சினிமா செய்திகள்

ரஜினிகாந்தின் ‘காலா’ படம் மீண்டும் தள்ளிவைப்பு? + "||" + Rajinikanth Kaala film postponed again

ரஜினிகாந்தின் ‘காலா’ படம் மீண்டும் தள்ளிவைப்பு?

ரஜினிகாந்தின் ‘காலா’ படம் மீண்டும் தள்ளிவைப்பு?
ரஜினிகாந்தின் ‘காலா’ படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி திரைக்கு வரும் என்று படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்து இருந்தார். பட அதிபர்கள் ஸ்டிரைக் காரணமாக மீண்டும் தள்ளிவைத்துள்ளனர்.
ரஜினிகாந்தின் ‘காலா’ படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி திரைக்கு வரும் என்று படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்து இருந்தார். ஏற்கனவே அதே தேதியில் ரஜினியின் இன்னொரு படமான ‘2.0’ படத்தை வெளியிடத்தான் முதலில் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் அதை தள்ளிவைத்து விட்டு காலாவை கொண்டு வருவதாக கூறினார்கள்.


ஆனால் பட அதிபர்கள் ஸ்டிரைக்கால் திட்டமிட்டபடி காலா வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தியேட்டர்களில் படங்களை திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கண்டித்து கடந்த 1-ந் தேதியில் இருந்து புதிய படங்களை வெளியிடுவதை பட அதிபர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். சினிமா படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டார்கள்.

தியேட்டர்களுக்கு கூட்டத்தினர் வருகை குறைந்து சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வந்தன. தற்போது சென்னை தவிர தமிழகம் முழுவதும் உள்ள திரையங்குகளை கேளிக்கை வரியை ரத்து செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக கடந்த 16-ந் தேதி முதல் மூடி வைத்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சங்கம் தடையில்லா சான்று அளிக்க மறுப்பதால் புதிய படங்களை தணிக்கை செய்வதையும் தணிக்கை குழுவினர் நிறுத்திவிட்டனர். ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.

அடுத்த மாதம் 15-ந் தேதிக்கு மேல் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு வேலை நிறுத்தம் கைவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு படங்களை வெளியிடுவது ஒழுங்குபடுத்தப்பட்டு இந்த மாதம் நிறுத்தப்பட்ட படங்களை வரிசைப்படி திரைக்கு கொண்டு வருவோம் என்று தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் அறிவித்து உள்ளார்.

ரஜினிகாந்தின் காலா படத்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் தடையில்லா சான்று பெறாததால் அந்த படத்தை தணிக்கை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. வேலை நிறுத்தம் முடிந்த பிறகே இந்த படத்தை தணிக்கை செய்ய முடியும்.

அடுத்த மாதம் காலாவை வெளியிட அனுமதி கிடைக்காது என்றும், மே மாதத்துக்கு அந்த படம் தள்ளிப்போகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. வேலை நிறுத்தம் முடிந்ததும் காலா படம் திரைக்கு வரும் புதிய தேதி அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.