சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, அனுஷ்கா, தமன்னா... இவர்களில் யாருடைய திருமணம் முதலில் நடக்கும்? (ஆர்.தனபால், பெருங்களத்தூர்)

அனுஷ்காவுக்கு அவருடைய பெற்றோர்கள் மிக தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்கள். நிச்சயதார்த்தத்துடன் திருமணம் நின்று போனதால், திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே திரிஷாவுக்கு அலர்ஜியாக இருக்கிறதாம். தமன்னாவும் திருமணத்துக்கு அவசரப்படவில்லை. மூன்று பேரில் அனுஷ்காவுக்கே முதலில் திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கிறது!


***

நடிகை கஸ்தூரி எந்த வி‌ஷயமாக இருந்தாலும், துணிச்சலுடன் கருத்து தெரிவிக்கிறாரே...அந்த துணிச்சல் அவருக்கு எங்கிருந்து வந்தது? (வெ.முத்தமிழ் அரசன், சேலம்)

கஸ்தூரியின் தாயார் வழக்கறிஞராக இருந்தவர். அவரிடம் இருந்தே கஸ்தூரிக்கு துணிச்சலும், தைரியமும் வந்ததாக கூறுகிறார்கள்!

***

குருவியாரே, டைரக்டர்கள் மணிரத்னம், பாலா ஆகிய இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? (எம்.ஆனந்த், காட்பாடி)

இரண்டு பேருமே அதிகமாக பேசுவதில்லை. கேமராவுக்கு பின்னால் இருப்பதையே விரும்புகிறார்கள். இருவரும் ஒரு சீனில் கூட தலையை காட்டுவதில்லை!

***

‘‘மாலையில் யாரோ மனதோடு பேச...’’ என்று தொடங்கும் பாடல் இடம் பெற்ற படம் எது, அதை பாடியவர் யார், பாடலுக்கு வாயசைத்து நடித்தவர் யார்? (சி.புவனேந்திரன், திருவாரூர்)

அந்த பாடல் இடம்பெற்ற படம், (விஜயகாந்த் நடித்த) ‘சத்ரியன்.’ பாடியவர், சுவர்ணலதா. பாடல் காட்சியில் நடித்தவர், பானுப்ரியா!

***

குருவியாரே, வில்லன், கதாநாயகன், குணசித்ர நடிகர் என்று எந்த வேடம் கொடுத்தாலும் அதில் திறமை காட்டி வரும் சத்யராஜ், மலையாள படங்களில் நடித்து இருக்கிறாரா? இதுவரை அவர் எத்தனை மொழி படங்களில் நடித்துள்ளார்? (கே.அன்புக்கரசன், கூடுவாஞ்சேரி)

‘ஆகதன்,’ ‘லைலா ஓ லைலா’ ஆகிய 2 மலையாள படங்களில் சத்யராஜ் நடித்து இருக்கிறார். அவர் இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய 4 மொழி படங்களில் நடித்துள்ளார்!

***

வெள்ளித்திரையில் மின்னிய நட்சத்திரம் ரேவதியும் ‘சின்னத்திரை’க்கு வந்து விட்டாரே? (எஸ்.அருண்குமார், திருபுவனம்)

ரேவதி, வெள்ளித்திரையில் மின்னியது போலவே ‘சின்னத்திரை’யிலும் மின்னி வருகிறார். வெள்ளித்திரையில் முத்திரை பதித்தது போல், சின்னத்திரையிலும் முத்திரை பதித்து வருகிறார். ‘அம்மா’ வேடத்தில் அவர் சும்மா வந்து போகாமல், தனது நடிப்பால் டி.வி.ரசிகர்களை ஒட்டு மொத்தமாக கவர்ந்து இருக்கிறார்!

***

குருவியாரே, அமலாபால், காஜல் அகர்வால் ஆகிய இருவரில் யார் அழகி, யார் பேரழகி? (கே.நடராஜன், திருவண்ணாமலை)

அமலாபால், காஜல் அகர்வால் ஆகிய இருவருமே அழகிகள்தான். பேரழகி, வேறு ஒருவர்!

***

சிவாஜி நடித்த ‘ஆண்டவன் கட்டளை,’ எம்.ஜி.ஆர். நடித்த ‘ஆனந்த ஜோதி’ ஆகிய 2 படங்களையும் தயாரித்தவர் யார்? (எஸ்.சி.ஸ்டீபன், மறவன் குடியிருப்பு)

வில்லன் நடிகர் பி.எஸ்.வீரப்பா!

