நடிகர் சங்க பொதுக்குழு கூடுகிறது


நடிகர் சங்க பொதுக்குழு கூடுகிறது
x
தினத்தந்தி 21 Jun 2018 10:41 PM GMT (Updated: 21 Jun 2018 10:41 PM GMT)

நடிகர் சங்க பொதுக்குழு அடுத்த மாதம் இறுதியில் அல்லது ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் பொதுக்குழு கூட இருப்பதாக தெரிகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015-ல் தேர்தல் நடந்து புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர். இவர்கள் பதவி காலம் 3 ஆண்டுகள். அதற்குள் சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 19 கிரவுண்ட் நிலத்தில் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்து விடுவதாக வாக்குறுதி அளித்தனர்.

கோர்ட்டு வழக்குகளில் சிக்கி மீண்டு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கட்டுமான பணிகளை தொடங்கினார்கள். இந்த கட்டிடத்தில் 1000 பேர் அமரக்கூடிய அரங்கம், சிறிய கல்யாண மண்டபம், பிரிவியூ தியேட்டர், கருத்தரங்க கூடம், சங்க அலுவலகம், உடற்பயிற்சி கூடம், நடன பயிற்சி கூடம் ஆகியவை அமைய உள்ளன.

தரைதளத்துடன் 3 மாடிகள் கொண்ட கட்டிடமாக உருவாகிறது. தற்போது தரை தளத்தை முடித்து முதல் மாடியை நிறைவு செய்வதற்கான பணிகள் நடக்கின்றன. செப்டம்பர் மாதத்துக்குள் முழு கட்டிடத்தையும் கட்டி முடிக்க திட்டமிட்டு உள்ளனர். ஏற்கனவே மே அல்லது ஜூன் மாதத்தில் நடிகர் சங்க தேர்தல் தேதியை அறிவிக்க இருந்தனர். கட்டிட பணிகள் தாமதமானதால் அது தள்ளிப்போகிறது.

தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக நடிகர் சங்க பொதுக்குழுவை கூட்ட தற்போது ஏற்பாடுகள் நடக்கின்றன. அடுத்த மாதம் இறுதியில் அல்லது ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் பொதுக்குழு கூட இருப்பதாக நடிகர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக ஓரிரு வாரத்தில் நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட உள்ளன. கட்டிட வேலைகளை முடித்து அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

பொதுக்குழுவில் தேர்தல் தேதியை முடிவு செய்து அறிவிக்க உள்ளனர். தற்போது நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருக்கும் நடிகர் விஷால் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார்.

அவரை எதிர்க்க ராதாரவி, ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் அணி திரட்டுகிறார்கள். நாடக நடிகர்கள் மற்றும் நடிகர்கள் ஆதரவை திரட்டும் பணியில் இப்போதே இரு தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். 

Next Story