நடிகை பிபாஷா பாசு நடுராத்திரியில் ரவுடிகளிடம் சிக்கியபோது..


நடிகை பிபாஷா பாசு நடுராத்திரியில் ரவுடிகளிடம் சிக்கியபோது..
x
தினத்தந்தி 22 April 2018 6:26 AM GMT (Updated: 22 April 2018 6:26 AM GMT)

பிரபலமான நடிகைகளின் வளர்ச்சியை ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் பள்ளிப் பருவத்தில் இருந்தே அதற்கான அடிப்படை தகுதிகளை வளர்த்து வந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

பிரபலமான நடிகைகளின் வளர்ச்சியை ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் பள்ளிப் பருவத்தில் இருந்தே அதற்கான அடிப்படை தகுதிகளை வளர்த்து வந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. இந்தி திரை உலக பிரபலம் பிபாஷா பாசுவுக்கு அழகிப் போட்டிக்கான வாய்ப்பு 16 வயதிலே கிடைத்திருக்கிறது. பள்ளிப்பருவத்திலே அதை பயன் படுத்திக்கொண்டு அவர் எப்படி எல்லாம் வளர்ந்து, திரை உலகில் நிலையான இடத்தை பிடித்தார் என்பதை மனந்திறந்து சொல்கிறார்:

‘‘நான் 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றிருந்தேன். அப்போது அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. ஒருவர் என்னை அணுகி, சூப்பர் மாடல் போட்டிக்கான ஆரம்பசுற்றுப் போட்டிகள் நடக்க இருக்கின்றன. அதில் நீங்கள் கலந்து கொள்ள விரும்புகிறீர்களா? என்று கேட்டார். நான் ஒரு சயின்ஸ் குரூப் மாணவி, மாடலிங் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. ஆனால் அவர்கள், கொல்கத்தாவில் இருந்து 100 பெண்களை தேர்வு செய்யப்போவதாகவும், நான் ஒரு படிவத்தை நிரப்பிக்கொடுத்தால் போதும் என்றும் வற்புறுத்தினார்கள். நானும் கலந்துகொள்ள சம்மதித்து இடம்பெற்றேன்.

சில நாட்களிலேயே அந்த 100 பேர் பட்டியல், 17 பேராகக் குறைக்கப்பட்டது. நான் ஆச்சரியப்படும்விதமாக, அந்தப் பட்டியலில் என் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஒரு விருந்தும், அதைத் தொடர்ந்து இறுதிச்சுற்றுப் போட்டியும் நடக்கும் என்று அறிவித்தார்கள். நான் ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொள்ளப் போவதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு போட்டியில் கலந்துகொண்டேன். இறுதிச்சுற்றில் என்னிடம் ஏதோ சில கேள்விகள் கேட்டார்கள், நானும் வாய்க்கு வந்ததைச் சொன்னேன். வீடு திரும்பிய நான், அப்படியே அந்தச் சம்பவத்தை மறந்துவிட்டேன்.

ஆனால் மறு வாரம் எங்கள் வீட்டுக்கு போன் செய்த சூப்பர் மாடல் மெகர் ஜெசியா, சூப்பர் மாடல் போட்டிக்கு கொல்கத்தாவில் இருந்து 3 பெண்களில் ஒருவராக நானும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். அத்துடன் அவர் என்னிடம் செல்லக் கோபமாக, ‘ஏம்மா... எங்களிடம்கூடச் சொல்லாமல் போட்டியில் கலந்துக்கிட்டிருக்கியே?’ என்றார். அதற்கு நான், விடுமுறை நாளாக இருந்ததால் சும்மா ஒரு ஜாலிக்காக அதில் கலந்துகொண்டதாகக் கூறினேன்.

மெகர் உள்ளிட்டோர், என்னை மும்பை அழைத்துச் செல்வதற்கு, என் அம்மாவிடம் வற்புறுத்தி அனுமதி பெற்றார்கள். என்னை நன்றாகப் பார்த்துக்கொள்வதாகவும், எங்கள் குடும்பத்தில் இருந்து பணம் எதுவும் செலவழிக்கத் தேவையில்லை என்றும் அவர்கள் கூறினார்கள். அப்பாவிடமும் அனுமதி பெற்ற பின்பு நான் வீட்டிலிருந்து மும்பைக்குப் பறந்து விட்டேன்.

நானே நம்பமுடியாத வகையில் மும்பையில் நடந்த போட்டியில் நான் வென்றேன். அதைத் தொடர்ந்து, மியாமியில் நடந்த சர்வதேச அழகுப் போட்டிக்கு என்னை அனுப்பினார்கள். சில நாட்களில் வீடு திரும்பி படிப்பைத் தொடருவேன் என்று நினைத்துக்கொண்டிருந்த எங்கள் குடும்பத்துக்கு அதைக் கேட்டு அதிர்ச்சி.

ஆனால் கடைசியில் ஒருவழியாய் மனம் மாறினார்கள். அப்போது எனக்கு 16 வயதுதான். தனியாக முதல் வெளிநாட்டுப் பயணம். ஆனால் சர்வதேசப் போட்டியில் நான் ஏதோ சரியாய் செயல்பட்டிருக்க வேண்டும். என்னை போர்டு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் செய்தார்கள். நான் நியூயார்க்கில் தங்கியிருந்து ஒரு மாடலாக பணிபுரியத் தொடங்கினேன். எனக்கு மாடலிங் பிடித்துப் போனது, அதைத் தொடரவே விரும்பினேன். நான் எனது பெற்றோரிடம், விதி எனக்கு விதித்த பாதையில் போகிறேன், திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொள்கிறேன் என்று கூறினேன்.

