விவேக் ஓபராய் ஆசையை நிறைவேற்றும் பிருத்விராஜ்


விவேக் ஓபராய் ஆசையை நிறைவேற்றும் பிருத்விராஜ்
x
தினத்தந்தி 23 Jun 2018 9:16 AM GMT (Updated: 23 Jun 2018 9:16 AM GMT)

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர், விவேக் ஓபராய். இவர் நடிகராக எவ்வளவு பிரபலமோ, அதே அளவுக்கு சமூக சேவகராகவும் இந்திய அளவில் பிரபலமானவர்.

பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் பிறந்து வளர்ந்ததும், பள்ளிப் படிப்பை முடித்ததும் ஆந்திரப் பிரதேசம் ஐதராபாத் நகரில் தான். தற்போது ஐதராபாத் தெலுங்கானாவில் உள்ளது. இவரது தந்தை சுரேஷ் ஓபராயும் நடிகர் தான். இவர் பாலிவுட்டில் 100-க்கும் அதிகமான சினிமாக்களில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். விவேக் ஓபராயின் தாயார் யசோதரா ஓபராய், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விவேக் ஓபராய் கடந்த 2002-ம் ஆண்டு பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமானார். இவரது முதல் படத்தை இயக்கியவர், அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் இயக்குனரான ராம்கோபால்வர்மா. ‘கம்பெனி’ என்ற அந்த படத்தில் விவேக் ஓபராயுடன், அஜய்தேவ்கன், மனிஷாகொய்ராலா, முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள உச்ச நடிகர் மோகன்லால் ஆகியோர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘கம்பெனி’ திரைப்படத்தில் நடித்த விவேக் ஓபராய்க்கு அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

இவர் பாலிவுட் நடிகராக இருந்தாலும், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் வெளியான ‘ரத்த சரித்திரம்’ என்ற படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். கடந்த ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படத்தில் விவேக் ஓபராய் ஏற்று நடித்த வில்லன் கதாபாத்திரமும் பராட்டும் விதமாக அமைந்திருந்தது. தற்போது இவர் பாலிவுட்டில் ‘ராய்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பயோகிராபிக் திரைப்படமாகும். இந்தப் படத்தில், முத்தப்பா ராய் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், ரவுடியாக இருந்து மனம் மாறி, பின் தொழிலதிபராகும் கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடிக்கிறார். இந்தப் படத்திற்கான கதை, திரைக்கதை, வசனத்தை பிரபல இயக்குனர் ராம்கோபால்வர்மா எழுதியிருக்கிறார். படத்தை மெகதி என்பவர் இயக்குகிறார்.

விவேக் ஓபராய்க்கு மலையாள சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்டகால ஆசை. அதை அவர் கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே தெரியப்படுத்தினார். ‘மலையாளத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் எப்போதும் உண்டு. அதுவும் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க வேண்டும் ’ என்று கூறியிருந்தார்.

அவரது எண்ணம் இப்போது நிறைவேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆம்.. மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ், முதன் முறையாக இயக்குனராக களம் இறங்கி இயக்கப்போகும் படம் ‘லூசிபர்’. இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகன்லால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்தப் படத்தின் தலைப்புக்கான டீசரை, சமீபத்தில் வெளியிட்டிருந்தார்கள். இதையடுத்து மற்ற நடிகர், நடிகையர்களைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் பிருத்விராஜ். அதன் ஒரு பகுதியாகத்தான் ‘லூசிபர்’ படத்தில் வில்லனாக நடிக்க, விவேக் ஓபராயிடம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு ஒரு வலுவான, அதே நேரத்தில் ஸ்டைலிஷான, மலையாளத்திற்கு புதியதாக ஒரு வில்லனைத் தேடியபோதுதான், பிருத்விராஜிக்கு விவேக் ஓபராய் நினைவுக்கு வந்திருக்கிறார். இதையடுத்து உடனடியாக விவேக் ஓபராயைத் தொடர்பு கொண்டு பேசிவிட்டதாகவும், அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு விட்டதாகவும் தெரிகிறது.

அது சரி.. எப்படி ஒப்புகொள்ளாமல் இருப்பார்? மலையாள சினிமாவில் நடிக்கும் நீண்ட நாள் ஆசையும், யாருடன் நடிக்க விருப்பப்பட்டாரோ அவருடனேயே நடிக்கும் விருப்பமும் ஒரே படத்தில் நிறைவேறுகிறது என்றால் ஒப்புக்கொள்ளாமல் இருப்பாரா என்ன? ஆகவே நிச்சயமாக ‘லூசிபர்’ படத்தில் விவேக் ஓபராய் இருப்பார் என்று மலையாளக் கரையோரம் அடித்துச் சொல்கிறார்கள்.

விவேக் ஓபராய் ‘ராய்’ படத்திலும், மோகன்லால் ‘ட்ராமா’, ‘குஞ்சாலி மரக்கார்’ படங்களிலும், பிருத்விராஜ் ‘நைன்’, ‘ஆடுஜீவிதம்’ ஆகிய படங்களிலும் பிஸியாக இருப்பதால், மூவரும் தாங்கள் தற்போது ஒப்பந்தமாகியுள்ள படங்களை முடித்த பிறகே ‘லூசிபர்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவேக் ஓபராய் கதாநாயகனாக அறிமுகமான ‘கம்பெனி’ திரைப்படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு விவேக் ஓபராயின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றும் வாய்ப்பு பிருத்விராஜிக்கு கிடைத்திருக்கிறது.

சிறந்த சமூக சேவகர்

சமூகத்தின் மீதும், மக்களின் மீதும் அக்கறை கொண்டவர் விவேக் ஓபராய். 2004-ம் ஆண்டு சுனாமியால் அதிகமாக பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு, உதவுவதற்காக ஓடோடி வந்தவர் இவர். அப்போது அதிகமாக பாதிப்படைந்திருந்த தேவனாம்பட்டினம் என்ற கிராமத்தைத் தத்தெடுத்துக் கொள்வதாகவும், அங்குள்ள மீனவர்களுக்கு மாதிரி கிராமத்தை உருவாக்கித் தருவதாகவும் கூறினார். ஆனால் அதற்கான நிலம் அரசிடம் இருந்து கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா என்ற கிராமத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில், 25 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இதில் 4 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்த ராணுவவீரர்களின் குடும்பங்களுக்கு அரசு உள்ளிட்ட பலதரப்பினரிடம் இருந்தும் பல்வேறு உதவிகள் கிடைத்தன. அப்போது தனக்கு சொந்தமான ‘கரம்’ கட்டுமான நிறுவனம் சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் 25 அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்கினார், விவேக் ஓபராய்.

உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர் லலிதா பென்பாஸி. குடும்பத்தகராறில் இவர் முகத்தில் உறவினர்களே ஆசிட் வீசிவிட்டனர். இதில் முகம் கருகிய லலிதா, 17 அறுவை சிகிச்சைகளுக்குப் பின் கொஞ்சம் மீண்டார். பிறகு அவருக்கு ராகுல் என்பவரின் பழக்கம் கிடைத்தது. முகத்தைப் பார்க்காமல், மனதைப் பார்த்து பழகிய அவர்களின் நட்பு, காதலாக மாறியது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த அவர்களுக்கு, பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் பண உதவி செய்தனர். அந்தத் தம்பதிக்கு திருமணப் பரிசாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை விவேக் ஓபராய் வழங்கினார். 

Next Story