நடிகர்-நடிகைகள் சம்பள குறைப்பு பற்றி ஆலோசனை கூட்டம்


நடிகர்-நடிகைகள் சம்பள குறைப்பு பற்றி ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 21 April 2018 10:45 PM GMT (Updated: 21 April 2018 7:10 PM GMT)

நடிகர்-நடிகைகள் சம்பள குறைப்பு பற்றி ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

சென்னை,

நடிகர்-நடிகைகளின் சம்பளத்தை குறைப்பது பற்றி, சென்னையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. நடிகர்-நடிகைகளின் உதவியாளர்களுக்கு அந்தந்த நடிகர்-நடிகைகளே சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

சினிமா படங்களை திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, தமிழ் பட தயாரிப்பாளர்கள் கடந்த 48 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள். இதனால், தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிடப்படவில்லை. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, அமைச்சர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், தயாரிப்பாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து, வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதைத்தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி, எல்லா நடிகர்-நடிகைகளுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டு இருந்தது. சிம்பு, ஜீவா, பரத், அரவிந்தசாமி உள்பட ஒரு சில நடிகர்களே ஆலோசனை கூட்டத்துக்கு வந்திருந்தார்கள்.

நடிகர்-நடிகைகளின் சம்பள குறைப்பு பற்றியும், அவர்களின் உதவியாளர்கள் சம்பளத்தை அந்தந்த நடிகர்-நடிகைகளே ஏற்றுக் கொள்வது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கு முன்னுதாரணமாக நடிகர் சூர்யா தனது உதவியாளர்களின் சம்பளத்தை அவரே ஏற்றுக் கொண்டார். அவருக்கு கூட்டத்தில் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

உதவியாளர்கள் என்ற பெயரில், சில நடிகைகள் ஐந்து அல்லது ஆறு பேர்களை படப்பிடிப்புக்கு அழைத்து வருவது பற்றி விவாதிக்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுப்பது பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது. இதற்கு விரைவில் தீர்வு காண்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Next Story