சினிமா செய்திகள்

ஹேமமாலினியின் வெற்றிகரமான வாழ்க்கைத் தத்துவம் + "||" + Hema Malini's Successful career philosophy

ஹேமமாலினியின் வெற்றிகரமான வாழ்க்கைத் தத்துவம்

ஹேமமாலினியின் வெற்றிகரமான வாழ்க்கைத் தத்துவம்
“வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறேன். கடந்த காலங்களில் நிறையவே விட்டுக்கொடுத்திருக்கிறேன்.
“வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறேன். கடந்த காலங்களில் நிறையவே விட்டுக்கொடுத்திருக்கிறேன். அதன் பலனாக நிறைய விஷயங்களை அடைந்திருக்கவும் செய்கிறேன். வாழ்க்கையில் நாம் பலவற்றை அடைய விரும்புகிறோம். அதற்காக சிலவற்றை விட்டுக்கொடுக்கவும் வேண்டியதிருக்கிறது. இது எல்லோருக்கும் பொதுவானது” என்று கூறும் ஹேமமாலினி, தனது மலரும் நினைவுகளை பங்கிடுகிறார்.


“சிறுவயதில் என் அறை ஜன்னலிருந்து எட்டிப் பார்ப்பேன். வெளியே சிறுவர், சிறுமிகள் கூச்சல் போட்டு ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து விளையாட வேண்டும் என்று ஆசையாக இருக்கும். ஆனால் முடியாது. நான் நடனப்பயிற்சி செய்ய வேண்டியிருக்கும். கடமை என்னை வீட்டுக்குள் கட்டிப் போட்டுவிடும். இன்று நான் பிரபலமான நாட்டியக் கலைஞர். இதற்காக நான் விட்டுக்கொடுத்த விஷயங்கள் பல. விட்டுக்கொடுத்தவர் கெட்டுப்போவதில்லை என்று இதைத் தான் சொல்லுவார்கள் போலும். இதை என் அம்மா அடிக்கடி சொல்லிக் காட்டுவார். ஒரு பெரிய விஷயத்தை அடைய வேண்டுமானால் சில சின்ன விஷயங்களை விட்டுக்கொடுக்க தயாராக வேண்டும்.

சினிமாவில் நடிக்கும்போதும் அப்படித்தான். மற்ற பெண்களைப் போல ஊர் சுற்ற வேண்டும், தோழிகளோடு வெளியில் செல்ல வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுவேன், முடியாது. முழுநாளும் படப்பிடிப்பு. பிறகு வீடு. இதுதான் என் உலகம். உண்மையில் நடிகையானதால் எனக்கு பிடித்த பல விஷயங்களை இழந்திருக்கிறேன். ஆனால் அந்த இழப்புக்கு கிடைத்த பலன் மிகப் பெரியது.

சில சமயம் உழைப்பதற்காக மட்டும்தான் நாம் பிறந்திருக்கிறோமா? இந்த உலகத்தில் வேறு எதுவும் எனக்கு கிடைக்காதா? என்று ஏங்கி இருக்கிறேன். உண்மையில் பெயரும், புகழும் ஒரு சிறைச்சாலை. தங்கச் சிறை. பரோலில் ஒருநாள் கூட வெளி வர முடியாத சிறை. உள்ளே போய்விட்டால் அவ்வளவு தான், திரும்ப முடியாது. மற்ற பெண்களைப் போல திருமணம், குழந்தைகள், குடும்பம் என்று வாழ நினைத்தேன். அந்த ஆசை நிறைவேற சினிமாவை விடவேண்டியிருந்தது. விட்டுவிட்டேன். அதன் பலனாக எனக்கு ஒரு நல்ல குடும்பம் கிடைத்தது. குடும்பத்திற்காக என் ஆசை, கனவு, புகழ் எல்லாம் தியாகம் செய்யப்பட்டது.

குழந்தைகளுக்காக, குடும்பத்திற்காக பல விஷயங்களை விட்டுக்கொடுத்தேன். கனவுகளை நிஜவாழ்வில் உருவாக்குவது மிகவும் கஷ்டம். அதுவும் திருமணத்திற்கு பிறகு நம் கடமைகள், பொறுப்புகள் அதிகமாகும். நமக்கென்று உள்ள பல விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டிவரும். அப்போது மனவருத்தப்படக்கூடாது. அதிலும் பெண்கள்தான் நிறையவிட்டுக்கொடுக்க வேண்டியதிருக்கும். வாழ்க்கையின் உண்மையான விஷயங்களை தக்கவைத்துக்கொள்ள நாம் நிறைய முயற்சி எடுக்க வேண்டியுள்ளது.

