கலவரம் குறித்து சர்ச்சை கருத்து: நடிகைகள் கார்த்திகா, காயத்ரி ரகுராமுக்கு எதிர்ப்பு


கலவரம் குறித்து சர்ச்சை கருத்து: நடிகைகள் கார்த்திகா, காயத்ரி ரகுராமுக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 24 May 2018 10:30 PM GMT (Updated: 24 May 2018 8:48 PM GMT)

போலீஸ்காரர் ஒருவரை சிலர் அடித்து ரத்த காயத்தோடு வீழ்த்திய வீடியோவை நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் வெளியிட்டு போலீசாருக்கு ஆதரவான கருத்தை பகிர்ந்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கையை அரசியல் தலைவர்கள், நடிகர்கள் கண்டித்து வரும் நிலையில் போலீஸ்காரர் ஒருவரை சிலர் அடித்து ரத்த காயத்தோடு வீழ்த்திய வீடியோவை நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் வெளியிட்டு போலீசாருக்கு ஆதரவான கருத்தை பகிர்ந்துள்ளார்.

“போலீசார் மக்களை தாக்கியதையும், சுட்டதையும்தான் நாம் பார்த்தோம். ஆனால் போலீசாருக்கு என்ன நடந்தது என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் இந்த வீடியோவை வெளியிட்டேன். நான் யாருடைய பக்கமும் இல்லை. பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல் போலீசாருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நாம் எல்லோருமே தமிழர்கள். நமக்கு குடும்பம் இருக்கிறது. துப்பாக்கி சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார் என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். அமைதிப் போராட்டம் கலவரமானது எப்படி என்பது குறித்து தமிழக மக்களுக்கு பதில் தெரிய வேண்டும்” என்று டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை கிளப்பியது.

தூத்துக்குடியில் போலீசார் யாரும் சாகவில்லை. பொதுமக்கள்தான் பலியாகி உள்ளனர். உங்களிடம் பேசி பயனில்லை” என்றெல்லாம் காயத்ரி ரகுராமை கண்டித்து பலர் கருத்து பதிவிடுகிறார்கள்.

இதுபோல் நடிகை கார்த்திகா, “தூத்துக்குடியில் சில கலகக்கார குழுக்களால்தான் அமைதி போராட்டம் வன்முறையாக மாறியது” என்று டுவிட்டரில் கருத்து வெளியிட்டார்.

நீங்கள் உளவு துறையில் பணியாற்றுகிறீர்களா? துப்பாக்கி சூட்டில் பலியான மாணவரும், மாணவியும் கலகக்காரர்களா? தமிழக மக்கள் போராட்டம் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என்று அவருக்கு பலர் பதிலடி கொடுத்து கண்டித்து வருகிறார்கள்.

Next Story