சினிமா பிரச்சினையை தீர்க்க 3 நாட்களில் முத்தரப்பு பேச்சுவார்த்தை - நடிகர் விஷால்


சினிமா பிரச்சினையை தீர்க்க 3 நாட்களில் முத்தரப்பு பேச்சுவார்த்தை - நடிகர் விஷால்
x
தினத்தந்தி 5 April 2018 11:15 PM GMT (Updated: 5 April 2018 10:11 PM GMT)

சினிமா பிரச்சினையை தீர்க்க 3 நாட்களில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என நடிகர் விஷால் தெரிவித்தார்.


புதிய படங்களை திரையிட டிஜிட்டல் சேவை அமைப்பினர் அதிக கட்டணம் வசூலிப்பதாக கண்டித்தும் தியேட்டர்களில் டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்க வலியுறுத்தியும் பட அதிபர்கள் கடந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இதனால் புதிய படங்கள் வெளியாகவில்லை. சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன.

திரையரங்குகளில் பழைய படங்களை திரையிடுகிறார்கள். 10 பேர், 15 பேர் படம் பார்க்க வருவதால் பல தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. திரைக்கு வர தயாராக இருந்த 30-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், பெப்சி தொழிலாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் வேலை இல்லாமல் வீட்டில் உட்கார்ந்து இருக்கிறார்கள்.

பட அதிபர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நடந்த சமரச பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளது. இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால், செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை நேரில் சந்தித்து பேசினார்கள்.

இந்த சந்திப்பு முடிந்த பிறகு அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களிடம் கூறும்போது, “திரையுலகினரின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு சார்பில் தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.

நடிகர் விஷால் கூறும்போது, “தியேட்டர்களில் டிக்கெட்டுகளை கம்ப்யூட்டர் மயமாக்கவும் டிஜிட்டல் சேவை கட்டணங்களை குறைக்கவும் ஏற்கனவே வற்புறுத்தி உள்ளோம். இதுகுறித்து அமைச்சரிடம் விளக்கினோம். சினிமா பிரச்சினைக்கு தீர்வு காண 2, 3 நாட்களில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும். முதல்- அமைச்சரை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்துள்ளோம்.” என விஷால் கூறினார்.

Next Story