புதிய படங்கள் வெளியானதால் தியேட்டர்கள் களைகட்டின


புதிய படங்கள் வெளியானதால் தியேட்டர்கள் களைகட்டின
x
தினத்தந்தி 20 April 2018 11:35 PM GMT (Updated: 20 April 2018 11:35 PM GMT)

புதிய படங்கள் வெளியானதால் தியேட்டர்கள் ரசிகர்களால் களைகட்டியது.

பட அதிபர்கள் வேலை நிறுத்தத்தால் 48 நாட்கள் திரையுலகம் முடங்கி இருந்தது. புதிய படங்கள் திரைக்கு வரவில்லை. தியேட்டர்களில் கூட்டம் குறைந்து காணப்பட்டது. எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் நடித்த பழைய படங்களையும் ஏற்கனவே திரைக்கு வந்து பெட்டிக்குள் முடங்கிய தற்போதைய நடிகர்களின் படங்களையும் மீண்டும் திரையிட்டு வந்தனர்.

சில தியேட்டர்களில் 10 பேர் 15 பேர் மட்டுமே வந்ததால் சினிமா காட்சிகளை ரத்து செய்தார்கள். ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை திரையரங்குகளில் ஒளிபரப்ப அனுமதி கேட்கும் நிலையும் இருந்தது. தற்போது சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மீண்டும் சகஜ நிலைக்கு திரையுலகம் திரும்பி இருக்கிறது.

நேற்று முதல் புதிய படங்கள் திரையிடப்பட்டன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த மெர்குரி தமிழகம் முழுவதிலும் உள்ள தியேட்டர்களில் நேற்று வெளியானது. சென்னையில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது. புதுமுகங்கள் நடித்துள்ள முந்தல் படமும் நேற்று வெளியானது. இதனால் தியேட்டர்கள் ரசிகர்கள் கூட்டத்தால் மீண்டும் களைகட்டின.

மேலும் 30-க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன. அந்த படங்கள் அடுத்த வாரத்தில் இருந்து வெளிவரும். ரஜினிகாந்தின் காலா படமும் கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படமும் தணிக்கை முடிந்து யுஏ சான்றிதழ் பெற்றுள்ளன. இந்த மாதம் இறுதியில் காலா வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர்.

தற்போது ஏற்கனவே தணிக்கை முடிந்து காத்திருக்கும் படங்களுக்கு வழிவிட்டு காலா ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர். ஜூன் மாதம் ரம்ஜான் பண்டிகை அன்று இந்த படம் வெளியாகும் என்று தெரிகிறது. அதற்கு முன்பாக அடுத்த மாதம் விஸ்வரூபம்-2 படத்தை திரைக்கு கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story