ஊதிய கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது சம்பள குறைப்பை நடிகர்-நடிகைகள் ஏற்பார்களா?


ஊதிய கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது சம்பள குறைப்பை நடிகர்-நடிகைகள் ஏற்பார்களா?
x
தினத்தந்தி 30 April 2018 10:00 PM GMT (Updated: 30 April 2018 6:42 PM GMT)

நடிகர்கள் அதிகபட்சமாக ரூ.50 கோடியும் நடிகைகள் ரூ.4 கோடி ரூ.5 கோடி என்றும் வாங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது.

ஊதிய கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது சம்பள குறைப்பை நடிகர்-நடிகைகள் ஏற்பார்களா?

விஷால்

தமிழ் பட அதிபர்கள் வேலை நிறுத்தம் மூலம் டிஜிட்டல் சேவை, டிக்கெட் முன்பதிவு கட்டணங்களை குறைப்பது, டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர்மயமாக்குதல் என்று பல விஷயங்களை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நடைமுறைக்கு கொண்டு வருகிறார். அடுத்து நடிகர்-நடிகைகளின் கட்டுங்கடங்காத சம்பளத்தை குறைக்க வேண்டும் என்றும் குரல் எழுந்துள்ளது. நடிகர்கள் அதிகபட்சமாக ரூ.50 கோடியும் நடிகைகள் ரூ.4 கோடி ரூ.5 கோடி என்றும் வாங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது.

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களின் பட்ஜெட்டில் பெருந்தொகை நாயகர்களின் சம்பளமாகத் தான் போகிறது. பொதுவாக ஹீரோக்களுக்கு அவர்களது முந்தைய படத்தின் வெற்றியை வைத்து மார்க்கெட் நிர்ணயிக்கப்படுகிறது. படங்களின் வசூலை தெளிவாக கணிக்க முடியாததால் வசூல் நிலவரம் பற்றி பல தவறான கணக்கு விவரங்கள் தமிழ் சினிமாவை சுற்றி வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் திரையரங்குகளை கணினி மயமாக்கும் நடைமுறைக்காக தயாரிப்பாளர் சங்கம் பேசி வருகிறது. அப்படி ஒரு நிலை வந்தால் ஒவ்வொரு கதாநாயகனின் உண்மையான மார்க்கெட் நிலவரம் தெரிய வரும். சம்பளம் அதற்கேற்ப நிர்ணயிக்கப்படலாம்

இந்தியில் சில கதாநாயகர்கள் தங்களது சம்பளத்தில் கால் பகுதியை மட்டும் முன்பணமாக வாங்கிக்கொண்டு படம் வியாபாரம் ஆனபிறகு அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கை பெற்றுக்கொள்கிறார்கள். படம் நல்ல விலைக்கு போனால் அதிக பணமும் குறைந்த தொகைக்கு வியாபாரம் ஆனால் குறைவான பணமும் அவர்களுக்கு கிடைக்கும்.

இந்த நடைமுறை தமிழ் சினிமாவில் வந்தால் நல்லது என்று தயாரிப்பாளர்கள் கருதுகிறார்கள். நடிகர் சங்க கூட்டத்தில் இதுகுறித்து பேசப்பட்டதாகவும் சில நடிகர்கள் இதற்கு உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பல தயாரிப்பாளர்கள் படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற பின்னரும்கூட சம்பள பாக்கி வைக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் சம்பள முன்பணத்தை குறைவாக வாங்கி எந்த நம்பிக்கையில் நடிப்பது என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நடிகர்-நடிகைகள் சம்பள கட்டுப்பாடுகள் விரைவில் அமலுக்கு வர இருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை நடிகர்-நடிகைகள் ஏற்பார்களா? என்று தெரியவில்லை.

Next Story