காலா படத்தில் வசனம் எழுதிய ரஜினிகாந்த்


காலா படத்தில் வசனம் எழுதிய ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 10 May 2018 11:00 PM GMT (Updated: 10 May 2018 7:58 PM GMT)

ரஜினிகாந்தின் காலா படம் அடுத்த மாதம் திரைக்கு வருவதை ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர்.

ரஜினிகாந்தின் காலா படம் அடுத்த மாதம் திரைக்கு வருவதை ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர். இதில் அவர் மும்பை தாராவி பகுதியில் வசிக்கும் நெல்லையை சேர்ந்த தாதாவாக வருகிறார். கருப்பு வேட்டி சட்டை அணிந்து நடித்துள்ளார். படத்தின் டிரெய்லரும், பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

அடித்தட்டு மக்களின் எழுச்சியையும், புரட்சியையும் பாடல் வரிகளில் சித்தரித்து இருந்தனர். சமூக அவலங்களை சாடும் வரிகளும் இருந்தது. படத்தில் வரும் கற்றவை பற்றவை பாடலை பாடல் ஆசிரியர்கள் அருண்ராஜா காமராஜ், கபிலன், ரோஷான் ஷாம்ராஜ் ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர்.

இந்த பாடலில் இடம்பெற்றுள்ள கூடுதலான சில வசனங்களை ரஜினிகாந்த் எழுதி உள்ளார். ரஜினி, பாடலில் இப்படி வசனம் எழுதுவது இதுதான் முதல் முறை. இந்த பாடலை யோகி பி. அருண்ராஜா காமராஜ், ரோஷன் ஷாம்ராஜ் ஆகிய மூவரும் இணைந்து பாடியுள்ளனர். இதற்கு முன் மன்னன் படத்தில் இடம்பெற்ற அடிக்குது குளிரு பாடலை ரஜினியே சொந்த குரலில் பாடி இருந்தார்.

கோச்சடையான் படத்தில் இடம்பெற்ற மாற்றம் ஒன்றுதான் மாறாதது பாடலில் இடம்பெற்ற வசனங்களை ரஜினி பேசி இருந்தார். கபாலி படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்’ பாடலில் இடம்பெற்ற சில வசனங்களையும் ரஜினி பேசி இருந்தார். இப்படி பாடல்களில் வசனம் பேசிய ரஜினி தற்போது காலா படத்தின் பாடலில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு வசனம் எழுதி இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் இதனை அவர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Next Story