சினிமா செய்திகள்

பெண் வேடத்தில் அசத்தும் உன்னிமுகுந்தன் + "||" + Unni Mukundan at Magnificent in Female role

பெண் வேடத்தில் அசத்தும் உன்னிமுகுந்தன்

பெண் வேடத்தில் அசத்தும் உன்னிமுகுந்தன்
மலையாள சினிமாவைப் பொறுத்தவரை, எப்போதுமே கதைதான் கதாநாயகன் என்றாலும், அந்தக் கதைக்கான நாயகனாக தங்களை முன்னிறுத்திக்கொள்வதில், அங்குள்ள நாயகர்கள் எப்போதும் போராடுவார்கள்.
 மலையாளத்தில் 40 ஆண்டுகளைக் கடந்து விட்ட மோகன்லால், மம்முட்டி போன்ற உச்சநடிகர்கள் கூட, இப்போதும் இளம் கதாநாயகர்களுக்கு சவால்விடும் வகையில் வித்தியாசமான தோற்றங்களிலும், வித்தியாசமான கதைகளிலும் நடித்து, ரசிகர்களைத் தங்களிடமே தக்கவைத்துக்கொள்ள முனைப்புடன் செயல்படுகிறார்கள்.


எவ்வளவு தோற்றங்களில் நடித்தாலும், ஒரு கதாநாயகன் பெண் வேடத்தில் நடிக்கும்போது, அந்த தோற்றத்திற்கும், அவர் நடிக்கும் படத்திற்கும் ஒரு எதிர்பார்ப்பு உறுதியாக வந்து சேர்ந்துவிடும். உலக சினிமாவில் இருந்து உள்ளூர் சினிமா வரை பல கதாநாய கர்கள் தங்களை பெண் வேடத்தில் திரையில் காட்டியிருக்கிறார்கள். அவர்களில் பலரது படங்கள் பெரும் வெற்றியையும் பெற்றிருக்கின்றன. இந்தியாவில் பல நாயகர்கள், பெண் வேடத்தில் நடித்துக் கலக்கியிருக்கிறார்கள்.

குறிப்பாக தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனில் இருந்து கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரசாந்த், விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் என்று பட்டியல் நீள்கிறது. இப்போதும் கூட விஜய் சேதுபதி ஒரு படத்தில் பெண் வேடத்தில் நடித்து வருகிறார். எவ்வளவோ கதாநாயகர்கள் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒரு சிலருக்குத்தான் அந்த கெட்டப் பொருந்தி போயிருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ‘ஆணழகன்’ என்ற திரைப்படத்தில் நடித்த பிரசாந்த், பெண் வேடத்தில் நூற்றுக்குநூறு சதவீதம் பொருந்திப் போயிருந்தவர் என்றால் அது மிகையல்ல. அடுத்ததாக கடந்த 2016-ம் ஆண்டில் வெளியான ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயனின் பெண் வேடம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

மலையாளத்தில் மோகன்லால், திலீப், பிருத்வி ராஜ் உள்ளிட்ட மிகச்சில கதாநாயகர்களே பெண் வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ‘ஞான் மேரிக்குட்டி’ என்ற படத்தின் பஸ்ட் லுக் டீசர் வெளியானது. இந்த டீசர் மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது, மலையாள சினிமாவை ரசிக்கும் பிற மொழி ரசிகர்களையும் கவர்ந் திழுத்தது. மலையாளத்தில் முன்னணி இயக்குனரான ரஞ்சித் சங்கரின் இயக்கத்தில், ஜெயசூர்யா நடிக்கும் திரைப்படம் தான் ‘ஞான் மேரிக்குட்டி.’ இந்தப் படத்தின் பஸ்ட் லுக் டீசரில், அடர்ந்த தாடியுடன் இருக்கும் ஜெயசூர்யா கண்ணாடியின் முன் நின்று கொண்டிருக் கிறார். அவரிடம் இருந்து கண்ணாடிக்கு திரும்பு கிறது கேமரா. அப்போது கண்ணாடியில் ஜெயசூர்யா, தாடி, மீசை இல்லாமல் புடவை கட்டி பெண் வேடத்தில் தோற்றம் அளிப்பது போல், அந்த பஸ்ட் லுக் டீசர் முடிந்திருந்தது.

