக இருக்கும். அதுதொடர்பான பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது. மீனாகுமாரியாக நடிப்பது கவுரவமான விஷயம்’’

சென்சார் போர்டு உறுப்பினர் பதவி கிடைத்திருப்பது பற்றி..?

‘‘திடீரென்று ஒரு போன் வந்தது. உங்களை சென்சார் போர்டு உறுப்பினராக்க உத்தேசித்திருக்கிறோம், உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்டார்கள். நான் சிறிதும் யோசிக்கவில்லை, சரி என்று சொல்லி விட்டேன். அதில் பல மாற்றங்களை செய்ய நினைத்திருக்கிறேன். அதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பயன்படுத்திக்கொள்வேன்’’

சென்சார் போர்டின் பழைய வழிகாட்டும் நெறிமுறைகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று கூறப்படுகிறதே?

‘‘சினிமாட்டோகிராபி சட்டம் 1952-ல் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். அதை மத்திய ஒளிபரப்புத்துறைதான் செயல்படுத்த வேண்டும்’’

பிரமாண்ட திரைப்படங்கள் தற்போது வெற்றியடைய என்ன காரணம்?

‘‘பிரமாண்டம் என்பதே மக்களை தியேட்டருக்கு வரவழைக்கும் ஒரு யுக்தி தான். அது வெற்றியடைந்தால் படமும் வெற்றியடையும். ரசிகர்கள் இப்போது எல்லா விஷயத்திலும் தத்ரூபத்தை எதிர்பார்க்கிறார்கள்”

Next Story