ஹாலிவுட்டின் ‘இஞ்சி இடுப்பழகி’..!


ஹாலிவுட்டின் ‘இஞ்சி இடுப்பழகி’..!
x
தினத்தந்தி 28 April 2018 8:20 AM GMT (Updated: 28 April 2018 8:20 AM GMT)

இஞ்சி இடுப்பழகியாக இருந்த அனுஷ்கா, ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படத்திற்காக குண்டுப் பெண்ணாக மாறினார். அதிக எடை கொண்ட குண்டுப் பெண்ணாக நடிக்க வேண்டும் என்பதற்காக நிஜமாகவே குண்டானார்.

ஒல்லி பெல்லியாக இருந்த அனுஷ்கா, இரண்டே மாதங்களில் கொழு கொழுவென மாறியிருந்ததைப் பார்த்து, திரையுலகமும், ரசிகர்களும் ஆச்சரியம் அடைந்தனர்.

ஆனால் அந்த நேரத்தில் அனுஷ்காவின் இந்த மாற்றத்தை, சக நடிகைகள் கிண்டல் செய்தனர். இருப்பினும் அனுஷ்கா உடல் எடையைக் குறைத்துவிட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்கான படப்பிடிப்புகள் முடிந்தன. படமும் வெளியானது. ஆனால் அனுஷ்காவால் உடல் எடையை உடனடியாகக் குறைக்க முடியவில்லை. யோகா, உடற்பயிற்சி, கட்டுக்கோப்பான உணவுகள் என இயன்றதை முயன்றும் பலனில்லை. அனுஷ்கா அதிக உடல் எடையால் சிரமப்படுவதைப் பார்த்த பாகுபலி படக்குழுவினர், அனுஷ்காவை கிராபிக்ஸ் மூலம் ஒல்லியாக காண்பித்தனர். இதே அணுகுமுறையை எல்லா இயக்குனர்களிடமும் எதிர்பார்க்க முடியாது என்று நினைத்த அனுஷ்கா, கடினமாக உழைத்து தற்போது ஓரளவிற்கு ஒல்லியாகி விட்டார். இருப்பினும் அந்த பழைய இஞ்சி இடுப்பழகி மிஸ்ஸிங்தான்.

நம்ம கோலிவுட்டில் நடந்த அதே கதை, தற்போது ஹாலிவுட்டில் நடந்திருக்கிறது. அங்கு உடல் எடை பிரச்சினையில் சிக்கியது யார் தெரியுமா...? சார்லைஸ் தெரான். அட..! ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’, ‘வைட் விட்ச் அண்ட் ஹட்ஸ்மேன்’, ‘மேட் மேக்ஸ் பியூரி’ ஆகிய திரைப்படங்களில் மிரட்டிய சார்லைஸ்தான் தற்போது உடல் எடை பிரச்சினையில் சிக்கியிருக்கிறார்.

‘டூலி’ என்ற திரைப் படத்தில் குண்டான அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சார்லைஸை அனுகியிருக்கிறார்கள். பொதுவாக சம்பளத்தைவிட, கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் சார்லைஸ், வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்காக அதிகாலை 2 மணிக்கு எழுந்து வெண்ணெய், சாக்லெட் கிரீம், சீஸ் பீட்சா போன்றவற்றை சாப்பிடுவாராம். அதுமட்டுமா..? வழக்கமான தூக்கத்தைவிட... கூடுதலாக தூங்கியதால் ஒரு மாதத்திற்குள் குண்டு கதாபாத்திரமாக மாறிவிட்டார்.

‘எனக்கு இதுபோன்ற கதாபாத்திரங்கள் புதிதில்லை. நான் ஹாலிவுட்டில் அறிமுகமானதும் ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தில் நடிக்க அழைத்தனர். அது எத்தகைய கதாபாத்திரம் தெரியுமா...? குண்டான சைக்கோ பெண் கதாபாத்திரம். நான் யோசிக்கவே இல்லை. சம்மதித்துவிட்டேன். 30 கிலோ வரை உடல் எடையைக் கூட்டி, அதில் நடித்தேன். என்னுடைய உழைப்பிற்கு நல்ல சம்பளமும், நிறைய திரைப்பட வாய்ப்புகளும், விருதுகளும் கிடைத்தன.