இந்த டீசரின் பரபரப்பே மலையாள சினிமாவில் இன்னும் முடிவுறாத நிலையில் மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சாணக்கிய தந்திரம்’ படத்தில் அவர் பெண் வேடத்தில் தோன்றும் புகைப்படங் கள் வெளிவந்து வைரலாகி இருக்கிறது. மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும், உன்னி முகுந்தனின் முதல் திரை அறிமுகம் தமிழில்தான். ஆம்! தனுஷ் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த ‘சீடன்’ படத்தில்தான் உன்னிமுகுந்தன் அறிமுகமானார். இதையடுத்து மலையாளத்தில் சிறியதும், பெரியதுமாக பல படங்களில் நடித்திருந்தாலும், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியான ‘ஜனதா கேரேஜ்’ படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், மலையாள உச்ச நடிகர் மோகன்லால் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார் உன்னி முகுந்தன். வில்லன் கதாபாத்திரம் என்றாலும் அதைச் சிறப்பாகச் செய்ததால் அவருக்கு நற்பெயர் கிடைத்தது. இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் ‘மாஸ்டர்பீஸ்’, இந்த ஆண்டு தொடக்கத்தில் ‘பாகமதி’, மார்ச் மாதம் ‘இறா’ என தொடர்ச்சியாக வெளியான மூன்று படங்கள் உன்னி முகுந்தனுக்கு இன்னும் சிறப்பைச் சேர்த்துள்ளன. இதில் ‘மாஸ்டர்பீஸ்’ படத்தில் மோகன்லாலுடனும், ‘பாகமதி’ படத்தில் அனுஷ்காவுடனும் இணைந்து நடித்திருந்தார்.

இந்த நிலையில்தான் இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சாணக்கிய தந்திரம்’ படத்தின் பெண் வேட தோற்றம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தில் உன்னி முகுந்தன், பெண் தோற்றம், சாமியார் என மேலும் சில தோற்றங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக தமிழில் ‘நெடுஞ்சாலை’ படத்தில் நடித்த ஷிவதா நடிக்கிறார். திரில்லர் வகையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை கண்ணன் தாமரைக்குளம் இயக்கியிருக்கிறார். இவர் ஜெயராம் நடிப்பில் ‘ஆடுபுலியாட்டம்’ என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர். இந்தப் படத்தில் உன்னிமுகுந்தனின் தோற்றம், அச்சு அசல் பெண் போலவே இருப்பதுதான் ரசிகர்களிடையே வைரலாகி இருக்கிறது.

மோலிவுட்டில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், உன்னி முகுந்தன் இதுவரை மலையாளத்தில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்கவில்லை. அந்தக் குறையை, தான் பெண் வேடத்தில் நடித்திருக்கும் ‘சாணக்கிய தந்திரம்’ படம் தீர்த்து வைக்கும் என்று நம்புகிறார், உன்னிமுகுந்தன்.

எந்த ஒரு நாயகனும் ஒரே போன்ற தோற்றத்துடனோ அல்லது ஒரே மாதிரியான கதாபாத்திரத்திலோ நடித்துக் கொண்டிருந்தால், அவர்களின் ரசிகர்களால் வேண்டுமானால் ரசிக்கப்படலாமே தவிர, பொதுவான சினிமா பார்வையாளர்களால் ஓரங்கட்டப்படுவார்கள் என்பதே உண்மை. அதனால் இப்போதெல்லாம் கதாநாய கர்களே தங்களுக்கான கதையையும், கதாபாத்திரங்களை யும் வித்தியாசமாகவும், விறுவிறுப்பு நிறைந்ததாகவும் தேர்வு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மகனைத் தேடிய பெற்றோர்


‘சாணக்கிய தந்திரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, தன்னுடைய பெற்றோரை ஷூட்டிங் பார்க்க வரும்படி அழைத்திருக்கிறார் உன்னி முகுந்தன். அவர்கள் அங்கு சென்றபோது, அவர்களிடம் ஒரு பெண் வளைய வளைய வந்து பேசியுள்ளார். அவர்களோ, ‘இந்தப் பெண் யாரென்றே தெரியவில்லை. ஆனால் நம்மை முன்பே தெரிந்தது போல வளைய வளைய வந்து பேசுகிறாளே’ என்று நினைத்ததுடன், வரச் சொன்ன மகனைக் காணாமல் தேடியுள்ளனர். பிறகுதான் தெரிந்திருக்கிறது, தங்களிடம் வளைய வந்து பேசியது தங்களின் மகன்தான் என்று. அவர்கள் அச்சு அசலாக பெண் போலவே இருந்த தங்களின் மகனை சில நிமிடங்கள் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.