***

குருவியாரே, நயன்தாரா, திரிஷா ஆகிய இருவருக்கும் ஓட்டப்பந்தயம் வைத்தால், அதில் யாருக்கு வெற்றி கிடைக்கும்? (ஜீ.வி.மோகன், திருவேற்காடு)

அதிக சதைப்பற்று இல்லாத நீளமான கால்களை கொண்டவருக்கு வெற்றி நிச்சயம்!

***

நாகேஷ் கதாநாயகனாக நடித்த ‘தேன் கிண்ணம்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்தவர் யார்? (பி.இன்பராஜ், திருவிடை மருதூர்)

பழைய கவர்ச்சி நடிகை விஜயலலிதா!

***

குருவியாரே, விஜயகாந்தும், ராதாவும் இணைந்து எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்கள்? (ரஜினி செந்தில், கிரேக்மோர் எஸ்டேட்)

விஜயகாந்தும், ராதாவும் ‘அம்மன் கோவில் கிழக்காலே,’ ‘நினைவே ஒரு சங்கீதம்,’ ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்,’ ‘மனக்கணக்கு’ ஆகிய 4 படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்!

***

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுமா? அப்படி எடுத்தால், அந்த படத்தை இயக்குபவர் யார்? (ஏ.பிலால் சம்சுதீன், காயல்பட்டணம்)

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு இந்தியில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. அந்த படத்தை இயக்குபவர், கன்சல் மேத்தா!

***

குருவியாரே, ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் இரட்டிப்பு வெற்றிப்படமாக்கிய ஜனரஞ்சக இயக்குனர் சுந்தர் சி. இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்? (கே.அஞ்சப்பன், காரைக்கால்)

சுந்தர் சி, ‘நந்தினி’ என்ற தொலைக்காட்சி தொடரை உருவாக்கி வருகிறார்!

***

பிரஷாந்த் நடித்து வந்த ‘ஜானி’ படம் என்ன ஆனது? அந்த படத்தில் பிரஷாந்த் ஜோடி யார்? (அ.கதிரேசன், கோட்டையூர்)

‘ஜானி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு போன்ற பணிகளும் நிறைவடைந்தன. இந்த படத்தில், பிரஷாந்த் ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்து இருக்கிறார்!

***

குருவியாரே, அமலாபாலின் கார் பிரச்சினை ஓய்ந்து விட்டதா? (டி.சேவியர் ராஜ், சென்னை–2)

அமலாபாலின் கார் பிரச்சினை இன்னும் ஓயவில்லை. வழக்கு இப்போது கோர்ட்டில் இருக்கிறது.

***

பழைய பாடல்கள் போல் இப்போது வரும் பாடல்கள் இனிமையாக இல்லையே...ஏன்? (எச்.ராவுத்தர், புதுமடம்)

ஒரேயடியாக அப்படி சொல்லிவிட முடியாது. முன்பை விட, இப்போது இனிமையான பாடல்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது!

***

குருவியாரே, நடிகர்–நடிகைகள் பங்கேற்கும் ‘நட்சத்திர கலை விழா,’ பெரும்பாலும் வெளிநாட்டிலேயே நடக்கிறதே...அதற்கு காரணம் என்ன? (ஆர்.சீனிவாசன், ஸ்ரீரங்கம்)

உள்நாட்டை விட, வெளிநாட்டில் நட்சத்திர மோகம் அதிகமாக இருப்பதால், இரண்டு மடங்கு அதிகமாக வசூல் ஆகும் என்ற நம்பிக்கைதான் காரணம்!

***

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகிய இருவரில் நடிப்பில் சிறந்தவர் யார்? (கொம்பையா பாண்டியன், திருநெல்வேலி)

விஜய் சேதுபதி ஏற்கனவே தனது நடிப்பு திறனை பல படங்களில் நிரூபித்து விட்டார். சிவகார்த்திகேயன் இப்போதுதானே நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அனுபவங்கள்தான் நடிப்பை மெருகேற்றும்!

***

குருவியாரே, கீர்த்தி சுரேஷ், ஓவியா ஆகிய இருவரும் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்? அவர்களின் தாய் மொழி எது? (வே.கவுதம், முகப்பேர்)

இருவருமே கேரளாவை சேர்ந்தவர்கள். அவர்களின் தாய் மொழி, மலையாளம்!

***

விஷால் நடித்த ‘திமிரு’ படத்தில் வில்லியாக நடித்தவர் யார்? (சி.ஜோதி, கடலூர்–4)

‘திமிரு’ படத்தில் வில்லியாக நடித்தவர், ஸ்ரேயா ரெட்டி. இவர், விஷாலின் அண்ணன் அஜய் கிருஷ்ணாவின் மனைவி!