“சினிமா பிரச்சினைக்கு 3 நாளில் தீர்வு” நடிகர் விஷால் உறுதி


“சினிமா பிரச்சினைக்கு 3 நாளில் தீர்வு” நடிகர் விஷால் உறுதி
x
தினத்தந்தி 29 March 2018 11:15 PM GMT (Updated: 29 March 2018 7:34 PM GMT)

சினிமா பிரச்சினைக்கு இன்னும் 3 நாட்களில் தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாக விஷால் கூறினார்.

தியேட்டர்களில் புதிய படங்களை திரையிடும் கியூப், யுஎப்ஓ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதாக கண்டித்து பட அதிபர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். கடந்த 1-ந்தேதி முதல் புதிய படங்கள் திரைக்கு வராததால் 29 நாட்களாக பட உலகம் முடங்கி உள்ளது.

சினிமா படப்பிடிப்புகளையும் நிறுத்தி விட்டனர். தியேட்டர்களில் பழைய படங்களை மீண்டும் திரையிட்டு வருகிறார்கள். கூட்டம் இல்லாததால் வசூல் பாதித்துள்ளது. இந்த மாதம் வெளியாக வேண்டிய 20-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. அடுத்த மாதம் வெளியீட்டுக்காக 30 படங்கள் தணிக்கைக்கு காத்திருக்கின்றன.

வேலை நிறுத்தம் காரணமாக திரையுலகுக்கு இதுவரை ரூ.700 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரச்சினைக்கு தீர்வு காண தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

போராட்டம் குறித்து தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-

“திரைப்பட சங்கத்தினர் இணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த பேச்சுவார்த்தைகள் சரியான பாதையில் போய்க்கொண்டு இருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இந்த கால கட்டத்தில் எதற்காக போராட்டம் நடக்கிறது என்பதை தியேட்டர் அதிபர்களும் வினியோகஸ்தர்களும் உணர்ந்து ஒரு முடிவுக்கு வரக்கூடிய வாய்ப்பு வந்துள்ளது.

இன்னும் 2 அல்லது 3 நாட்களில் பிரச்சினைக்கு இறுதியான தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.”

இவ்வாறு விஷால் கூறினார். 

Next Story