ரோஹிங்யா அகதிகள் முகாமிற்கு சென்ற நடிகை பிரியங்கா சோப்ரா மனம் உருகினார்


ரோஹிங்யா அகதிகள் முகாமிற்கு சென்ற  நடிகை பிரியங்கா சோப்ரா  மனம் உருகினார்
x
தினத்தந்தி 22 May 2018 12:15 PM GMT (Updated: 22 May 2018 12:15 PM GMT)

வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்யா அகதிகள் முகாமிற்கு சென்ற நடிகை பிரியங்கா சோப்ரா மனம் உருகி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கருத்து பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.

யுனிசெபின் தூதருமான நடிகை பிரியங்கா சோப்ரா  கடந்த 10 வருடங்களாக சுற்றுசூழல் பாதுகாப்பு, சுகாதாரம் , கல்வி, பெண்கள் முன்னேற்றம் போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.

ஹாலிவுட்டில்  மட்டுமில்லை பாலிவுட்டிலும்  புகழ்பெற்ற கதாநாயகியாக வலம் வருபவர்   நடிகை பிரியங்கா சோப்ரா.  பிரியங்கா சோப்ரா நேற்று  வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்யா  அகதிகள் முகாமிற்கு சென்றார். அங்கிருந்த  குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் பேசி மகிழ்ந்தார்.

இவர்கள் அனைவரும், மியான்மர் வன்முறையால் அங்கிருந்து வெளியேறி வங்க தேசத்தில் தற்போது அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். 

இது குறித்து அவர் தெரிவித்துள்ளது, “ வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்யா அகதிகளின் குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய கடமை உலகுக்கு உண்டு. இப்போது அவர்கள் தங்கிருக்கும் குடியிருப்பின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. பருவமழை தொடங்கி விட்டால் குடியிருப்புகள் அனைத்தும் பாழாகிவிடும்.

இதுதான் உலகிலேயே மிகப் பெரிய அகதிகள் முகாம். 2017-ம் ஆண்டின் இறுதியில் மியான்மரில் நடந்த இனவெறி தாக்குதலின் புகைப்படங்களை இந்த உலகம் பார்த்தது. இதில் 60 சதவிகிதம் பேர் குழந்தைகள். அதிகமான கூட்டங்களுக்கு நடுவே நெரிசலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் அடுத்த வேளை உணவு கேள்விக்குறியாக உள்ளது.  இருப்பிடமும் கேள்விக்குறியாக உள்ளது. இங்கிருக்கும் குழந்தைகள் எந்த எதிர்காலமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளின் சிரிப்பு மற்றும் கண்ணில் இருக்கும் வெற்றிடத்தை என்னால் உணர முடிகிறது. அவர்களுக்கு நம் உதவி தேவைப்படுகிறது” என்று  உருக்கமாக பதிவு செய்துள்ளார்.



Next Story