சினிமா செய்திகள்

சினிமா கேள்வி பதில்!-குருவியார் + "||" + Cinema question answer - kuruviyar

சினிமா கேள்வி பதில்!-குருவியார்

சினிமா கேள்வி பதில்!-குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007.
குருவியாரே, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், அழகு தேவதை எமிஜாக்சன் ஆகிய இருவருக்கும் ஜோடி பொருத்தம் எப்படி? (ரஜினி கண்ணன், கோவை–8)

இருவருக்கும் இடையே பத்து பொருத்தங்களும் கச்சிதம் என்று சொல்கிற அளவுக்கு, ‘2.0’ படத்தில் அத்தனை பொருத்தங்களும் அம்சமாக அமைந்து இருக்கிறதாம்!


***

குருவியாரே, திருமணம் என்றாலே காஜல் அகர்வால் வெறுக்கிறாராமே... என்ன காரணம்? (பி.சரவணன், உடையாப்பட்டி)

அவர் நேரில் பார்த்த– கேட்ட சில அனுபவங்கள்தான் காரணம் என்கிறார், காஜல் அகர்வால்!

***

குருவியாரே, திரிஷாவின் நிறைவேறாத நீண்ட கால ஆசை என்ன? (எஸ்.சீனிவாசன், வேலூர்)

திரிஷாவுக்கு நிறைவேறாத நீண்ட கால ஆசைகள் இரண்டே இரண்டு இருக்கிறதாம். ஒன்று, ரஜினிகாந்த் ஜோடியாக நடிப்பது; மற்றொன்று, சஸ்பென்ஸ்! (வெளியில் சொல்ல விரும்பவில்லையாம்.)

***

லண்டன் அருங்காட்சியகத்தில் நம்ம சத்யராஜுக்கு மெழுகு சிலை வைத்திருப்பது உண்மையா? (ஜெ.துரைப்பாண்டியன், பேராவூரணி)

நீங்கள் கேள்விப்பட்டது போல், சத்யராஜும் கேள்விப்பட்டதாக சொல்கிறார். இந்த தகவலை அவர் உறுதி செய்யவில்லை!

***

எம்.ஜி.ஆர். மறைந்து 30 ஆண்டுகள் கடந்தும் அவரது படங்களின் தாக்கம் இன்றைய தலைமுறையினரையும் அசர வைக்கிற மாதிரி இருக்கிறதே..? உதாரணமாக, ‘அடிமைப்பெண்’ படம் 50-வது நாளை தாண்டி ஓடியிருக்கிறது... இதுபற்றி உங்கள் பதில் என்ன? (ப.இசக்கி பாண்டியன், சாலிகிராமம்)

அதுதான் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் ரகசியம்!

***

குருவியாரே, கமல்ஹாசன் கட்சி தொடங்கி விட்டார். அதேபோல் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது எப்போது? (ஆர்.அரவிந்த், மயிலாடுதுறை)

ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ள ரஜினிகாந்த், திரும்பி வந்ததும் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

***

பழைய கதாநாயகி சரோஜாதேவி இந்த வயதிலும் முதுமை தெரியாத அளவுக்கு இளமையுடன் காணப்படுகிறாரே...அதன் ரகசியம் என்ன? (சி.ரகுபதி, போளூர்)

அவர் கதாநாயகியாக நடித்தபோது எப்படி உணவில் கட்டுப்பாடாக இருந்தாரோ, அதேபோல் இப்போதும் உணவில் கட்டுப்பாடாக இருக்கிறார். காலையில் எழுந்ததும் யோகா மற்றும் எளிமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறாராம். இதுவே அவருடைய இளமை ரகசியம்!

***

குருவியாரே, நயன்தாரா தன் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொள்கிறாராமே... அது ஏன்? (கே.ஸ்ரீதர் ராஜன், பூந்தமல்லி)

கொசு தொல்லைதான் காரணமாம்...வேறு எந்த தொந்தரவும் இல்லையாம். இனிப்பு இருக்கிற இடம் தேடி எறும்புகள் வருவது போல், நயன்தாரா இருக்கும் இடம் தேடி வந்து, கொசுக்கள் இன்ப தொல்லை கொடுக்கிறதாம்!

***

‘கானா’ உலகநாதன் என்ன ஆனார், அவர் எங்கிருக்கிறார்? (வி.சுப்ரமணியம், பி.கொமாரபாளையம்)

‘கானா’ பாலா வந்தபின், ‘கானா’ உலகநாதன் காணாமல் போய்விட்டார்!