அதெல்லாம் சரி, உடல் எடையை எப்படி குறைத்தீர்கள் என்று கேட்கிறீர்களா..? அதற்கு நிறைய வழிமுறைகளை வைத்திருக்கிறேன். முதலில் மனதை ஒருநிலைப்படுத்தி, பிறகு உடற்பயிற்சிகளில் இறங்கினால் உடல் தானாக மெலிந்துவிடும்’ என்று பேசும் சார்லைஸ், சொன்னதை போன்றே உடலை பலமுறை கூட்டி, குறைத்திருக்கிறார்.

நாம் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்-8’ திரைப் படத்தில் பார்த்து ரசித்த இந்த வில்லிக்கு மூன்று குழந்தைகள் என்றால் நம்புவீர்களா? உண்மைதான். இந்த அசத்தல் வில்லிக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். பிரசவ காலத்திற்கு பிறகு அதிகரிக்கும் உடல் எடையை சார்லைஸ் கண்டுகொள்வதே இல்லை. ஏனெனில் எத்தனை கிலோ கூடினாலும், அதை அசால்டாக குறைத்துவிடு கிறார். அதனால்தான் மூன்று குழந்தை களுக்கு தாயான சார்லைஸை நாம் திரையில் புரூஸ்லியின் தங்கை உருவில் பார்க்கிறோம்.

‘டூலி’ நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதை. சினிமா வாழ்க்கையில் நான் எதிர்பார்த்த கதாபாத்திரங்களில் அதுவும் ஒன்று. குண்டு அம்மாவாக, குழந்தைகளை சமாளிக்க முடியாத தாயாக நடிக்க இருப்பதை நினைக்கையில் சந்தோஷமாக இருக்கிறது. அதற்காகத்தான் உடல் எடையை 20 கிலோ வரை அதிகரித்திருக்கிறேன். உடல் எடை தற்போது 110 கிலோவை நெருங்கிவிட்டது. நான் சற்று உயரமாக தெரிவதால்... இன்னும் கூடுதல் உடல் எடையுடன் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் ஆசைப்படுகிறார். என்ன ஆகப்போகிறதோ...? என்ற பயத்துடன் உடல் எடையை அதிகரித்து வருகிறேன்’ என்கிறார், சார்லைஸ்.

‘வயதிற்கும் உடல் எடை மெலிதலுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. சார்லைஸ் பலமுறை உடல் எடையை கூட்டி குறைத்திருக் கிறார், நான் அதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் தற்போது அவர் 40 வயதை தாண்டிவிட்டார். உடல், அவர் சொல்வதை கேட்குமா என்பதை பொருத் திருந்துதான் பார்க்கவேண்டும். சார்லைஸின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தால், அவரது சினிமா வாழ்க்கை மட்டுமல்லாமல், குடும்ப வாழ்க்கையின் மார்க்கெட்டும் சரிந்துவிடும். ஆனால் சார்லைஸ் என்னுடைய பேச்சை கேட்க மறுக்கிறார்’ என்று ஆதங்கப்படுகிறார், அவரது கணவர் ஸ்டூவர்ட் டவுன்செண்ட்.

‘நடந்ததை நினைத்து வருத்தப்படும் ஆள் நானில்லை. அதனால்தான் குண்டு கதாபாத்திரத்திற்கு உடனடியாக மாறிவிட்டேன். இனி என்ன நடக்கப்போகிறது என்பதை கடவுள்தான் தீர்மானிக்கவேண்டும். நான் குண்டாக இருக்கவேண்டும் என்று கடவுள் ஆசைப்பட்டால், அதை யாரால் மாற்றமுடியும். அதேசமயம் என்னுடைய உடலின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வயதானாலும், நான் சொல்வதை என்னுடைய உடல் கேட்கும் என்பதை நம்புகிறேன். என்ன நடக்கிறது என்பதை பொருத்திருந்து பாருங்கள்’ என்று சிரிப்புடன் முடித்தார், ஹாலிவுட் நடிகை சார்லைஸ் தெரான். 

Next Story