ஆனால் ஒரு மாடலாக சர்வதேச அளவில் தடம் பதிப்பது கடினமாக இருந்தது. என்னுடன் மாடலிங்கில் ஈடுபட்ட மற்ற பெண்கள் அதற்கு நன்றாகத் தயாராகியிருந்தார்கள். அவர்களில் பலரும் மிகச் சாதாரணமான பின்னணியில் இருந்து வந்தவர்கள். சில ஐரோப்பிய பெண்களிடம் சுத்தமாக காசே இல்லை. ஆனால் நானோ வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவள், ரொம்பச் செல்லமாக வளர்க்கப்பட்டவள்.

எனக்கு சமைக்கத் தெரியாது என்பதால், உடன் தங்கி யிருந்த சக மாடல்கள்தான் எனக்கு சமைத்துக் கொடுப்பார்கள். ஒரு உணவு டின்னை எப்படித் திறக்க வேண்டும் என்பது கூட எனக்குத் தெரியாது. பஸ், ரெயில் என்று பொது போக்குவரத்து வசதியைப் பயன்படுத்தியதே இல்லை. எனவே, மெட்ரோ ரெயிலில் எப்படிப் பயணிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.

நான் நியூயார்க்கில் இருந்து ஓராண்டு கழித்து இந்தியா திரும்பியபோது சூழல் கடினமாகியிருந்தது, யாரும் என்னை நினைவில் வைத்திருக்கவில்லை. ஒரு மாடலிங் ஏஜன்சியினர் என்னை, ஒரு மோசமான பகுதியில் தங்க வைத்தனர். மும்பையில் எனது நண்பரும் புகைப்படக் கலைஞருமான பரோ சோத்தியா, முரடர்கள், ரவுடிகள் நிறைந்த அந்தப் பகுதியில் நான் தங்க வைக்கப்பட்டது குறித்து வருத்தப்பட்டார். நான் அங்கிருந்து தினமும் அதிகாலையில் கிளம்பிவிடுவேன், தாக்குவதற்குத் தயாராய் எப்போதும் என் பேக்கில் ஒரு சுத்தியல் இருக்கும். நல்லவேளையாக நான் அதைப் பயன்படுத்தும் நிலை ஏற்படவில்லை.

சிறந்த புகைப்படக் கலைஞர்களுக்கு எனது படத்தை அனுப்ப பரோ உதவி செய்தார். அதன் விளைவாக, விரைவிலேயே எனக்கு நல்ல வாய்ப்புகள் வரத் தொடங்கின. தினமும் இரவு வெகு நேரம் கழித்துத்தான் தங்குமிடத்துக்குத் திரும்புவேன், பாதி நாட்கள், திரும்ப அழைத்துவரும் காரிலேயே உறங்கி யிருப்பேன்.

ஒரு நாள் இரவு அப்படி நேரங்கழித்து திரும்பிக் கொண்டிருந்தபோது, சில ரவுடிகள் எங்கள் காரை பின்தொடரத் தொடங்கினர். எனது கார் டிரைவர் எப்படியோ அவர்களை ஏமாற்றி, என்னைப் பத்திரமாக என் இருப்பிடத்தில் கொண்டுபோய் சேர்த்தார். கடைசியில் ஒருவழியாக நான் அந்தப் பகுதியில் இருந்து மாறி, பாதுகாப்பான பிரீச் கேண்டி பகுதிக்குப் போய்ச் சேர்ந்தேன்.

மாடலிங் என்பது மிகவும் போட்டி நிறைந்த பணி, இங்கு நுழைவதே கடினம். ஆனால் நான் எப்போதும் என் தன்மானத்தை விட்டுக்கொடுத்ததே இல்லை. ஒருமுறை, ஒரு பேஷன் ஷோவின்போது சீனியர் மாடல்கள் சிலர், என்னையும் இன்னொரு புதுமுகப் பெண்ணையும் காபி எடுத்துவரும்படி கூறினார்கள்.

அந்த புதுப்பெண் எழுந்துவிட்டாள், ஆனால் நான் அசையவே இல்லை. ‘உங்களுக்கு வேணும்னா நீங்களே போய் எடுத்துக்கங்க’ என்றேன். எனது இம்மாதிரியான செயல்பாடுகளால், நான் நிறைய கிண்டலடிக்கப்படுவதும் நடக்கும். அதிர்ஷ்டவசமாக சிலர் எனக்கு ஆதரவாக இருந்தனர், எப்போதும் அவர்கள் என்னை கவனித்துக்கொண்டனர். ஆனால் சீனியர் மாடல் களின் தொந்தரவு எனக்குத் தொடர்ந்து கொண்டே இருந்தது.

எனது முதல் படமான ‘அஜ்னபி’ படத் தயாரிப்பாளர்கள் என்னை ஒரு பேஷன் ஷோவில் பார்த்துவிட்டு, இரட்டை இயக்குநர்கள் அப்பாஸ் - மஸ்தானிடம் என்னைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதில் எனக்கு எதிர்மறை கதாபாத்திரம்தான். ஆனால் இயக்குநர்கள் அப்பாசும் மஸ்தானும் தங்கமானவர்கள். அவர்கள் என்னை ஒரு பெரிய நட்சத்திரம் போல நடத்தினார்கள். ‘அஜ்னபி’ படம் வெளிவந்ததும், வெற்றி பெற்றதும், அதற்குப் பின் நடந்தவையும் வரலாறு!’’ - பெருமிதத்தோடு முடிக்கிறார், பிபாஷா பாசு.

Next Story