கிராமப்புறங்களில் “150 பேர் பார்க்கும் சிறிய தியேட்டர்கள் அமைக்க வேண்டும்” ஆர்.கே.செல்வமணி


கிராமப்புறங்களில் “150 பேர் பார்க்கும் சிறிய தியேட்டர்கள் அமைக்க வேண்டும்” ஆர்.கே.செல்வமணி
x
தினத்தந்தி 17 March 2018 10:15 PM GMT (Updated: 17 March 2018 7:19 PM GMT)

கிராமப்புறங்களில் 150 பேர் பார்க்க கூடிய சிறிய திரையரங்குகளை அமைக்க வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி கூறினார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“சினிமா தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் பணி செய்கின்றனர். திரை துறையினர் வேலை நிறுத்தங்களால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் அரசு தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். சினிமா துறைக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். அதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி, நடிகர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்பட சினிமா துறை பிரமுகர்களை இடம்பெற செய்ய வேண்டும்.

அதிக தயாரிப்பாளர்கள் நஷ்டமடைகிறார்கள். படங்கள் லாபம் ஈட்டினாலும் அவர்களுக்கு உரிய பங்கு கிடைப்பது இல்லை. இவற்றை சீர்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் 2,500 தியேட்டர்கள் இருந்தன. அந்த எண்ணிக்கை குறைந்து உள்ளது. ரூ.1,000 இருந்தால்தான் சினிமா பார்க்க முடியும் என்ற நிலைமை உள்ளது.

மேல்தட்டு மக்களால் மட்டுமே தியேட்டர்களுக்கு சென்று படங்களை பார்க்க முடிகிறது. அதிக கட்டணத்தால் ஏழை மக்கள் படம் பார்ப்பது இல்லை. பாகுபலி போன்று மேல் தட்டு மக்களுக்கான படங்களையே தயாரிக்கவும் செய்கிறார்கள். இதனால் நமது கலாசாரத்தை பிரதிபலிக்கும் படங்களை எடுக்க யாரும் முன்வருவது இல்லை. இந்த குறைகளை போக்க வேண்டும்.

5 ஆயிரம் பேர் வசிக்கும் கிராமப்புறங்களில் 150 பேர் பார்க்க கூடிய சிறிய திரையரங்குகளை அமைக்க அரசு முன்வர வேண்டும். அங்கு ரூ.25, ரூ.35, ரூ.50 என்று கட்டணம் நிர்ணயிக்கலாம். இதன் மூலம் கிராம மக்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க முடியும்.”

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார். 

Next Story