சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, வெள்ளித்திரையில் மின்னிய ராதிகா சரத்குமார், அம்பிகா, ரேவதி ஆகிய மூன்று பேரும் ‘சின்னத்திரை’க்கு போய் இருக்கிறார்களே... அங்கே அந்த மூன்று பேரில் யாருக்கு முதல் இடம்? 2–வது, 3–வது இடங்களில் யார் இருக்கிறார்கள்? (ஆர்.குமரன், குன்றத்தூர்)


‘சின்னத்திரை’யில், ‘சித்தி’யாக ஜெயித்தவருக்கே முதல் இடம்! இரண்டாவது இடத்தை ரேவதியும், மூன்றாவது இடத்தை அம்பிகாவும் பிடித்து இருக்கிறார்கள்!

***

‘‘கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ...என் தோட்டத்திலே ஆட உரிமை உள்ளவரோ..? என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, பாடியவர் யார், பாடலுக்கு நடனம் அமைத்தவர் யார், ஆடியவர் யார்? (ஏ.பி.சந்தோஷ், சேலம்)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘தெய்வமகன்.’ பாடியவர், பி.சுசீலா. நடனம் அமைத்தவர், ஏ.கே.சோப்ரா. பாடலுக்கு நடனம் ஆடியவர், ஜெயலலிதா!

***

குருவியாரே, இப்போதெல்லாம் ‘ஜேம்ஸ்பாண்ட்’ படங்கள் வருவதில்லையே...ஏன்? (சி.ஞானஜோதி, கடலூர்–4)

ஜெய்சங்கருக்கு பொருந்திய அளவுக்கு ‘ஜேம்ஸ்பாண்ட்’ வேடம் வேறு நடிகர்களுக்கு பொருந்தவில்லை போலும்!

***

தமிழ் திரையுலக ‘சிரிப்பழகி’களில், மிக அதிகமான ரசிகர்களை சம்பாதித்தவர்கள் யார்–யார்? (கே.சின்னதம்பி, பொள்ளாச்சி)

டி.ஆர்.ராஜகுமாரி, கே.ஆர்.விஜயா, சினேகா!

***

குருவியாரே, அர்ஜுன் கூட வில்லன் வேடத்துக்கு இறங்கி வந்து விட்டாரே...ஏன்? (ஜெ.மார்த்தான்டன், நாகர்கோவில்)

அர்ஜுனுக்கு அடி கொடுத்து அலுத்து விட்டது போலும். அதனால் அடி வாங்க தயாராகி விட்டார்!

***

தமிழ் திரையுலகுக்கு ரேவதி அறிமுகமான படம் எது, ரேகா அறிமுகமான படம் எது, இரண்டு பேரையும் அறிமுகம் செய்த டைரக்டர் யார்? (ஏ.ஜார்ஜ், தூத்துக்குடி)

ரேவதி அறிமுகமான படம், ‘மண்வாசனை.’ ரேகா அறிமுகமான படம், ‘கடலோர கவிதைகள்.’ இரண்டு பேரையும் அறிமுகம் செய்த டைரக்டர், பாரதிராஜா!

***

குருவியாரே, இப்போதைய முன்னணி கதாநாயகிகளில், ‘கூடைப்பந்து வீராங்கனை’ வேடத்துக்கு பொருந்துபவர் யார்? (எம்.சரவணன், போரூர்)

ரொம்ப உயரமாகவும் இல்லாத–ரொம்ப குள்ளமாகவும் இல்லாத–நடுத்தர உயரம் கொண்ட அழகான நடிகைகள் அத்தனை பேருக்கும் ‘கூடைப்பந்து வீராங்கனை’ வேடம், கச்சிதமாக பொருந்தும்!

***

சில வருடங்களுக்கு முன்பு வரை கண்டுகொள்ளப்படாத கதாநாயகியாக இருந்த அனுஷ்காவுக்கு முதன்முதலாக திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்த படம் எது? (எல்.கோபால், திருச்சி)

‘அருந்ததி.’ இந்த படத்தின் வெற்றிக்கு பிறகுதான் அனுஷ்கா முன்னணி கதாநாயகி ஆனார்!

***

குருவியாரே, வடிவேலுவின் நகைச்சுவை விருந்தில், நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் ‘காமெடி’ எது? அது எந்த படத்தில் இடம் பெற்றது? (எஸ்.ரஞ்சித், சங்ககிரி)

வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் பெரும்பாலும் நினைத்து நினைத்து சிரிக்க வைப்பவைதான். ‘வின்னர்’ கைப்புள்ள, ‘தலைநகரம்’ நாய் சேகர், ‘எல்லாம் அவன் செயல்’ வண்டு முருகன், ‘மருதமலை’ என்கவுன்டர் ஏகாம்பரம் ஆகிய கதாபாத்திரங்களும், வடிவேலுவின் ‘காமெடி’யும் மறக்க முடியாதவை!

***

அஞ்சலிக்கும், ஜெய்க்கும் என்ன பிரச்சினை? (வெ.தங்கராஜ், மோகனூர்)

இவருக்கு அவர் மீதும், அவருக்கு இவர் மீதும் சந்தேகம் வந்ததுதான் முதல் பிரச்சினை. இந்த சந்தேகம் நாளுக்கு நாள் வளர்ந்து பெரிதாகி, கடைசியில் இருவரையும் பிரித்து விட்டது!

