இளம் நாயகர்களுக்கு சவால்விடும் மோகன்லால்


இளம் நாயகர்களுக்கு சவால்விடும் மோகன்லால்
x
தினத்தந்தி 23 March 2018 11:00 PM GMT (Updated: 23 March 2018 4:30 AM GMT)

இன்னும் இரண்டு ஆண்டுகளில் 60 வயதை தொட்டுவிடுவார்.. ஆனால் இப்போதும் பார்ப்பதற்கு 30 வயது வாலிபனைப் போல தோற்றம் அளிக்கிறார், மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் மோகன்லால்.

யது தான் அதிகமாகி இருக்கிறதே தவிர, இப்போதும் இளம் கதாநாயகர்களுக்கே சவால் விடும் வகையிலான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்துதான் நடித்து வருகிறார் மோகன்லால். அதே போல் இளம் கதா நாயகர்களுக்கு இணையாக அல்லது அவர்களை மிஞ்சும் வகையில் அதிகப் படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இவரது கைவசம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாக உள்ள ‘நீராளி’, ‘ஓடியன்’, ‘காயம் குளம் கொச்சுண்ணி’, ‘லூசிபர்’, ‘ரண்டமூலம் பார்ட்-1 மற்றும் பார்ட்-2’ என 2020 வரை அவரது கால்ஷீட் டைரி நிரம்பி இருக்கிறது.

இவரது நடிப்பில் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணியில் இருக்கும் ‘நீராளி’ திரைப்படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தை பாலிவுட் இயக்குனரான அஜோய் வர்மா இயக்குகிறார். இந்தப் படத்தில் பார்வதி நாயர், நதியா ஆகியோர் கதாநாயகியாக நடிக்கிறார்கள்.

இதே போல் நிவின் பாலியுடன் நடித்து வரும் ‘காயம்குளம் கொச்சுண்ணி’ படத்தில் மோகன்லால் வரும் காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. இந்தப் படத்தில் கேரளாவில் முதன் முதலாக ராபின்ஹூட் பாணியில் கொள்ளையில் ஈடுபட்ட இதிக்கரா பக்கி என்பவரது கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார். இந்தக் கதாபாத்திரத்திற்கான தோற்றமும், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. மிகவும் வித்தியாசமான அந்த தோற்றம், அனை வரையும் எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.

மேற்சொன்ன இரண்டு படங்களிலும் தன்னுடைய காட்சிகளை முடித்துக் கொடுத்து விட்ட மோகன்லால், தற்போது ‘ஓடியன்’ திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தில் அவர் இளமையான மற்றும் முதுமையான தோற்றங்களில் நடித்து வருகிறார். முதல் கட்ட படப் பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது மோகன்லால் இளமையான தோற்றத்தில் வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனது உடல் எடையில் 18 கிலோவை குறைத்திருக்கும் மோகன்லால், கடந்த ஜனவரி மாதம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். உடற்பயிற்சி செய்வதுபோல் அமைந்த புகைப்படத்தில் மகன் பிரணவுடன் அவர் இருக்கும் காட்சி அது. அந்தக் காட்சியைப் பார்த்த அனைவரும், அப்பாவும் மகனுமா? அல்லது அண்ணனும் தம்பியுமா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு மோகன்லாலின் உருவம் இளமைத் தோற்றத்துடன் இருந்தது.

இதைத் தொடர்ந்து மோகன்லால் இளமைத் தோற்றத்தில் நடித்தும் வரும் ‘ஓடியன்’ பட காட்சிகளின் புகைப்படங்களும் ஒன்றிரண்டு அவ்வப்போது வெளியாகி வருகிறது.

இந்தப் படத்தில் மோகன்லால், பிளாக் மேஜிசியனாக நடித்து வருகிறார். இவருடன் மஞ்சு வாரியார், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இதில் விசேஷம் என்னவென்றால், மோகன்லாலும், பிரகாஷ்ராஜும் இணைந்து நடித்த ‘இருவர்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்திற்குப் பிறகு, இந்தப் படத்தில் தான்.. அதாவது சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு, மோகன்லாலும், பிரகாஷ்ராஜும் இணைந்து நடிக்கிறார்கள். இதுவும் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. இந்தப்படத்தை அறிமுக இயக்குனரான வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு நிறைய விளம்பரப் படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து மோகன்லால், ‘லூசிபர்’ என்ற படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன விசேஷம் என்றால், இந்தப் படத்தை இயக்குபவர், மலையாள சினிமா உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் பிருத்விராஜ். இந்தப் படத்திலும் ஒரு வித்தியாசமான தோற்றத்தில், வித்தியாசமான கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் மோகன்லால்.

‘லூசிபர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து மலையாள சினிமா உலகிலேயே, ஏன்.. இந்திய சினிமா உலகிலேயே அதிகப் பொருட்செலவில் எடுக்கப்பட உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார் மோகன்லால். ‘ரண்டமூலம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் மகாபாரதம் என்ற இதிகாச கதாபாத்திரங்களைக் கொண்ட கதையாகும். இந்தப் படத்தில் பீமன் வேடத்தில் மோகன்லால் நடிப்பதாக கூறப் படுகிறது. இந்தப் படத்தை இயக்குபவர், தற்போது ‘ஓடியன்’ படத்தை இயக்கி வரும் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் தான். ரூ.1000 கோடி செலவில் தயாரிக்கப்பட உள்ள ‘ரண்டமூலம்’ திரைப்படம் ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்திருக் கிறார்கள்.

‘என்னால் நடிக்க முடிந்தவரை, நடித்துக்கொண்டே இருப்பேன். ஏனென்றால் எனக்கு இதைத் தவிர வேறு எதுவும் தெரியாது’ என்று ஒரு முறை மோகன்லால் கூறியிருந்தார். அந்த நடிப்பு பசிதான், மோகன்லாலை இந்த உயர்ந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. அத்துடன் இளம் கதாநாயகர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், இல்லை.. இல்லை.. அவர்களுக்கு சவால்விடும் வகையில் சுறுசுறுப்பாக இயங்கச் செய்கிறது.

வெளிவராத முதல்படம்

மோகன்லால் அறிமுகமானப் படம் 1980-ம் ஆண்டு வெளியான ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ என்பதாகத் தான், அனைவரும் அறிந்து வைத்திருப்பார்கள். ஆனால் 1978-ம் ஆண்டிலேயே ‘திறநோட்டம்’ என்ற படத்தில் நடித்தார் மோகன்லால். குட்டப்பன் என்ற பெயரில், மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கவனிக்கும் பணியாள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் இயக்குனர் அசோக்குமார், தயாரிப்பாளர் சசீந்திரன், உதவி இயக்குனர் பிரியதர்ஷன் உள்ளிட்ட அனைவருமே மோகன்லாலின் நண்பர்கள். மலையாள சினிமாவின் முக்கிய இயக்குனரான பிரியதர்ஷன் பணிபுரிந்த முதல் படம் இதுதான். ஆனால் இந்தப்படம் சென்சார் போர்டு பிரச்சினை காரணமாக அந்த நேரத்தில் வெளிவரவில்லை. சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, 2005-ம் ஆண்டு ‘திறநோட்டம்’ படம் வெளியானது. அதுவும் கொல்லம் பகுதியில் உள்ள ஒரே ஒரு தியேட்டரில் மட்டும். இந்தப் படம் வெளியானபோது, மோகன்லால் மலையாள சினிமாத் துறையில் முன்னணி நடிகராக மாறியிருந்தார்.

Next Story