ஒவ்வொரு மகிழ்ச்சிக்கும் ஒரு விலை இருக்கிறது. எந்த மகிழ்ச்சியும் தானே வந்து விடுவதில்லை. உழைப்பு, தியாகம், வலி, விட்டுக்கொடுத்தல் என்று பல விஷயங்களை அதற்காக செய்யவேண்டும். திருமண வாழ்க்கைக்காக சினிமாவை விட்டுக்கொடுத்தேன். குழந்தைகளுக்காக என் முழு நேரத்தையும் விட்டுக்கொடுத்தேன். ஒரு கட்டத்தில் இவ்வளவு தான் வாழ்க்கையா? அல்லது இதற்கும் மேல் ஏதாவது இருக்கிறதா என்று யோசித்தேன். என் அம்மா எனக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இன்றைய என்னுடைய உயர்வுக்கு காரணம் அம்மாதான். நானும் அப்படித்தான். இருந்தாலும் மனதில் ஏதோ ஒரு உறுத்தல். எனக்கென்று சில தேவைகள் உள்ளன. அது நிறைவேறினால் தான் நான் முழுமை பெற முடியும் என்றது என் உள்ளுணர்வு.

எனக்குள் வேறு ஒரு ஹேமமாலினி இருப்பதை உணர்ந்தேன். அவரை முழுமைப்படுத்த சில விஷயங்களைத் தொடர்ந்தேன். நாட்டியம், யோகா, உடற்பயிற்சி, தியானம் என்று சில முக்கிய விஷயங்களுக்கு நேரம் ஒதுக்கினேன். வாழ்க்கையில் ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. அதுதான் சரியானது என்பது புரிந்தது. புதிய நம்பிக்கை துளிர்த்தது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருவேறு மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பது உண்மை தான். ஒவ்வொருவரும் அந்த இரண்டு மனிதர்களையும் சமமாக பார்க்கவேண்டும். இரண்டும் ஒன்றிணைந்தால்தான் எல்லாம் முழுமைபெறும். வீடு, குடும்பம், சமூகம், தொழில் இவையெல்லாவற்றையும் திறமையோடு நிர்வகிக்கும் ஒருவர் தனக்குள் இருக்கும் வேறொரு பாதியையும் மதிக்க வேண்டும்.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள் உள்ளது. அவைகள் நிறைவேறும் பட்சத்தில் தான் அவர்கள் முழுமை அடைகிறார்கள். இரண்டு பகுதிகள் இருந்தால் மட்டுமே பேலன்ஸ் செய்ய முடியும். அதை மனதில் வைத்துக்கொண்டு அவரவர் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் நேரம் ஒதுக்க வேண்டும்.

பெண்கள் பலர் குடும்பத்திற்காக தங்களையே அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். நல்ல விஷயம் தான். ஆனால் அவர்களையும் சரியாக பராமரித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆன்மா நிறைவு பெறும். வாழ்க்கையும் முழுமையடையும். நமது இலக்கு உறுதியாக இருந்தால் தடுமாற்றம் இருக்காது. இலக்கை அடைய எதை எதைவிட்டுக்கொடுக்க வேண்டும் என்ற தெளிவு வரும். அப்படி ஒரு பக்குவம் வந்துவிட்டால் வாழ்க்கை எளிமையாகிவிடும்.

‘திருமணத்திற்கு பிறகு நீ நிறைய விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கும்’ என்று என் கணவர் தர்மேந்திரா சொன்னார். அவருக்கு ஏற்கனவே ஒரு குடும்பம் இருப்பதை மனதில் வைத்துதான் அப்படி சொன்னார். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. விட்டுக்கொடுப்பது எனக்கு கைவந்த கலை என்றேன். இன்றுவரை நான் பல விஷயங்களை விட்டுக்கொடுத்திருக்கிறேன். அது என் கணவரின் அன்பை அதிகப்படுத்த உதவி இருக்கிறது.

இவ்வளவு தான் அளவு என்பதெல்லாம் இல்லை. விட்டுக்கொடுப்பது பலவீனமல்ல. பலம். பின்னால் அது நமக்கு பல நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். நான் இரண்டு விஷயங்களை என் வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகிறேன். ஒன்று, விட்டுக்கொடுத்து என்னை நானே பலப்படுத்திக்கொள்வது. மற்றொன்று, எனக்கு தேவையான விஷயங்களுக்கு நேரம் ஒதுக்கி, என்னை நானே புதுப்பித்துக்கொள்வது..” என்று தன் வாழ்க்கை தத்துவத்தை அற்புதமாக வெளிப்படுத்துகிறார், ஹேமமாலினி.