என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்


என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
x
தினத்தந்தி 22 April 2018 6:31 AM GMT (Updated: 22 April 2018 6:31 AM GMT)

பிரபல நடிகை என்பது மட்டுமல்ல, மேலும் பல தகுதிகளையும் கொண்டவர் சுருதிஹாசன். பாட்டு, மனோதத்துவம் போன்றவைகளில் தேர்ச்சி பெற்றவர்.

பிரபல நடிகை என்பது மட்டுமல்ல, மேலும் பல தகுதிகளையும் கொண்டவர் சுருதிஹாசன். பாட்டு, மனோதத்துவம் போன்றவைகளில் தேர்ச்சி பெற்றவர். அமெரிக்க இசைக் கல்லூரியில் சங்கீதம் கற்றுத்தேர்ந்தவர். கமல்ஹாசனின் மூத்தமகள். அழகும், அறிவும் நிறைந்த இவர், தான் கடந்து வந்த பாதையை விளக்குகிறார்!

நட்சத்திர குழந்தையாக நான் பிறந்து வளர்ந்ததால், பப்ளிசிட்டி வெளிச்சம் சிறுவயதில் இருந்தே என் மீது விழத் தொடங்கிவிட்டது. எங்கள் குடும்பம் நடிகர், நடிகைகள் நிறைந்தது. சுஹாசினி, மணிரத்னம், சாருஹாசன், சந்திரஹாசன், என் அப்பா, அம்மா.. இப்படி எல்லோரும் ஒருவரைவிட ஒருவர் சிறந்தவர்கள். அவர் களது அனுக்கிரகம் எனக்கு உண்டு. ஆனால் இந்த துறையில் நிலைத்துநிற்க பாரம்பரியம் மட்டும் போதாது என்று நான் நம்பு கிறேன். அப்பாவின் பெயரை எந்த லாபத்திற்காகவும் நாங்கள் பயன்படுத்திக்கொண்டதில்லை. கமல்ஹாசனின் மகள் என்ற ஒரே ஒரு பலத்தில் மட்டும் நான் நின்றிருந்தால் ஒன்றிரண்டு படத்தோடு என் திரை வாழ்க்கை முடிந்திருக்கும். எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் தனித்துவம் பெறவேண்டும் என்று அப்பா எதிர்பார்ப்பார். நானும், அக்ஷராவும் அதைதான் பின்தொடர் கிறோம்.

கமல்ஹாசனை நடிகராகவும், அப்பாவாகவும் நான் காண்கிறேன். அவர் வாழ்க்கை என்னில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அவர் அத்துமீறி நுழையமாட்டார். அவர் விருப்பத்தை ஒருபோதும் எங்களிடம் திணித்ததில்லை. யாராவது டைரக்டரின் பெயரை குறிப்பிட்டு அவரிடம் கதை கேள் என்றும் சொன்னதில்லை. எங்கள் திறமைகளை அங்கீகரிக்கும் சிறந்த தந்தை அவர் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். நான் இசைஅமைப்பாளராக முதல் அடி எடுத்துவைத்தபோது, உருவாக்கிய முதல் பாடலைப் பாடும் தைரியத்தை அவர்தான் தந்தார். அவர் சுவாசிப்பதுகூட சினிமாவைத்தான் என்று சொல்லலாம். இந்த வயதிலும் அந்த அளவுக்கு அதில் ஆழ்ந்து போகிறார். அந்த அர்ப்பணிப்பு உணர்வு என்னை சிலிர்க்கவைக்கிறது.

எங்கள் வாழ்க்கைக்கு தேவையானதை தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரத்தையும் அப்பா எங்களுக்கு தந்திருக்கிறார். அதனால் அவர் வாழ்க்கையில் எதை தேர்ந்தெடுத்தாலும் அது எங்களுக்கும் சம்மதம்தான். வாழ்க்கையில் அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நல்லதற்காகத்தான் இருக்கும். அவர் அரசியலில் இறங்கியதையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார். அவரது உண்மை, நீதி, அர்ப்பணிப்பு போன்றவை எல்லாம் இதுவரை குடும்பத்தில் உள்ளவர்களுக்காக மட்டும் இருந்தது. இனி அது தமிழக மக்களுக்கும் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது.

அப்பா என்னை சிந்தனைவாதி என்று சொல்வார். நான் அவரது மகளாக இல்லாமலிருந்தாலும் என்னை பற்றி அவர் அப்படித்தான் கூறியிருப்பார். அந்த அளவுக்கு அவர் மற்றவர்களை அங்கீகரிப்பவர். எனது எழுத்து, இசை, நடிப்பு எல்லாம் அவருக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் முதலில் அப்பாவைதான் அழைப்பேன். எப்போதும் உண்மையின் பக்கமிருந்து சரியான தீர்வு சொல்வார். அவர் எங்களை முழுமையாக நம்புகிறார். அந்த நம்பிக்கை காலம் முழுக்க தொடரும்.

