தமிழ்நாட்டில் சல்மான்கான் படத்துக்கு தடை?


தமிழ்நாட்டில் சல்மான்கான் படத்துக்கு தடை?
x
தினத்தந்தி 14 Jun 2018 12:58 AM GMT (Updated: 14 Jun 2018 12:58 AM GMT)

சல்மான்கான், அனில் கபூர் நடித்துள்ள ‘ரேஸ் 3’ இந்தி படத்தை தமிழகத்தில் திரையிட விடாமல் தடுக்கும் முயற்சிகள் நடப்பதாக திரைப்பட வினியோகஸ்தர் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார்.

சென்னை, 

சல்மான்கான், அனில் கபூர் நடித்துள்ள ‘ரேஸ் 3’ இந்தி படம் இந்தியா முழுவதும் நாளை திரைக்கு வருகிறது. இந்த படத்தை தமிழகத்தில் திரையிட விடாமல் தடுக்கும் முயற்சிகள் நடப்பதாக திரைப்பட வினியோகஸ்தர் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார்.

“சல்மான்கான் நடித்துள்ள ‘ரேஸ் 3’ படத்தை தமிழகம் முழுவதும் நாளை திரையிடுவதற்கு திட்டமிட்டோம். ஆனால் மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள வினியோகஸ்தர்கள் ‘ரேஸ் 3’ படத்துக்கு தடைவிதித்து இருப்பதாக தெரிவித்து, படத்தை தியேட்டர்களில் திரையிட விடாமல் தடுக்கின்றனர்.

அழகர் என்பவரிடம் கடன் வாங்கி அந்த தொகையை ஒரு வருடத்துக்கு முன்பே திருப்பிக் கொடுத்துவிட்டேன். ஆனால் அந்த கடனை நான் கொடுக்கவில்லை என்று வினியோகஸ்தர் சங்கங்களிடம் அவர் புகார் அளித்துள்ளதாகவும், இதனால் படத்துக்கு தடைவிதித்து இருப்பதாகவும் கூறுகிறார்கள். இது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

பணத்தை கொடுத்த பிறகும் திட்டமிட்டு ‘ரேஸ் 3’ படத்துக்கு எதிராக சதி வேலைகள் நடக்கின்றன. பொய்யான புகாரை வினியோகஸ்தர்கள் ஏற்காமல் படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.“

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story