சினிமா செய்திகள்

கரை சேருவாரா அல்லு அர்ஜூன் + "||" + Allu Arjun

கரை சேருவாரா அல்லு அர்ஜூன்

கரை சேருவாரா அல்லு அர்ஜூன்
இளம் வயதிலேயே நடிகர், தயாரிப்பாளர், மாடலிங், பின்னணி பாடகர், சிறந்த நடனக்கலைஞர் என பல துறைகளில் சாதித்திருப்பவர் தெலுங்கு நடிகரான அல்லுஅர்ஜூன்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பிறந்தவர் அல்லுஅர்ஜூன். இவரது தந்தை பிரபல தயாரிப்பாளர் என்பதால், சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ஓரிரு படங்களில் தலைகாட்டியவர், 2003-ம் ஆண்டு கே.ராகவேந்திர ராவ் இயக்கத்தில் ‘கங்கோத்ரி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அடுத்ததாக அல்லு அர்ஜூன் நடித்த படம் ‘ஆர்யா’. இந்தப் படத்தை இயக்கியவர் அப்போதைய அறிமுக இயக்குனரும், தற்போது வெற்றிப்பட இயக்குனரின் வரிசையில் இருப்பவருமான சுகுமார். 2004-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப்பெற்றது. அதன் மூலம் அல்லு அர்ஜூன் முன்னணி இளம் நடிகராக மாற்றம் கண்டார்.

‘ஆர்யா’ படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் நடித்த படங்கள் எதுவும் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. சராசரி மற்றும் சராசரிக்கும் கீழ் என்ற நிலையிலேயே அவரது படங்கள் இருந்து வந்தது. இந்த நிலையில்தான் சுகுமார்- அல்லு அர்ஜூன் கூட்டணியில் 2009-ம் ஆண்டு ‘ஆர்யா-2’ படம் உருவானது. இந்தப்படம் முந்தைய படத்தைப் போல வெற்றி அடையவில்லை. அதே நேரம் கையையும் கடிக்காமல் கரைசேர்ந்தது.

இதையடுத்து 2010-ல் கிரிஷ் இயக்கத்தில் வெளியான ‘வேதம்’ படம் அல்லு அர்ஜூனை சிறந்த நடிகராக ரசிகர்களிடையே கொண்டுபோய் சேர்த்தது. தமிழில் ‘வானம்’ படத்தில் சிலம்பரசன் செய்திருந்தாரே, அதே கேரக்டரைத் தான் ‘வேதம்’ படத்தில் அல்லு அர்ஜூன் செய்திருந்தார். அந்தப் படத்தில் அல்லு அர்ஜூனின் கதாபாத்திரம், ஒரு பகுதியாகவே வரும் என்பதால், தனித்த கதாநாயகனாக இருந்து மிகப்பெரிய வெற்றியை அளிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டத் தொடங்கினார்.

2012-ல் ‘ஜூலாய்’, 2013-ல் ‘இதர்அம்மாயிலதோ’ போன்ற படங்கள் சிறிய வெற்றியைப் பெற்றன. 2014-ம் ஆண்டு சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த ‘ரேஸ்குர்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, தெலுங்குத் திரையுலகில் அவரை முன்னணி கதாநாயகனாக நிலைநிறுத்தியது.

ஆனால் அந்த வெற்றிப்பயணம் தொடர வில்லை. திரிவிக்ரம் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘சன் ஆப் சத்யமூர்த்தி’ எதிர்பார்த்த வெற்றியடையவில்லை. அதன் பிறகு 2016-ம் ஆண்டில் அல்லுஅர்ஜூன் நடிப்பில் வெளியான ‘சராய்னோடு’ படம் ஓரளவு வெற்றியடைந்தது. 2017-ல் வெளியான ‘துவ்வட ஜெகந்நாதம்’ திரைப்படம் தோல்வி.

இதனால் தெலுங்கு திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அல்லு அர்ஜூனுக்கு மீண்டும் மிகப் பெரிய வெற்றி ஒன்று தேவைப்படுகிறது. அந்த வெற்றியை தற்போது அவர் நடித்து வரும் ‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’ என்ற திரைப்படம் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார்.

நாட்டுப் பற்றை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் துடிப்பு மிக்க இளம் ராணுவவீரர் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கிறார். இந்தப் படத்தை தெலுங்கு திரையுலகில் பல வெற்றிப்படங்களுக்கு வசனம் எழுதிய வக்கந்தம் வம்சி இயக்கு கிறார். இது இவரது இயக்கத்தில் வெளியாக உள்ள முதல் படமாகும்.

2002-ம் ஆண்டு ‘கலுசுகோவாலனி’ என்ற படத்தின் மூலமாக வசனகர்த்தாவாக அறிமுகமானார். அதன்பிறகு ஜூனியர் என்.டி.ஆர். நடித்த ‘அசோக்’, மகேஷ்பாபு நடித்த ‘அதிதி’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார். இருப்பினும் ரவிதேஜா நடிப்பில் வெளியான ‘கிக்’ படம் தான் இவரை புகழ் ஏணியில் அமர்த்தியது. தொடர்ந்து அவர் வசனம் எழுதிய ‘ஊசரவல்லி’, ‘எவடு’, அல்லு அர்ஜூன் நடிப்பில் ‘ரேஸ்குர்ரம்’, ‘டெம்பர்’, ‘கிக்-2’ என அவர் வசனம் எழுதிய பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களாகவே அமைந்தன.

அதைத் தொடர்ந்து தான் இப்போது அவர் ‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’ என்ற படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனுடன் சரத் குமார், அர்ஜூன், அனு இம்மானுவேல், கிஷோர், தாக்கூர் அனுப் சிங், நதியா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஏற்கனவே அல்லு அர்ஜூன் நடித்த ‘எவடு’, ‘ரேஸ்குர்ரம்’ ஆகிய படங் களுக்கு வசனம் எழுதியவர் வக்கந்தம் வம்சி. இந்த இருபடங்களும் மிகப் பெரிய வெற்றியை அடைந்த படங்கள். எனவே இந்த வெற்றிக்கூட்டணியில் தயாராக இருக்கும் இந்தப் படமும் வெற்றிப்படமாக அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தப் படம் தமிழில் ‘என் பேர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற பெயரில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதிக்கவும் அல்லு அர்ஜூன் முடிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தின் வெற்றியைப் பொறுத்து, அடுத்து அவர் நேரடியாக தமிழ் படங்களில் நடிப்பது என்றும் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கும் இந்தப்படம், நாட்டுப்பற்றை நம்பி களம் இறங்கியிருக்கும் அல்லு அர்ஜூனை கரை சேர்க்குமா? என்பதை பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.