சினிமா செய்திகள்

தாமதமாகும் கமலின் 2 படங்கள் + "||" + Delayed Kamal 2 Movies

தாமதமாகும் கமலின் 2 படங்கள்

தாமதமாகும் கமலின் 2 படங்கள்
கமல்ஹாசனின் இரண்டு பட வேலைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளன.
கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு, இந்தியன்-2 ஆகிய இரண்டு பட வேலைகளில் தாமதம் ஏற்பட்டு உள்ளன.

ஏற்கனவே சில வருடங்களாக முடங்கி இருந்த விஸ்வரூபம்-2 படத்தை வருகிற ஆகஸ்டு 10-ந் தேதி திரைக்கு கொண்டு வருகின்றனர். சபாஷ்நாயுடு, இந்தியன்-2 படப்பிடிப்புகளையும் விரைவில் முடித்து விடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விட்டதால் இதன் படப்பிடிப்புகளை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர். சபாஷ் நாயுடு படம் தசாவதாரம் படத்தில் வந்த போலீஸ் அதிகாரி பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை மையமாக வைத்து தயாராகிறது. இதில் சுருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

பிரம்மானந்தம், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் உள்ளனர். கமல்ஹாசனே டைரக்டு செய்கிறார். அவரது இளையமகள் அக்‌ஷரா ஹாசன் உதவி இயக்குனராக சேர்ந்துள்ளார். இந்த படம் பாதிக்கு மேல் முடிந்துள்ளது. 2016 ஜூன் மாதம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டு சென்னை திரும்பினார்கள்.

அப்போது கமல்ஹாசன் வீட்டு மாடிப்படியில் தவறி விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதால் பட வேலைகள் நின்று விட்டன. அதன்பிறகு தனி கட்சி தொடங்கி அரசியலுக்கும் வந்து விட்டார். கடந்த முறை டெலிவிஷனில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் முடித்தபோது இயக்குனர் ஷங்கர் மேடையில் ஏறி இந்தியன்-2 பட அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த ஜனவரியில் தைவான் நாட்டில் இந்தியன்-2 விளம்பர பலூனையும் அவர் பறக்க விட்டார். எனவே படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்னும் ஆரம்பிக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியை 100 நாட்கள் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார். அதன் பிறகே இவற்றின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்று பேசப்பட்டு வருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...