தடையை மீறி 4 படப்பிடிப்புகளை நடத்த அனுமதித்தது ஏன்? தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்


தடையை மீறி 4 படப்பிடிப்புகளை நடத்த அனுமதித்தது ஏன்? தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்
x
தினத்தந்தி 20 March 2018 10:15 PM GMT (Updated: 20 March 2018 7:34 PM GMT)

தடையை மீறி 4 படப்பிடிப்புகளை நடத்த அனுமதித்தது ஏன் என தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

தியேட்டர்களில் படங்களை திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கண்டித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கடந்த 1-ந் தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 16-ந் தேதியில் இருந்து சினிமா படப்பிடிப்புகளையும் நிறுத்தி விட்டனர்.

வருகிற 23-ந் தேதி முதல் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நடைபெறும் படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் என்று அறிவித்து உள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் நடந்து வந்த 30-க்கும் மேற்பட்ட சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. நடிகர்-நடிகைகள் ஊர் திரும்பி விட்டார்கள்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் உள்பட 4 படங்களின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்ததாக கூறப்பட்டது. இதற்கு சில தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. 4 படங்களுக்கு படப்பிடிப்பை நடத்த அனுமதி வழங்கியது ஏன் என்று விளக்கம் அளித்து தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் துரைராஜ் கூறியதாவது:-

“சென்னையில் நடந்த சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் 16-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டு விட்டன. ஆனாலும் அரங்குகள் அமைத்து ஏற்கனவே படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த சில படங்களின் படப்பிடிப்புகளை கூடுதலாக ஓரிரு நாட்கள் நடத்த அனுமதி கேட்டால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி 4 படங்களின் படப்பிடிப்பை தொடர அனுமதி கேட்டு சங்கத்தில் தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தனர். அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. சென்னையில் நடந்த படப்பிடிப்புக்கு வெளிமாநில ஸ்டண்ட் நடிகர்களை அழைத்து வந்து இருந்தனர். படப்பிடிப்பு நின்றால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் என்று தெரியவந்தது.

இதுபோன்ற பிரச்சினையில் மேலும் 3 படங்கள் இருந்தது தெரியவந்தது. எனவே அந்த 4 படங்களின் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையக்கூடாது என்பதற்காக படப்பிடிப்புகளை ஓரிரு நாட்கள் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.

Next Story