***

குருவியாரே, ‘காதல்’ பட நாயகன் பரத்தை திரையுலகுக்கு அறிமுகம் செய்த டைரக்டர் யார், அவர் அறிமுகமானது எந்த படத்தில்? (க.ராமலிங்கம், காட்டுச்சேரி)

பரத் அறிமுகமான படம், ‘பாய்ஸ்.’ அவரை அறிமுகம் செய்த டைரக்டர், ‌ஷங்கர்!

***

ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்காக ஆதரவு இல்லம் நடத்தி வரும் நடிகர்–நடிகை யார்–யார்? (இரா.சேதுராமன், புதுக்கோட்டை)

ராகவா லாரன்ஸ்–ஹன்சிகா! ராகவா லாரன்ஸ் சென்னையிலும், ஹன்சிகா மும்பையிலும் ஆதரவற்றோருக்கான இல்லம் நடத்தி வருகிறார்கள்!

***

குருவியாரே, கவுதம் வாசுதேவ் மேனன் இப்போது எந்த படத்தை இயக்கி வருகிறார்? (சோ.அரவிந்த் கிருஷ்ணா, ஸ்ரீரங்கம்)

கவுதம் வாசுதேவ் மேனன் கைவசம் தற்போது ‘எனை நோக்கி பாயும் தோட்டா,’ ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய 2 படங்கள் உள்ளன. இந்த இரண்டு படங்களுமே பாதி பாதி முடிவடைந்த நிலையில் உள்ளன. இது தவிர, அவர் தயாரித்து, கார்த்திக் நரேன் இயக்கி வந்த ‘நரகாசுரன்’ படம் முடிவடைந்து, திரைக்கு வர தயாராக இருக்கிறது!

***

‘‘வாராயோ தோழி வாராயோ...மணப்பந்தல் காண வாராயோ...’’ என்ற பாடலை பாடியவர் யார், அது எந்த படத்தில் இடம் பெற்றது? (சி.புவனேந்திரன், விளமல்)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘பாசமலர்.’ பாடியவர்: எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர். பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடியவர், சுகுமாரி!

***

குருவியாரே, வெள்ளித்திரையில் முரட்டுத்தனமான வில்லனாக நடித்து வந்த மன்சூர் அலிகான் சமீபகால படங்களில், ‘காமெடி’ வேடங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டாரே...? (டி.உதயகுமார், பெங்களூரு)

வில்லனாக மட்டுமல்ல...‘காமெடி’ வேடங்களிலும் பிரகாசிக்க முடியும் என்று நிரூபிப்பதற்காகவே மன்சூர் அலிகான் நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறாராம்!

***

‘துருவங்கள் 16’ பட புகழ் கார்த்திக் நரேன் இயக்கி வந்த ‘நரகாசுரன்’ படம் என்ன ஆனது? அந்த படம் எந்த நிலையில் உள்ளது? (கே.காஜாமைதீன், ஆற்காடு)

‘நரகாசுரன்’ படம் முடிவடைந்து திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.

***

குருவியாரே, என் கணவர் நயன்தாராவை நினைத்துக்கொண்டே இருக்கிறார். நயன்தாரா எப்போது திருமணம் செய்து கொள்வார்? அவரை என் கணவர் எப்போது மறப்பார்? (ஸ்ரீதேவி, வேலூர்)

உங்கள் கவலை விரைவில் தீர்ந்து விடும். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன!

***

‘இறைவி’ படத்துக்குப்பின், விஜய் சேதுபதி ஜோடியாக மீண்டும் அஞ்சலி நடிக்காதது ஏன்? (கே.நடராஜன், திருவண்ணாமலை)

ஜெய்–அஞ்சலி காதல் விவகாரம்தான் காரணம் என்கிறார்கள்!

***

குருவியாரே, திரிஷாவுக்கு ஒரு பட்டுப்புடவை எடுத்து பரிசளிக்க விரும்புகிறேன். அதை அவர் ஏற்றுக்கொள்வாரா? (எஸ்.சீனிவாசன், வேலூர்)

ஏற்கனவே சிலர் பட்டுப்புடவையுடன், ‘கியூ’வில் நிற்கிறார்கள். அவர்களுடன் நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள். தரிசனம் கிடைக்கும்!

***

ஸ்ரேயா அவருடைய ரஷிய காதலரை மணப்பதற்கு அவருடைய பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்களாமே...? (வி.கார்த்திக், பொன்மலை)

அம்மா மட்டும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாராம். அவரை, ஸ்ரேயா சமாதானப்படுத்தி விட்டாராம்!

***

குருவியாரே, குண்டாக தெரியும் மஞ்சிமா மோகன் தன் உடல் எடையை குறைப்பாரா? (எம்.ஜெயசீலன், பெரியகுளம்)

மஞ்சிமா மோகன் தனது குண்டு உடம்பை குறைக்க கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். சாப்பாட்டையும் குறைத்து விட்டாராம்!

***

நதியா இன்னும் இருபது வயது பெண் போல் தெரிகிறாரே...அவருடைய இளமை ரகசியத்தை சொல்ல முடியுமா? (வி.ரகுராமன், கரூர்)

நதியா தன் மனதை இன்னும் இருபது வயது பெண் போல் இளமையாக வைத்து இருக்கிறாராம். அதுவே அவருடைய இளமை ரகசியம்!

***