சபாஷ் நாயுடு படத்தில் நாங்கள் முதல் முறையாக இணைந்து நடித்தோம். படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுவிட்டால் அவர் எனது தந்தை மட்டுமல்ல, டைரக்டரும், சக நடிகராகவும் ஆகிவிடுவார். நடிக்கும்போது நாங்கள் இருவரும் இருவேறு மனிதர்கள் என்பது எங்கள் இருவருக்குமே தெரியும். ஒரு முறை அவர் எனது கதாபாத்திரத்தின் பெயரை கூறி அழைக்காமல், என் நிஜ பெயரை கூறி அழைத்துவிட்டார். நான் உடனே தைரியமாக தவறான பெயரை உச்சரித்துவிட்டீர்கள் என்று கூறினேன். அதை அவர் வரவேற்றார்.

நான் வாழ்க்கையில் சந்தித்தவர்களில் மிகவும் தைரியமானவர் என் தாயார் சரிகா. சிறப்பாக சிந்திப்பவர். வெளிப்படையானவர். சினிமாவில் அவர் உச்சத்தில் இருந்தபோது திருமண முடிவெடுத்து குடும்பத்தலைவியானார். அது அவர் எடுத்த உறுதியான தைரியமான முடிவு. அதன் பிறகு வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் அவர் நேர்மறையாக மட்டுமே எடுத்துக்கொண்டார். ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது என்ற நிலையில் இருவரும் பிரிந்தார்கள். அவர்கள் எடுத்த அந்த முடிவை நான் மதிக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் நான் இந்த பருவத்தில்கூட திருமணத்தை பற்றி சிந்திக்க தொடங்கவில்லை. இப்போது என் வளர்ச்சிதான் முக்கியம்.

நானும், அக்ஷராவும் மும்பையிலே வசித்தாலும் வெவ்வேறு வீடு களில்தான் குடியிருக்கிறோம். யாரும் கூடுதலாக உபதேசம் செய்வதோ, ஆலோசனை கூறுவதோ என்னைப் போல் அவளுக்கும் பிடிக்காது. நாங்கள் இருவரும் அப்பா- அம்மாவை பார்த்து வளர்ந்தவர்கள். ஷமிதாப் படத்தில் அவள் நன்றான நடித்திருந்தாள். அப்பா டைரக்டு செய்யும் சபாஷ் நாயுடுவில் துணை இயக்குனராக பணியாற்றினாள். இப்போது ஒரு தமிழ் சினிமாவில் பிசியாக இருக்கிறாள்.

நானும் அவளும் நல்ல தோழிகள். இரண்டும் பெண்களாக இருப்பதால் கிடைத்த பலன் அது. பெரும்பாலும் ஒன்றாக ஷாப்பிங் செல்வோம். எல்லா விஷயங்களை பற்றியும் விவாதிப்போம். சினிமா, பேஷன், அழகு, கிசுகிசு போன்ற அனைத்தும் அதில் இடம்பெறும். மற்றவர்கள் விருப்பத்திற்கு நான் ஒருபோதும் உடை அணிவதில்லை. காலையில் விழிக்கும்போது எந்த உடை மீது அதிக ஆர்வம் ஏற்படுமோ அதை உடுத்துவேன்.

கிசுகிசுக்களை பார்த்து ஒருபோதும் நான் தளர்ந்து போவதில்லை. நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் அதையும் பாசிட்டிவ்வாக எடுத்துக்கொள்வேன். என்னை பற்றி கிசுகிசு பரப்ப, எனக்காகவும் நேரம் ஒதுக்கும் அளவுக்கு நான் முக்கியத்துவமாக இருக்கிறேன் அல்லவா என்று நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்வேன். கெட்டதை நினைத்து வருத்தப்படுவதைவிட அதில் இருக்கும் நல்லதை கண்டுபிடிப்பது என் வழக்கம். இந்த பழக்கம் என் அம்மா விடம் இருந்து நான் கற்றுக்கொண்டது.

நான் கவர்ச்சியாக நடிப்பதாக நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. நான் எவ்வளவு கிளாமராக நடித்தாலும் என் சுபாவத்தில் மாற்றம் ஏற்படாது. பெண்கள் எல்லாவற்றிலும் ஜொலிக்கவேண்டும். எதற்கும் பயந்து பின்வாங்கிவிடக் கூடாது என்பது என் உறுதியான கருத்து. இப்படி சொல்வது பெண்ணுரிமை சிந்தனை என்று யாராவது நினைத்தால், அதுவும் சரிதான். சிலநாள் மாலை நேரங்களில் நானும், அப்பாவும் ஜாலியாக பாட்டுப் பாடுவோம். அதையும் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பங்கிடுவோம்.

ஒப்புக்கொண்ட படங்களில் சிறப்பாக நடிக்கவேண்டும். பாட்டுக்கு இனி சற்று அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். எழுதவும் ஆசைப்படுகிறேன். எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்கும் முழு சுதந்திரம் என்னிடமே இருப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது.

Next Story