‘சர்கார்’ படத்தில் விஜய் புகை பிடிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு


‘சர்கார்’ படத்தில் விஜய் புகை பிடிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 22 Jun 2018 10:30 PM GMT (Updated: 22 Jun 2018 8:49 PM GMT)

விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘சர்கார்’ என்று அறிவித்து அவரது தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர்.

விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘சர்கார்’ என்று அறிவித்து அவரது தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர்.

‘சர்கார்’ என்பதற்கு அரசாங்கம் என்று பொருள் என்பதால் இந்த படம் முழு அரசியல் கதையம்சத்தில் உருவாவதாகவும் அரசியல்வாதிகள் தவறுகளை தட்டிக்கேட்கும் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் தோற்றம் சிகரெட் பிடிப்பது போல் ஸ்டைலாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள். படத்தின் தலைப்பையும் உலக அளவில் டிரென்டாக்கி உள்ளனர். விஜய் தோற்றத்தை போஸ்டர்களாக அச்சிட்டு வெளியிட்டு உள்ளனர். நடிகர், நடிகைகள் இயக்குனர்களும் விஜய் தோற்றத்தை பாராட்டி வருகிறார்கள்.

ஆனால் விஜய்யின் சிகரெட் பிடிக்கும் தோற்றம் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. பா.ம.க இளைஞர் அணிதலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இந்த தோற்றத்தை விமர்சித்து உள்ளார். சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெறக் கூடாது என்று பா.ம.க எதிர்த்து வருகிறது. அதிக ரசிகர்களை கொண்ட விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்க கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் விஜய்யின் சிகரெட் பிடிக்கும் தோற்றத்தை கண்டித்து அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். “அந்த சிகரெட் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் ஸ்டைலாக நீங்கள் காட்சி தருவீர்கள். இப்படி புகை பிடிப்பதை ஊக்குவிப்பது வெட்கப்பட வேண்டியது” என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

புகைப்பழக்கம் கொல்லும் புகைபழக்கம் புற்றுநோயை உண்டாக்கும் என்ற வாசகத்தையும் ஹேஷ் டேக்காக போட்டுள்ளார். அத்துடன் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று விஜய் ஏற்கனவே அறிவித்த தகவலையும் வெளியிட்டு உள்ளார்.

விஜய்க்கு நேற்று பிறந்தநாள் என்பதால் ஆர்யா, தனுஷ், பிரசன்னா, கஸ்தூரி உள்ளிட்ட திரையுலகினர் பலர் டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story