தமிழ் சினிமா ஸ்டிரைக்கால் தெலுங்கு, மலையாள படங்கள் முடங்கின


தமிழ் சினிமா ஸ்டிரைக்கால் தெலுங்கு, மலையாள படங்கள் முடங்கின
x
தினத்தந்தி 21 March 2018 11:15 PM GMT (Updated: 21 March 2018 10:01 PM GMT)

தமிழ் சினிமா ஸ்டிரைக் காரணமாக தெலுங்கு, மலையாள படங்கள் முடங்கியது.

கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கண்டித்து பட அதிபர்கள் கடந்த 1-ந் தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டு வருவதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சினிமா படப்பிடிப்புகளையும் நிறுத்தி விட்டார்கள். தியேட்டர் அதிபர்களும் 16-ந் தேதி முதல் கேளிக்கை வரியை ரத்து செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக திரையரங்குகளை மூடிவிட்டனர்.

இதனால் இந்த மாதம் திரைக்கு வர இருந்த 20-க்கும் மேற்பட்ட படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. தமிழ் சினிமா ஸ்டிரைக்கால் தெலுங்கு, மலையாள பட உலகினருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் அந்த பட உலகினரும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டார்கள். தமிழ் திரையுலகில் மட்டும் போராட்டம் தொடர்கிறது.

சமீப காலமாக தெலுங்கு, மலையாள படங்களுக்கு தமிழ்நாட்டில் நல்ல மார்க்கெட் உள்ளது. பாகுபலி படம் பெரிய வசூல் பார்த்தது. பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா, பிரபாஸ், ராம்சரண், ராணா, அனுஷ்கா உள்ளிட்ட பலரது தெலுங்கு படங்கள் ஆந்திராவில் வெளியாகும் அதே நாளில் தமிழ்நாட்டிலும் திரையிடப்படுகிறது. மம்முட்டி, மோகன்லால் மற்றும் புதுமுக நடிகர்களின் மலையாள படங்களையும் அதிக விலை கொடுத்து தமிழ் உரிமை வாங்கி இங்கு திரையிடுகிறார்கள்.

தமிழ் பட உலகினர் ஸ்டிரைக்கால் தெலுங்கு, மலையாள படங்களை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டுவராமல் தள்ளிவைத்து விட்டனர். சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாரான மகாநதி(தமிழில் நடிகையர் திலகம்) படத்தை வருகிற 29-ந் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிட்டனர். ஸ்டிரைக்கால் அந்த படம் மே மாதத்துக்கு தள்ளிப்போனது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவான ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ (தெலுங்கில் நா பேரு சூர்யா) உள்ளிட்ட மேலும் பல தெலுங்கு படங்களும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. இதுபோல் மலையாள பட உலகினரும் தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய தயங்குகிறார்கள்.

Next Story