ஸ்டூடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தும் நடிகர்கள் நடிகை ஸ்ரீரெட்டி புதிய புகார்


ஸ்டூடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தும் நடிகர்கள் நடிகை ஸ்ரீரெட்டி புதிய புகார்
x
தினத்தந்தி 11 April 2018 12:27 AM GMT (Updated: 11 April 2018 12:27 AM GMT)

ஸ்டூடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக நடிகர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று நடிகை ஸ்ரீரெட்டி புதிய புகார் கூறியுள்ளார்.

தெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார் கூறினார். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் என்ற முகநூல் பக்கத்தில் வெளியிடுவேன் என்றும் அறிவித்தார். நயன்தாராவை வைத்து நீ எங்கே என் அன்பே படத்தை இயக்கிய சேகர் கம்முலு பெண்களை படுக்கைக்கு அழைப்பதாக குற்றம் சாட்டினார்.

இதனை மறுத்த சேகர் கம்முலு, ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்து உள்ளார். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் சங்கம் தனக்கு உறுப்பினர் அட்டை தர மறுப்பதாக ஐதராபாத்தில் உள்ள திரைப்பட வர்த்தகசபை அலுவலகம் எதிரில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பட உலகை அதிர வைத்தார்.

இதனால் ஸ்ரீரெட்டி மீது தெலுங்கு நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்து அவருடன் சேர்ந்து யாரும் நடிக்கக்கூடாது என்று தடைவிதித்து உள்ளது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரின் மகன் ஸ்டூடியோவில் தன்னை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாகவும் அதற்கு ஆதாரமான அவரது புகைப்படத்தை விரைவில் வெளியிடுவேன் என்றும் புதிய புகார் கூறியுள்ளார்.

“ஸ்டூடியோவில் பிரபல தயாரிப்பாளரின் மகன் என்னை அடிக்கடி அழைத்துச்சென்று பாலியல் வன்மம் செய்தார். ஸ்டூடியோக்களுக்குள் யாரும் வரமாட்டார்கள், போலீஸ் சோதனை இருக்காது என்பதால் பல நடிகர்களும், தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ஸ்டூடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக மாற்றி விட்டனர். அங்கு பெண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்கின்றனர். வட இந்தியாவில் இருந்து வரும் நடிகைகள் படுக்கைக்கு செல்ல உடனே ஒப்புக்கொள்கிறார்கள். அதனால்தான் தென்னிந்திய மொழி படங்களில் அதிகமாக வட இந்திய நடிகைகள் நடிக்கின்றனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டு தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பட அதிபர் மகன் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று ஸ்ரீரெட்டியிடம் சிலர் சமாதானம் பேசுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story