***

சிவாஜி-பிரபு-விக்ரம் பிரபு; முத்துராமன்-கார்த்திக்-கவுதம் ஆகிய மூன்று தலைமுறை நடிகர்களைப்போல் வேறு நடிகர்கள் யாராவது இருக்கிறார்களா? (டி.கே.தங்கவேல், அன்னதானப்பட்டி)

மூன்று தலைமுறை நடிகர்கள் சிவாஜி, முத்துராமன் ஆகிய 2 பேர் குடும்பங்களில் மட்டுமே உள்ளனர். வேறு எங்கும், யாரும் இல்லை!

***

குருவியாரே, நடிகர் சங்க துணைத்தலைவர் பொன் வண்ணன்-சரண்யா தம்பதிக்கு எத்தனை மகன்-மகள்? (ஜி.கோபால், விளாத்திகுளம்)

பொன் வண்ணன்-சரண்யா தம்பதிக்கு மகன் இல்லை. 2 மகள்கள் மட்டும் இருக் கிறார்கள்!

***

கே.பாக்யராஜ், ரா.பார்த்திபன், பாண்டியராஜன் ஆகிய மூன்று பேரும் இணைந்து நடித்தால், யாருடைய நடிப்பு ‘டாப்’பாக இருக்கும்? (பி.வீ. ஐயப்பன், திருத்துறைப்பூண்டி)

சிஷ்யர்கள் இருவரும் ( இதுவரை) குருவை மிஞ்சியதில்லை!

***

ஜெயம் ரவி நடித்துள்ள ‘டிக் டிக் டிக் ’ படம், என்ன கதை? (ஏ.அன்புக்கரசன், லால்குடி)

அது ஒரு விண்வெளி பயண கதை. அந்த படத்தில், ஜெயம் ரவி விண்வெளி பயண வீரராக வருகிறார்!

***

குருவியாரே, நடிகைகளின் வாழ்க்கை சந்தோஷமாக இல்லை என்று தமன்னா கூறியிருக்கிறாரே...? (டி.ரமணன், கடலூர்)

அவர் உண்மையை பேசியிருக்கிறார். வெளியுலகுக்கு பகட்டாக தெரியும் பல நடிகைகளின் வாழ்க்கை உள்ளுக்குள் சோக கீதம் பாடுகிறது. அதை பலர் வெளியே சொல்வதில்லை. தமன்னா சொல்லியிருக்கிறார்!

***

‘சுவாதி கொலை வழக்கு’ படம் எப்போதோ தயாராகி விட்டது. இருப்பினும் என்ன காரணத்தால் அந்த படம் திரைக்கு வரவில்லை? (பி.ஜெகன், ஈரோடு)

அந்த படம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருக்கிறது!

***

குருவியாரே, டைரக்டர் ‘கொம்பன்’ முத்தையாவின் சொந்த ஊர் எது, அவர் எந்த டைரக்டரிடம் உதவி டைரக்டராக இருந்தார்? (எம்.லோகநாதன், அரியலூர்)

‘கொம்பன்’ முத்தையாவின் சொந்த ஊர், ஸ்ரீவில்லிபுத்தூர். அவர், டைரக்டர் பூபதி பாண்டியனிடம் உதவி டைரக்டராக இருந்தார்!

***

சீனுராமசாமி டைரக்‌ஷனில் உதயநிதி நடிக்கும் படம் என்ன ஆனது? படப்பிடிப்பு தொடங்கி விட்டதா? அதில் உதயநிதிக்கு ஜோடி யார்? (என்.செந்தாமரை பாண்டி, ஸ்ரீரங்கம்)

படப்பிடிப்பு மதுரையில் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. உதயநிதி ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார்!

***

குருவியாரே, ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு தங்கையாகவும், மகளாகவும் நடித்த லட்சுமி, அவருக்கு ஜோடியாக நடித்து இருக்கிறாரா? (ஆர்.கே.பீட்டர் செல்வகுமார், சென்னை-18)

‘தியாகம்’ என்ற படத்தில் சிவாஜியும், லட்சுமியும் ஜோடியாக நடித்து இருந்தார்கள்!

***

சரத்குமார் நடித்த ‘நட்புக்காக’ படத்தின் டைரக்டர் யார்? (கே.அருள்செல்வன், பொங்கலூர்)

கே.எஸ்.ரவிகுமார்!

***