‘பசிபிக் ரிம்–2’ படம் எப்படி இருக்கு?


‘பசிபிக் ரிம்–2’ படம் எப்படி இருக்கு?
x
தினத்தந்தி 31 March 2018 1:00 AM GMT (Updated: 30 March 2018 11:01 AM GMT)

2013–ல் வெளிவந்த ‘பசிபிக் ரிம்’ படத்தின் அடுத்த பாகம். முதல் பாகமே ஹாலிவுட்டில் வெற்றிப்படமில்லை. மிக சுமாரான விமர்சனங்களைப் பெற்ற படம் அது.

பசிபிக் கடல் பகுதியில் உருவாகும் பிளவிலிருந்து வெளிவரும் மிக பிரமாண்டமான மிருகம் உலகை அழிக்கப் பார்க்கிறது. ‘கைஜு’ எனப்படும் இந்த மிருகத்தை அழிக்க, ‘ஏகர்ஸ்’ எனப்படும் மிகப் பிரமாண்டமான ரோபோக்களை உருவாக்குகிறார்கள். இந்த ரோபோக்களை இயக்கும் இரண்டு பைலட்டுகள் உயிரைக் கொடுத்து உலகைக் காப்பாற்றுவதோடு முடிகிறது, முதல் பாகம்.

தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது பாகத்திலும், கிட்டத்தட்ட அதே கதைதான். பசிபிக் கடல் பகுதியில் இருந்த பிளவு மூடப்பட்டுவிட்டதால் ராட்சத மிருகம் குறித்த அச்சமின்றி இருந்த நிலையில், ஒரு மோசமான விஞ்ஞானி தன்னை யாரும் மதிப்பதில்லை என்பதால் மீண்டும் அந்த மிருகங்களை கட்டவிழ்த்து விடுகிறார். அவற்றைச் சமாளிக்க மீண்டும் ‘ஏகர்ஸ்’ எனப்படும் ராட்சத ரோபோக்களைக் களமிறக்குகிறார்கள் விஞ்ஞானிகள். முந்தைய பாகத்தில் கைஜுக்களோடு போராடி உயிரைவிட்ட பைலட்டின் மகனான ஜேக் பென்டேகோஸ்ட் (ஜான் பாயேகா), தன் சகோதரி மேகோ மரி, மற்றொரு இளம்பெண்ணான அமரா (கெய்லி ஸ்பானி) ஆகியோருடன் களமிறங்குகிறான். முடிவில் வழக்கம் போல மிருகங்களைக் கொன்று, உலகத்தைக் காப்பாற்றிவிடுகிறார்கள்.

முதல் பாகம் சுமாராக ஓடினாலும், 2–வது பாகம் அந்த நிலையைக்கூட கடக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் ஹாலிவுட் படம் என்ற தரத்தில் இருந்து கொஞ்சம் மாறுபட்ட வகையில் ‘ஓ.கே’ ரகத்திலும் இல்லாமல், ‘மோசம்’ என்ற நிலையிலும் இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ‘கைஜூ’ மிருகத்தை கிராபிக்ஸ் செய்வதில் கவனம் செலுத்தியிருந்தால் படம் நன்றாக வந்திருக்கும். அதேசமயம் டிரான்ஸ்பார்மர் படங்களில் வரும் சண்டைக் காட்சிகளையே ‘ஏகர்ஸ்’ ரோபோக்கள் நினைவூட்டுகின்றன. அதனால் எந்த காட்சிக்கு நகர்ந்தாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

முழுக்க முழுக்க ஒரு வீடியோ கேம் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் உணர்வு ரீதியாக ரசிகர்களை ஒன்றச் செய்வதற்கான முயற்சியை சிறிதளவுகூட மேற்கொள்ளவில்லை என்பதுதான் இதன் முக்கியமான பலவீனம். இந்தப் படத்தில் வரும் முக்கிய பாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஏனோதானோ என்றே தங்கள் கடமைகளை ஆற்றிச் செல்கிறார்கள்.

பெரிய அழிவிலிருந்து உலகத்தைக் காப்பாற்றும் கதையைக் கொண்ட திரைப்படங்களின் உச்சகட்டம் எல்லாமே அட்டகாசமாக இருக்கும். இந்தப் படத்தில் அதிலும் கோட்டை விட்டிருக்கிறார்கள்.

படம் முடியும்போது, அடுத்த பாகம் வரக்கூடும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார் வில்லன். ரொம்பவுமே தைரியம்தான்!

Next Story