நடிகர் சங்க தேர்தல் எப்போது?


நடிகர் சங்க தேர்தல் எப்போது?
x
தினத்தந்தி 12 March 2018 11:45 PM GMT (Updated: 12 March 2018 5:59 PM GMT)

நடிகர் சங்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவி காலம் முடிய இருப்பதால் தேர்தல் பணிகள் தொடங்கி இருக்கின்றன.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015-ல் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாசர் தலைவராகவும், விஷால் பொதுச்செயலாளராகவும் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், கார்த்தி பொருளாளராகவும் பொறுப்பு வகிக்கிறார்கள். 25 செயற்குழு உறுப்பினர்களும் உள்ளனர்.

இவர்கள் பதவி காலம் இன்னும் சில மாதங்களில் முடிய இருப்பதால் தேர்தல் பணிகள் தொடங்கி இருக்கின்றன. விஷால் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்து இருக்கிறார். இவரது அணியை எதிர்க்க ராதாரவி தலைமையில் போட்டி அணி தயாராகிறது. நடிகர்கள், நாடக நடிகர்கள் என்று சுமார் 3,500 ஓட்டுகள் உள்ளன. அவர்களிடம் ஆதரவு திரட்டும் பணியை இரண்டு அணியினரும் இப்போதே தொடங்கி விட்டனர்.

நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடிவதில் தாமதம் ஏற்படுவதால் தேர்தல் தள்ளிப்போகலாம் என்ற பேச்சும் இருக்கிறது. கட்டிடத்துக்கு தரைதளத்துக்கான பணிகள் முடிந்து ஓரிரு வாரத்தில் கான்கிரீட் கூரை போடப்பட உள்ளது. அதன்பிறகு 3 மாடிகள் எழுப்ப வேண்டும். கட்டிட வேலைகள் டிசம்பர் மாதத்தில்தான் முழுமையாக முடிவடையும் என்று தெரிகிறது.

நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில்தான் பதவி ஏற்பு விழாவை நடத்தி பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது பெரும்பான்மையான நிர்வாகிகளின் விருப்பமாக இருக்கிறது. எனவே கட்டிட வேலைகள் முடிந்த பிறகு தேர்தலை நடத்தலாமா? என்று ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story