சினிமா செய்திகள்

அறிமுக இயக்குனர்களிடம் அடைக்கலம் புகும் நாயகர்கள் + "||" + Heroes are Asylum in Debut directors

அறிமுக இயக்குனர்களிடம் அடைக்கலம் புகும் நாயகர்கள்

அறிமுக இயக்குனர்களிடம் அடைக்கலம் புகும் நாயகர்கள்
பெரிய இயக்குனர்களின் படங்களில் பணியாற்ற வேண்டும், பிரம்மாண்ட வெற்றி அல்லது அதிக வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே முன்னணி நடிகர்களில் இருந்து அறிமுகமாகும் கதாநாயகர்கள் வரையில், பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருக்கிறது.
புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் முன்னணி நாயகர்கள் என்று கணக்கில் எடுத்தால், அதன் எண்ணிக்கை ஒன்று.. இரண்டு.. என்றுதான் இருக்கும். சினிமாத்துறைக்குள் நுழைந்து இரண்டாவது படத்திலேயே ஒரு இயக்குனர், முன்னணி நடிகரை இயக்குகிறார் என்றால், அவர் தன்னுடைய முதல் படத்தை வெற்றிப்படமாக்கியிருக்கிறார் என்று அர்த்தம். இந்தநிலையானது, இந்திய சினிமாவில் உள்ள பல மொழி திரைப்படத்துறைக்கும் பொருந்தும்.


ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மலையாள சினிமா உலகில், இந்தநிலை மாறி வருகிறது. பல கதாநாயகர்கள், குறிப்பாக முன்னணி கதாநாயகர்கள்கூட அங்கு, அறிமுக இயக்குனர்களின் இயக்கத்தில் பணியாற்ற ஆர்வம் காட்டுகிறார்கள். புதியதாக அறிமுகமாகும் இயக்குனர்கள், புதுப்புது சிந்தனைகளோடும், புதிய கதைக்களத்தோடும், திரைக்கதையில் வித்தியாசத்தோடும் களம் காணுவதே, புதிய இயக்குனர்களை நாயகர்கள் பலரும் நாடிச்செல்ல முக்கிய காரணமாக இருக்கிறது.

இயக்குனராக அறிமுகமாகுபவர்கள், புதிய சிந்தனைகளோடு களம் காண்கிறார்கள் என்பதை, சமீபத்தில் கேரள அரசால் அறிவிக்கப்பட்ட திரைத்துறைக் கான விருது நிகழ்வு பலருக்கும் உணர்த்தியிருக்கிறது. இந்த விருது அறிவிப்பில் அறிமுக இயக்குனர்களின் இயக்கத்தில் வெளியான படங்களே முக்கியமான சில விருதுகளைத் தட்டிச் சென்றன.விருது அறிவிப்பில் ‘ஒட்டமுறி வெளிச்சம்’ திரைப்படம், சிறந்த படத்திற்கான அரசு விருதை தட்டிச் சென்றதுடன், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது, சிறந்த நடிகைக்கான ஸ்பெ‌ஷல் ஜூரி விருது ஆகியவற்றைத் தட்டிச் சென்றது. இந்தப் படத்தை அறிமுக இயக்குனரான ராகுல் ரிஜி நாயர் இயக்கியிருந்தார்.

அதே போல் குஞ்சக்கோபோபன், பகத் பாசில், பார்வதிமேனன் ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருந்த ‘டேக் ஆப்’ திரைப்படமும்

4 விருதுகளை அள்ளிச்சென்றது. சிறந்த அறிமுக இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த கலை இயக்குனர், சிறந்த பின்னணி இசையமைப்பு ஆகிய தளங்களில் இந்தப் படம் கேரள அரசின் விருதுகளைப் பெற்றிருந்தது. இந்தப் படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவாளராக இருந்து, இந்தப் படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமான மகேஷ் நாராயண்.

இவர்களைப் போல இன்னொரு அறிமுக இயக்குனரும், கேரள அரசின் விருது அறிவிப்பில் வெளிச்சத்திற்கு வந்துள்ளார். அவர் வி.சி.அபிலாஷ். இவர் 300–க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்த இந்திரன்ஸ் என்பவரை வைத்து ‘ஆலொருக்கம்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதுக்கு, இந்திரன்ஸ் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படி ஒவ்வொரு தளத்திலும் அறிமுக இயக்குனர்களின் இயக்கத்தில் வெளியான படங்கள் ஆதிக்கம் செலுத்தி இருந்தன. இதுவும் மலையாள சினிமா கதாநாயகர்களின் பார்வையை, அறிமுக இயக்குனர்களின் பக்கமாக திருப்பி விட்டுள்ளது.

