சினிமா செய்திகள்

“தயாரிப்பாளர்களுக்கு தெலுங்கு கதாநாயகர்கள் உதவியாக இருக்கிறார்கள்”பட அதிபர் ஞானவேல்ராஜா பேச்சு + "||" + Film Chancellor GnanaVelraja Speech

“தயாரிப்பாளர்களுக்கு தெலுங்கு கதாநாயகர்கள் உதவியாக இருக்கிறார்கள்”பட அதிபர் ஞானவேல்ராஜா பேச்சு

“தயாரிப்பாளர்களுக்கு தெலுங்கு கதாநாயகர்கள் உதவியாக இருக்கிறார்கள்”பட அதிபர் ஞானவேல்ராஜா பேச்சு
“தெலுங்கு பட கதாநாயகர்கள் குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள்” என்று பட அதிபர் ஞானவேல்ராஜா கூறினார்.
சென்னை,

தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் நடித்த ‘நா பேரு சூர்யா...நா இல்லு இந்தியா’ என்ற தெலுங்கு படம் தமிழில், ‘என் பெயர் சூர்யா...என் வீடு இந்தியா’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் சரத்குமார், அர்ஜுன், அனு இமானுவேல் ஆகியோர் நடித்துள்ளனர். வி.வம்சி டைரக்டு செய்திருக்கிறார். ஸ்ரீஷா ஸ்ரீதர் லகடபாடி தயாரித்துள்ளார்.

படக்குழுவினர், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் செயலாளர் கே.இ.ஞானவேல்ராஜா இதில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

ரூ.15 கோடி சம்பளம்

“தெலுங்கு பட உலகில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கின்றன. ரூ.100 கோடி வியாபாரம் நடக்கும் ஒரு படத்தின் கதாநாயகன் ரூ.15 கோடி சம்பளம் வாங்குகிறார். இதனால் அந்த படத்துக்கு ரூ.60 அல்லது ரூ.70 கோடியை தயாரிப்பாளர் செலவு செய்து, படத்தை பிரமாண்டமாக எடுக்க முடிகிறது. அந்த படத்தின் பிற மொழி ‘டப்பிங்’ மற்றும் ‘சாட்டிலைட்’ உரிமை ரூ.20 கோடியை தாண்டி வியாபாரம் ஆகிறது.

தமிழ் படங்களை எடுத்துக் கொண்டால், ரூ.100 கோடி வியாபாரம் ஆகும் ஒரு படத்தின் கதாநாயகன், ரூ.50 கோடி சம்பளம் கேட்கிறார். அதில் ரூ.10 கோடியை ‘அட்வான்ஸ்’ ஆக தரவேண்டும் என்பார். ரூ.15 கோடி சம்பளம் வாங்கும் தெலுங்கு கதாநாயகன், ரூ.10 லட்சம் ‘அட்வான்ஸ்’ வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்க வந்து விடுகிறார்.

ஆரோக்கியமான உறவு

தெலுங்கு நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ஆரோக்கியமான உறவு இருக்கிறது. தெலுங்கு பட உலகம் சுபிட்சமாக இருப்பதற்கு காரணம், தெலுங்கு நடிகர்- நடிகைகள் நியாயமான சம்பளம் வாங்குகிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். தமிழ் சினிமா துறை, அது மாதிரி இல்லை. இங்கு சுயநலத்தோடு இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் எல்லோரும் நியாயமாக இல்லை என்று நான் சொல்லவில்லை. ஒட்டு மொத்தமாக மாற்றம் கொண்டு வரவேண்டும். படத்தின் வியாபாரத்தை கணக்கிட்டு, நடிகர்-நடிகைகள் இவ்வளவு சம்பளம்தான் வாங்க வேண்டும் என்ற கருத்தை நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி முன்மொழிந்து இருக்கிறார். இதை ஒரு தயாரிப்பாளராக வரவேற்கிறேன். எல்லா நடிகர்-நடிகைகளும் இதை பின்பற்ற வேண்டும்.

தினமும் ரூ.3 லட்சம்

2 படங்களில் நடித்துள்ள ஒரு நகைச்சுவை நடிகர் தனக்கு தினமும் ரூ.3 லட்சம் சம்பளம் வேண்டும் என்று கேட்கிறார். ‘லொகேஷன்’ செலவை தவிர்த்து, நடிகர்கள் சம்பளமாக தினமும் ரூ.15 லட்சம் எடுத்து வைத்தால்தான் படப்பிடிப்பை நடத்த முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது. இந்த குறைகளை போக்க வேண்டும். குறைகள் களையப்படவில்லை என்றால், என் போன்ற தயாரிப்பாளர்கள் ஆந்திராவுக்கு போய் குடியேறும் நிலை ஏற்படும்.”

இவ்வாறு ஞானவேல்ராஜா பேசினார்.