சினிமா செய்திகள்

ஆஸ்பத்திரியில் அனுமதிநடிகை ஜெயந்திக்கு தீவிர சிகிச்சை + "||" + Actress Jayanti serious treatment

ஆஸ்பத்திரியில் அனுமதிநடிகை ஜெயந்திக்கு தீவிர சிகிச்சை

ஆஸ்பத்திரியில் அனுமதிநடிகை ஜெயந்திக்கு தீவிர சிகிச்சை
நடிகை ஜெயந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவ செய்தி குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பழம்பெரும் நடிகை ஜெயந்தி. இவருக்கு 73 வயது ஆகிறது. பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வரும் இவருக்கு 35 வருடமாக ஆஸ்துமா பாதிப்பு இருந்தது. நேற்று முன்தினம் ஜெயந்திக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சு விட சிரமப்பட்டார்.

உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் அவசர பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஜெயந்திக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு உள்ளது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். இந்த நிலையில் ஜெயந்தி உடல்நிலை குறித்து வதந்தி பரவியது. இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆஸ்பத்திரி நிர்வாகம் அதனை மறுத்தது. ஜெயந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும் மருத்துவ செய்தி குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

ஜெயந்தி 1960-களிலும் 70 மற்றும் 80-களிலும் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். எம்.ஜி.ஆருடன் படகோட்டி, முகராசி படங்களிலும் சிவாஜி கணேசனுடன் கர்ணன், இருவர் உள்ளம் படங்களிலும் நடித்துள்ளார். ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமனுடன் அதிக படங்களில் நடித்துள்ளார்.

எதிர்நீச்சல், நீர்க்குமிழி, இரு கோடுகள், பாமா விஜயம், புன்னகை, கண்ணா நலமா உள்பட பல முக்கிய படங்களில் நடித்து இருக்கிறார். கன்னட நடிகர் ராஜ்குமாருடன் மட்டும் 45 படங்களில் நடித்துள்ளார். மொத்தம் 500 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். மிஸ்மாலினி என்ற படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார்.

திரையுலகில் முதலில் கவர்ச்சியாகவும் நீச்சல் உடையிலும் துணிச்சலாக நடித்தவர் ஜெயந்தி. ‘இருகோடுகள்’ படத்தில் ஜெயந்தி பாடிய ‘புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக’ என்ற பாடலும் வெள்ளி விழாவில் பாடிய ‘காதோடுதான் நான் பாடுவேன்’ என்று பாடிய பாடலும் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.

கன்னடத்தில் ஜெயந்தி நடித்த முதல் படமான ‘ஜீனு கூடு’வை இயக்கிய பெக்கெட்டி சிவராமை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கிருஷ்ணகுமார் என்ற மகன் உள்ளார்.