இதையடுத்து தற்போது மலையாளத்தில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் பலரும் அறிமுக இயக்குனர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மலையாளத்தில் உச்ச நடிகராக இருப்பவர் மம்முட்டி. இவர் கையில் தற்போதுவரை 5 படங்கள் இருக்கின்றன. இதில் இரண்டு படங்களை அறிமுக இயக்குனர்களே இயக்குகிறார்கள். மம்முட்டி, இனியா, மியா ஜார்ஜ் ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பரோல்’ திரைப்படத்தை ‌ஷரத் சந்தித் என்ற அறிமுக இயக்குனரும், ‘அபிரகாமின்ட சந்ததிகள்’ படத்தை ஷாஜிபடூர் என்ற அறிமுக இயக்குனரும் இயக்கியிருக்கிறார்கள். இதில் ‘பரோல்’ திரைப்படம் மார்ச் 31–ந் தேதி, அதாவது இன்று (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது.

மலையாள சினிமாத் துறையின் மற்றொரு உச்ச நடிகரான மோகன்லாலும் அறிமுக இயக்குனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அவர் நடிக்கும் மூன்று படங்களில் அதிகமாக எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் ‘ஓடியன்’ திரைப்படம் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் என்ற அறிமுக இயக்குனரால் இயக்கப்படுகிறது. இந்தப் படத்தில் பிளாக் மேஜிசியனாக நடிக்கும் மோகன்லால், முதுமை தோற்றம் மற்றும் இளமைத் தோற்றம் என இரண்டு வித்தியாசமான கெட்அப்களில் நடிக்கிறார். இந்தப் படத்தில்

மஞ்சுவாரியார், நரேன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 20 வருடங்களுக்குப் பிறகு, மோகன்லாலும், பிரகாஷ்ராஜூம் இணைந்து நடிப்பதால் இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

அடுத்ததாக மலையாள திரைத்துறையில் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ், ரகுமான் நடிப்பில் உருவாகி வரும் படம், ‘ரணம்’. இந்தப் படத்தின் வாயிலாக பல படங்களில் இணை இயக்குனராகவும், சமீபத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியான ‘ஹே ஜூடு’ படத்தில் கதாசிரியராகவும் பணியாற்றிய நிர்மல் சகாதேவ் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இது தவிர பிருத்விராஜ் நடிப்பில் மேலும் இரண்டு படங்களையும் கூட அறிமுக இயக்குனர்களே இயக்குகிறார்கள். இதில் ‘மை ஸ்டோரி’ என்ற படத்தை ரோஷிணி தினகர் என்பவரும், ‘காளியன்’ என்ற வரலாற்றுப் படத்தை எஸ்.மகேஷ் என்பவரும் இயக்குகிறார்கள்.

மலையாளத்தின் மற்றொரு முன்னணி நடிகரான திலீப் நடித்து வரும் ‘கம்மார சம்பவம்’ திரைப்படத்தை ரதீஷ் அம்பாட் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இந்தப் படத்தில் திலீப் மூன்று விதமான கெட்அப்பில் நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் திலீப்புடன் சேர்ந்து சித்தார்த் நடிக்கிறார். மலையாளத்தில் இவர் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். இந்தப் படத்தின் போஸ்டர் களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்புக்குள்ளாக்கி இருக்கிறது.

இவை மட்டுமல்லாது நடிகர் ஜெயராம் மற்றும் குஞ்சயக்கோபோபன் இணைந்து நடிக்கும் ‘பஞ்சவர்ண தாதா’ என்ற படத்தை ரமேஷ் பிசரோடி என்ற அறிமுக இயக்குனரும், பிஜூமேனன் நடிப்பில் ‘ஓராயிரம் கினக்கலால்’ என்ற படத்தை பிரமோத் மோகன் என்ற அறிமுக இயக்குனரும் இயக்குகிறார்கள்.

இப்படி உச்சநடிகர் முதல்கொண்டு பல நடிகர்களும் தங்களை, புதுமுக இயக்குனர்களிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் புதுமுக இயக்குனர்கள் சொல்வதற்கேற்ப, தங்களுடைய கதாபாத்திரங்கள், தோற்றங்களில் மாறுதல்கள் செய்யவும், அவர்களின் வித்தியாசமான சிந்தனைகளுக்கு ஏற்றபடி தங்களின் இமேஜை விட்டுக்கொடுக்கவும் கதாநாயகர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களின் எண்ணம் எல்லாம் தாங்கள் நடிக்கும் படம் மிகப்பெரிய வெற்றியை அடையவேண்டும் என்பதாக மட்டுமே இருக்கிறது. அந்த எண்ணத்திற்கு, புதுமுக இயக்குனர்களின் நவீனமான, புதிய புதிய சிந்தனைகள் கைகொடுக்கும் என்று நம்புகிறார்கள்.