இலங்கையில் நடந்த நடிகர் ஆர்யா படப்பிடிப்புக்கு எதிர்ப்பு


இலங்கையில் நடந்த நடிகர் ஆர்யா படப்பிடிப்புக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 25 March 2018 11:00 PM GMT (Updated: 25 March 2018 8:50 PM GMT)

இலங்கையில் நடந்த நடிகர் ஆர்யா படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


நடிகர் ஆர்யா தனது திருமணத்துக்காக டெலிவிஷன் மூலம் மணப்பெண்ணை தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். நூற்றுக்கணக்கான பெண்களிடம் இருந்து ஆர்யாவை மணக்க விண்ணப்பங்கள் வந்தன. அவர்களில் 16 பேரை தேர்வு செய்து பழகி ஒருவரை மணப்பெண்ணாக தேர்வு செய்ய இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சி டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது கலாசாரத்துக்கு எதிராக இருப்பதாக பெண்கள் அமைப்பினர் கண்டித்துள்ளனர். இதற்கு தடை கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நடிகர் ஆர்யா இலங்கை சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு நூலகத்தில் மணப்பெண் தேர்வுக்காக நடந்த டெலிவிஷன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

ஆர்யா வந்துள்ள தகவல் அறிந்ததும் நூலகத்தில் ரசிகர்கள் கூடினார்கள். ஆர்யாவிடம் செல்பி எடுக்கவும் ஆட்டோகிராப் வாங்கவும் முண்டியடித்தனர். இதற்கிடையில் நூலகத்தில் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்புகளும் கிளம்பியது. அனுமதி பெறாமல் அத்துமீறி படப்பிடிப்பு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

படப்பிடிப்பு நடந்தபோது நூலகத்துக்கு சென்றவர்களையும் சுற்றுலா பயணிகளையும் படக்குழுவினர் தடுத்து நிறுத்தியதாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதுகுறித்து யாழ்ப்பாணம் நகர சபை ஆணையர் ஜெயசீலன் கூறும்போது, “ஆர்யா படப்பிடிப்புக்கு என்னிடம் அனுமதி கேட்கப்பட்டது. நூலக பணிகளுக்கு இடையூறு இல்லாமல் வெளிப்புறத்தில் மட்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நூலக கட்டிடத்துக்கு உள்ளேயும் அத்துமீறி படப்பிடிப்பை நடத்தியதாக புகார் கூறப்பட்டு உள்ளது” என்றார்.

நூலகரும் வெளியே படப்பிடிப்பை நடத்துவதாக அனுமதி வாங்கி விட்டு உள்ளே புகுந்து காட்சிகளை படமாக்கியதாக குற்றம் சாட்டினார்.

Next Story