சினிமா செய்திகள்

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி + "||" + Do not do the operation for the beauty -Rani Mukherjee

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
அழகழகான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்தவர், இந்தி நட்சத்திரம் ராணி முகர்ஜி.
திருமண வாழ்க்கை இவரது திரைப்பயணத்தில் சிறிது இடைவெளியை ஏற்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் வெள்ளித்திரைக்குத் திரும்பியிருக்கிறார். இனி வலுவான வேடங்களில் நடிக்க விரும்புவதாகக் கூறுகிறார். அவருடனான உரையாடல்:


திரையுலகில் இருந்து நீங்கள் விலகியிருந்த காலத்திலும், சினி மாவை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தீர்கள் அல்லவா?

எனது கணவர் ஆதித்ய சோப்ரா சினிமா தயாரிப்பாளர் என்பதால், நான் திரையுலகில் அன்றாடம் நடக்கும் மாற்றங் களைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். ஷூட்டிங் விளக்கு வெளிச்சத்தில் இருந்து நான் விலகியிருந்தாலும் திரையுலகில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளத் தவறவில்லை. இப்போது, புதியதிறமைசாலிகளுடன் இணைந்து செயல்பட நான் ஆவலாக இருக்கிறேன்.

இனி எந்த மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?

வங்காளப் பெண்ணான நான் தைரியமானவள். சிறுவயதில் இருந்தே, ‘தாய்’ என்றும், ‘லட்சுமி’ என்றும், ‘துர்கா’ என்றும் சொல்லி வளர்க்கப்படுபவர்கள் நாங்கள். அப்படி ஊட்டப்படும் தைரியம், எங்களுக்கு தனிப் பெருமிதம் தரும். அதனால்தான், வலுவான பெண் கதாபாத்திரங்களைக் கொண்ட கதைகள் என்னை ஈர்க்கின்றன. பலவீனமான வேடங்களில் நடிப்பது என்னைப் பொறுத்தவரை இயற்கையானதல்ல.

ஆனால் திருமணத்திற்கு பின்பு நீங்கள் நினைப்பதுபோல் வாய்ப்பு கிடைக்குமா?

நிச்சயமாக கிடைக்கும். திருமணமாகி குழந்தை பெற்ற நடிகைகள் பற்றிய அடிப்படையான கருத்து தற்போது மாறியிருப்பதாக நினைக்கிறேன். இந்த விஷயத்தில் மேற்கத்திய நாடுகளில் திருமணமானவர் என்றும் திருமணமாகாதவர் என்றும் எந்தப் பாகு பாடும் இல்லை. அங்கே நடிகரோ, நடிகையோ தாங்கள் விரும்பிய விதத்தில் வாழ்கிறார்கள், குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள், நான்கு முறைகூட திருமணம் செய்து கொள்கிறார்கள் (சிரிக்கிறார்). மக்களும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். அங்கே நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்ப்பதில்லை, திரையில் அவர்கள் வெளிப்படுத்தும் நடிப்பைத்தான் பார்க்கிறார்கள்.

இங்கும் திருமணமான நடிகைகளை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கு தற்போது தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தயங்குவதில்லை என்று கூறப்படுகிறதே...?

இந்தக் கருத்தை நான் அப்படியே ஒப்புக்கொள்ள மாட்டேன். ஆனால் நமது திரையுலகம் மாறிவருகிறது. 1950-ம் ஆண்டுகளில் இருந்து நடிகைகள் முக்கியப் பாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். நூதன், மீனாகுமாரி போன்ற நடிகைகள் அப்படிச் சில அருமையான படங்களில் நடித்திருக்கிறார்கள். அந்தக் கதாநாயகி களுடன் அறிமுகமாகி, பின்னர் பெரிய நட்சத்திரமான நடிகர்களும் இருக்கிறார்கள். தரம்ஜி (தர்மேந்திரா), அமித் அங்கிள் (அமிதாப்பச்சன்) ஆகியோர் முதன்முதலில் ஜெயா ஆன்ட்டியுடன் (ஜெயாபச்சன்) இணைந்து நடித்தபோது, ஏற்கனவே அவர் பெரிய நட்சத்திரம். ஆக, இதெல்லாம் நீண்டகாலமாக நடந்துவருகிறது. இந்நிலையில், நாங்கள்தான் திடீரென்று இப்போது இதுபோல நடிக்கிறோம் என்று எப்படிக் கூறமுடியும்? தற்போது சினிமாவில் பல வித்தியாசமான விஷயங்கள் அரங்கேறலாம். ஆனால் முக்கியமான, வலுவான கதாபாத்திரங்களில் பெண்கள் நடிப்பது ஆரம்பம் முதலே நடந்துகொண்டேதான் இருக்கிறது.

நீங்கள் வித்தியாசமான வேடங்களை ஏற்கும் நிலை ஏற்பட்டதற்கு உங்கள் வயது ஒரு காரணமா?

இல்லவே இல்லை. நாம் எவ்வளவு திறமையாக இருக்கிறோம். அந்த கதாபாத்திரத்திற்கு நாம் எவ்வாறு பொருந்துகிறோம் என்பதை அடிப்படையாக வைத்துதான் நமக்கு அந்த படத்தில் நடிக்க வாய்ப்பளிக்கிறார்கள். குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு நாம் பொருத்தமாக இருக்கிறோமா என்பதுதான் முக்கியம். அமித் அங்கிளை பாருங்கள், அவர் ‘பா’ படத்தில் ஒரு சிறுவனாக நடித்தார். அதைவைத்து பார்க்கும்போது ஒருவரின் உண்மையான வயது முக்கியமில்லை, அவரால் தான் ஏற்கும் வேடத்தில் சிறப்பாக நடிக்க முடிகிறதா என்பதுதான் முக்கியம்.

என்னதான் இருந்தாலும், திரையுலகில் அழகுக்குக் கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் மாறவில்லைதானே?

நான் என் வாழ்க்கையைப் பார்க்கும் விதம் வேறுமாதிரியானது. எனது சிறுவயதிலேயே, என் தந்தை இதயப் பிரச்சினை களால் கஷ்டப்படுவதைப் பார்த்திருக்கிறேன். எனவே உடல் ஆரோக்கியம் குறித்த அக்கறை அப்போதே எனக்கு வந்துவிட்டது. நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் தீவிரமான உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற ஆரம்பித்தார். அது எனது மனதிலும் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.

நான் சினிமாவில் இருந்திருக்காவிட்டாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத்தான் பின்பற்றி இருப்பேன். நம் முடைய தோற்றத்தைவிட நம் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். திரையுலகில் அழகுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது என்பது உண்மைதான். ஆனால் அதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி என்றெல்லாம் போகக்கூடாது. நாம் உள்ளுக்குள்ளாக நல்லவிதமாக உணர்ந்தாலே ஆரோக்கியம்தான். நாம் நம்மையே நேசித்தால் அது நம் முகத்தில் வெளிப்படும்.

உணர்ந்து சொல்கிறார், ராணி முகர்ஜி.