சினிமா செய்திகள்

பட அதிபரிடம் நஷ்ட ஈடு கேட்கிறார், நடிகை பிரியாமணி + "||" + Actress priyamani asks for compensation

பட அதிபரிடம் நஷ்ட ஈடு கேட்கிறார், நடிகை பிரியாமணி

பட அதிபரிடம் நஷ்ட ஈடு கேட்கிறார், நடிகை பிரியாமணி
பட அதிபரிடம் நஷ்ட ஈடு கேட்டு நடிகை பிரியாமணி தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்து தமிழ் பட உலகில் பிரபலமானவர், பிரியாமணி. இந்த படத்துக்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. கண்களால் கைது செய், அது ஒரு கனாக்காலம், தோட்டா, மலைக்கோட்டை, ஆறுமுகம், ராவணன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தற்போது கன்னடத்தில் மூன்று படங்களிலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். கடந்த வருடம் தொழில் அதிபர் முஸ்தபா ராஜை காதல் திருமணம் செய்து கொண்டார்.

பிரியாமணி, பட அதிபரிடம் நஷ்ட ஈடு கேட்டு தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

தெலுங்கில் தயாராகி உள்ள ‘ஆங்குலிகா’ என்ற படத்தில் பிரியாமணி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். 5 வருடங்களுக்கு முன்னால் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. சில காட்சிகளில் நடித்ததும் பிரியாமணிக்கு தொடர்ந்து அந்த படத்தில் நடிக்க பிடிக்கவில்லை. இதனால் படத்தில் இருந்து விலகி விட்டார்.

இந்த படத்தில் கதாநாயகனாக தீபக் நடித்தார். இவர் அருந்ததி படத்தில் அனுஷ்கா ஜோடியாக நடித்தவர். பிரேம் ஆர்யன் டைரக்டு செய்தார். கோடி துமுலா, ராம்பாபு ஆகியோர் தயாரித்தனர். இதன் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்து டிரெய்லரை யுடியூப்பில் வெளியிட்டனர். அதில் பிரியாமணி நடித்த காட்சிகள் இருந்தன.

இதை பார்த்ததும் பிரியாமணிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் மீது தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். தனது புகார் மனுவில் ஆங்குலிகா படத்தில் நடிக்க மறுத்து 5 வருடங்களுக்கு முன்பே நான் வெளியேறி விட்டேன். ஆனால் டிரெய்லரில் விளம்பரத்துக்காக நான் அந்த படத்தில் நடித்து இருப்பது போன்று காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும்” என்று கூறியுள்ளார். இதுகுறித்து தெலுங்கு நடிகர் சங்கம் விசாரித்து வருகிறது.