வருமானத்தை மறைத்ததாக கூறி நடிகை திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து


வருமானத்தை மறைத்ததாக கூறி நடிகை திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து
x
தினத்தந்தி 15 Jun 2018 10:30 PM GMT (Updated: 15 Jun 2018 5:42 PM GMT)

வருமானத்தை மறைத்ததாக கூறி நடிகை திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நடிகை திரிஷா, 2010-2011-ம் நிதி ஆண்டில் 3 கோடியே 51 லட்சத்து 71 ஆயிரத்து 53 ரூபாய் வருமானத்தை மறைத்ததாகவும், ஏற்கனவே கணக்கில் காட்டிய வருமானத்துக்கு உரிய வரி செலுத்தியதற்கான கணக்கை காட்டவில்லை எனவும் வருமான வரித்துறை கருதியது. இதில் நடிகை திரிஷாவுக்கு ஒரு கோடியே 16 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வருமான வரித்துறை துணை ஆணையர் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால் 2010-2011-ம் ஆண்டு திரைப்படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை, 2012-2013-ம் ஆண்டு தாக்கல் செய்த திருத்தப்பட்ட வருமான வரி கணக்கில் காட்டியதாகவும் அதை கருத்தில் கொள்ளாமல் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நடிகை திரிஷா முறையீடு செய்தார். இதை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து வருமானவரித்துறை முதன்மை ஆணையர், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘ஆவணங்களை பார்க்கும்போது நடிகை திரிஷா வருமானத்தை மறைத்ததாக தெரியவில்லை. திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு சரியானது தான். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தீர்ப்பு கூறினர்.

Next Story