மும்பையில், ரகசிய திருமணம் நடிகை ஸ்ரேயா காதலரை மணந்தார் தொடர்ந்து நடிக்கப் போவதாக பேட்டி


மும்பையில், ரகசிய திருமணம் நடிகை ஸ்ரேயா காதலரை மணந்தார் தொடர்ந்து நடிக்கப் போவதாக பேட்டி
x
தினத்தந்தி 17 March 2018 11:30 PM GMT (Updated: 17 March 2018 7:38 PM GMT)

மும்பையில், நடிகை ஸ்ரேயா ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

ஸ்ரேயா, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர். டெல்லியில், பட்டப்படிப்பை முடித்து விட்டு, ‘மாடலிங்’ செய்து வந்தார். அதன் மூலம் திரைப்பட உலகுக்கு வந்தார். ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அவர் அறிமுகமானார்.

தொடர்ந்து, ‘மழை,’ ‘திருவிளையாடல் ஆரம்பம்,’ ‘அழகிய தமிழ் மகன்,’ ‘தோரணை,’ ‘கந்தசாமி,’ ‘சிவாஜி’ உள்பட பல தமிழ் படங்களிலும், ஏராளமான தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து பிரபல கதாநாயகிகள் பட்டியலில் இணைந்தார்.

ஸ்ரேயாவுக்கு சமீபகாலமாக தென்னிந்திய பட வாய்ப்புகள் குறைந்தன. அதைத்தொடர்ந்து அவர் மும்பையில் குடியேறி, இந்தி படங்களில் நடிக்க முடிவு செய்தார். இந்தியில் தயாரான ‘திரிஷ்யம்’ படத்தில், அஜய் தேவ்கான் ஜோடியாக நடித்தார்.

இந்த நிலையில் அவருக்கும், ரஷியாவை சேர்ந்த ஆன்டிரே கோச்சேவ் என்ற இளைஞருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆன்டிரே கோச்சேவ், மிகப்பெரிய கோடீஸ்வரர். சிறந்த டென்னிஸ் வீரர். இவரும், ஸ்ரேயாவும் உதய்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.

இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். தனது திருமணம் மார்ச் மாதம் நடைபெறும் என்று ஸ்ரேயா ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி, ஸ்ரேயா-ஆன்டிரே கோச்சேவ் திருமணம் மும்பையில் ரகசியமாக நடந்தது.

திருமணத்துக்கு முதல்நாள், வட இந்திய முறைப்படி ஆட்டமும், கொண்டாட்டமும் அமர்க்களப்பட்டது. மறுநாள் காலை இந்து முறைப்படி திருமண சடங்குகள் நடந்தன. ஸ்ரேயா கழுத்தில், ஆன்டிரே கோச்சேவ் தாலி கட்டினார்.

இந்த திருமணத்தில், இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், அவருடைய மனைவி ஷபனா மற்றும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

ஸ்ரேயா ரகசிய திருமணம் செய்து கொண்ட தகவல் மும்பை சினிமா வட்டாரத்தில் நேற்று வேகமாக பரவியது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ரஷிய காதலருடன் தனக்கு திருமணம் நடந்ததை உறுதி செய்தார். தொடர்ந்து அவர் சினிமாவில் நடிக்கப்போவதாகவும் தெரிவித்தார். 

Next Story