பட அதிபர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் ஆகுமா? தியேட்டர் உரிமையாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை


பட அதிபர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் ஆகுமா? தியேட்டர் உரிமையாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 26 March 2018 11:00 PM GMT (Updated: 26 March 2018 9:16 PM GMT)

பட அதிபர்களும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஓரிரு நாளில் மீண்டும் சந்தித்து பேச உள்ளனர்.

தியேட்டர்களில் புதிய படங்களை திரையிட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பட அதிபர்கள் கண்டித்துள்ளனர். திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும் என்றும் பெரிய படங்களுக்கு அதிக கட்டணமும் சிறிய படங்களுக்கு குறைவான கட்டணமும் வசூலிக்க வேண்டும் என்றும் பட அதிபர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

‘பார்க்கிங்’ கட்டணத்தையும் கேன்டீன்களில் விற்கப்படும் உணவு பண்டங்கள் விலையை குறைக்கவும் வலியுறுத்தி உள்ளனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கடந்த 1-ந்தேதி முதல் 26 நாட்களாக படங்களை வெளியிடுவதை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 16-ந்தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளையும் ரத்து செய்து விட்டனர்.

இதனால் பட உலகம் ஸ்தம்பித்துள்ளது. நடிகர்-நடிகைகள் வீட்டில் முடங்கி உள்ளனர். பெப்சி தொழிலாளர்களும் வேலை இழந்து இருக்கிறார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை பட அதிபர்கள் நேரில் சந்தித்து வேலை நிறுத்தம் குறித்து விளக்கி உள்ளனர். டைரக்டர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், பெப்சி, ஒளிப்பதிவாளர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

வேலை நிறுத்தத்தால் திரைப்பட தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று ரஜினிகாந்த் வலியுறுத்தி உள்ளார். தயாரிப்பாளர்கள் கோரிக்கைகள் குறித்து தியேட்டர் அதிபர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பட அதிபர்களும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஓரிரு நாளில் மீண்டும் சந்தித்து பேச உள்ளனர். அப்போது பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு வேலை நிறுத்தம் கைவிடப்படுமா? என்பது தெரியவரும். 

Next Story