நான் செய்தது தவறுதான்; விட்டுவிடுங்கள் நடிகை கஸ்தூரி மீண்டும் வருத்தம்


நான் செய்தது தவறுதான்; விட்டுவிடுங்கள்  நடிகை கஸ்தூரி மீண்டும் வருத்தம்
x
தினத்தந்தி 17 Jun 2018 11:40 PM GMT (Updated: 17 Jun 2018 11:40 PM GMT)

நடிகை கஸ்தூரி 18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திருநங்கைகளுடன் ஒப்பிட்டு சர்ச்சை கருத்தை வெளியிட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

திருநங்கைகள் ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி வீட்டை துடைப்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். மதுரை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

‘‘யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு வேண்டுகிறேன் என்று கஸ்தூரி கூறி இருந்தார். நேற்று மீண்டும் தனது பேஸ்புக் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து ஒரு வீடியோவில் பேசி வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:–

‘‘நான் 2 நாட்களுக்கு முன்பு வேடிக்கையாக பேசுவதாக நினைத்து தவறான கருத்தை பதிவு செய்து விட்டேன். அதனால் நான் மிகவும் மதிக்கும் நண்பர்கள் சகோதர, சகோதரிகளின் மனது வேதனைப்படுகிறது என்பதை அறிந்த உடனேயே அதை நீக்கி விட்டேன். அந்த கருத்துக்காக பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டு விட்டேன்.

குறிப்பிட்ட சமுதாய மக்களிடம் நேரடியாக எனது விளக்கத்தையும், வருத்தத்தையும் தெரிவித்து உள்ளேன். சமூக வலைத்தளங்களிலும் நேரடியாகவே திருநங்கைகளிடம் வருத்தத்தை தெரிவித்து மன்னிப்பு கேட்டு உள்ளேன். அவர்களும் என்னை பெருந்தன்மையாக மன்னித்து இதனை கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நீக்கப்பட்ட பதிவை ‘ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து பரப்புகிறார்கள். இதனால் இது உண்மைக்கு புறம்பான சர்ச்சையாக மாறுகிறது. மீண்டும் மீண்டும் இந்த ஸ்கீரின் ஷாட்டை பரப்புவதால் எனது சகோதரிகளை கொச்சைப்படுத்தி காயப்படுத்துகிறீர்கள். நான் மனுஷிதான். தவறு செய்யாமல் யாரும் இருக்க மாட்டார்கள். மறுபடி நான் தவறு செய்தால் கேள்வி கேளுங்கள்.

இப்போது நான் செய்தது தவறுதான். இதை விட்டு விடுங்கள். என்னோடு சேர்த்து ஒரு சமூகத்தின் உணர்வை காயப்படுத்த வேண்டாம்.’’

இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.

Next Story