சினிமா கேள்வி-பதில்! : குருவியார்


சினிமா கேள்வி-பதில்! : குருவியார்
x
தினத்தந்தி 24 Jun 2018 7:12 AM GMT (Updated: 24 Jun 2018 7:12 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, விஜய்–சமந்தா; விஜய்–கீர்த்தி சுரேஷ் ஆகிய 2 ஜோடிகளில், எது பொருத்தமான ஜோடி? (வி.தர்‌ஷன், திருச்சி)

விஜய்–கீர்த்தி சுரேஷ் ஜோடிக்கு ஆதரவு அலை பெருகிக் கொண்டே போகிறது!

***

காஜல் அகர்வால் விளம்பர படங்களுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கி வருகிறார்? (ஆர்.மகேஷ், வேலூர்)

நயன்தாராவை விட, ஒரு ரூபாய் குறைவாகவே வாங்குகிறாராம்!

***

குருவியாரே, உயர் போலீஸ் அதிகாரியாக நடித்த பிரபல கதாநாயகர்களில், கதாபாத்திரமாகவே மாறி காக்கி உடைக்கு கம்பீரம் சேர்த்தவர் யார்? (பி.ஹரிகரன், பர்கூர்)

முன்பு, ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் (படம்: தங்கப்பதக்கம்), சமீபத்தில், சூர்யா (படம்: சிங்கம் 1,2,3.)

***

மும்பையில் இருந்து இறக்குமதியான நடிகைகளில், சரளமாக தமிழ் பேசி வியக்க வைத்துக் கொண்டிருப்பவர் யார், எப்படி? (ஜேம்ஸ் பிரடரிக், கோவை)

தமன்னா! இவர், ‘டியூ‌ஷன்’ வைத்து தமிழ் கற்றுக் கொண்டார். படக்குழுவினரிடம் ஆங்கிலத்தில் பேசுவதை தவிர்த்து, தமிழிலேயே பேசி வந்தார். இப்போது தமன்னா வட இந்திய பெண்ணா, தமிழ் பெண்ணா? என்று வியக்க வைக்கிற மாதிரி சரளமாக தமிழ் பேசுகிறார்!

***

குருவியாரே, கே.பாக்யராஜ் இயக்கி நடித்த முதல் படம் எது? அந்த படம் வெற்றி பெற்றதா, தோல்வி அடைந்ததா? (பி.வினோத், சென்னை-87)

கே.பாக்யராஜ் இயக்கி நடித்த முதல் படம், ‘சுவரில்லா சித்திரங்கள்.’ அந்த படம், 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது!

***

நிவேதா பெத்துராஜ் எந்த ஊரை சேர்ந்தவர்? அவருக்கு தமிழ் பேச தெரியுமா? (ப.கார்த்திக், மேட்டுப்பாளையம்)

நிவேதா பெத்துராஜ் பூர்வீகம், மதுரை. அவர் வளர்ந்தது, படித்தது எல்லாமே துபாயில்...மதுரை தமிழச்சி எப்படி தமிழ் பேசுவாரோ, அதேபோல் நிவேதா பெத்துராஜ் சரளமாக தமிழ் பேசுகிறார்!

***

குருவியாரே, பிரகாஷ்ராஜ், ‘வில்லாதி வில்லன்’ என்று பெயர் வாங்கியிருக்கிறாரே... அவருக்கு போட்டியாக இருக்கும் வில்லன் நடிகர் யார்? (எஸ்.பாலாஜி, கிருஷ்ணகிரி)

பிரகாஷ்ராஜுக்கு போட்டியே இல்லை. தனியொரு வில்லனாக அவர் தன் வெற்றி கொடியை பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார்!

***

ராதிகா சரத்குமார், ரம்யா கிருஷ்ணன் ஆகிய 2 பேரில், ‘சின்னத்திரை’யில் அதிக வரவேற்பை பெற்றவர் யார்? (ஆதிக் தமிழ்செல்வன், தஞ்சை)

சந்தேகமே இல்லாமல், ராதிகா சரத்குமார்தான். இவருக்கு பின்னால் வருகிறார், ரம்யா கிருஷ்ணன்!

***

குருவியாரே, சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரபு தயாரிக்கும் புதிய படத்தில், விஜய் நடிப்பது உண்மையா? (சி.ரவீந்தர், ஸ்ரீபெரும்புதூர்)

அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் அதுபற்றிய உறுதியான அறிவிப்பு வெளியாகும்!

***

‘மலையூர் மம்பட்டியான்’ என்ற படம் தியாகராஜன் நடித்தும், அவருடைய மகன் பிரஷாந்த் நடித்தும் பல வருட இடைவெளியில் வெளியானது. அந்த 2 படங்களில், எது அதிக நாட்கள் ஓடியது? அப்பா நடித்ததா, மகன் நடித்ததா? (சோ.மதன், நாகர்கோவில்)

தியாகராஜன் நடித்த ‘மலையூர் மம்பட்டியான்’ படமே அதிக நாட்கள் ஓடியது. அந்த காலகட்டத்தில், முதலில் வெளிவந்த ‘மலையூர் மம்பட்டியான்’ படம் வெற்றிகரமாக ஓடி, வெள்ளி விழா கண்டது!

***

குருவியாரே, அந்தக்கால கதாநாயகிகளில் இன்னும் நல்ல உடல் நலத்துடன் நடமாடியும், வெளியூர்களுக்கு பயணித்தும் வருபவர் யார்-யார்? (ஏ.ரஹமத்துல்லா, ஜோலார்பேட்டை)

மறக்க முடியுமா, பூம்புகார், சவாலே சமாளி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகுமாரியும், பெங்களூருவில் வசித்தாலும், அடிக்கடி சென்னைக்கு பறந்து வந்து கொண்டிருக்கும் சரோஜாதேவியும்..! இவர்களின் தோழிகள் எம்.என்.ராஜம், ராஜஸ்ரீ ஆகியோரும் நல்ல உடல் நலத்துடன் நடமாடி வருகிறார்கள்!

***

குருவியாரே, ஹன்சிகா என் கனவில் அடிக்கடி வருகிறார். நான் என்ன செய்வது? (வெங்கடேஷ், குடியாத்தம்)

கைகளையும், கால்களையும் நீட்டி வைத்துக் கொண்டு ஹன்சிகா பற்றிய நினைவலைகளில் இருந்து விலகி, சற்று நேரம் கண்மூடி தியானிக்கவும்... கனவுகள் இல்லாத தூக்கம் வரும்.

***

குருவியாரே, டைரக்டர் பேரரசு, விஜய்யை வைத்து எத்தனை படங்கள் இயக்கியிருக்கிறார்? அந்த படங்களின் பெயர்கள்...? (ஆர்.கண்மணி பிரபு, பெரியகுளம்)

விஜய்யை வைத்து, ‘திருப்பாச்சி,’ ‘சிவகாசி’ ஆகிய 2 படங்களை பேரரசு இயக்கியிருந்தார்!

***

அருண் விஜய் திரையுலகுக்கு வந்து 19 வருடங்கள் ஆகிறதே...அவர் எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

அருண் விஜய் இதுவரை 25 படங்களில் நடித்து இருக்கிறார்!

***

குருவியாரே, அதிக சம்பளம் வாங்க வேண்டும் என்றால் இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என்று வழி காட்டிய நடிகைகள் யார்-யார்? (எம்.ராதா பாண்டியன், புதுச்சேரி)

ஹேமாமாலினியும், ஸ்ரீதேவியும்...!

***

“யாரை நம்பி நான் பிறந்தேன்...போங்கடா போங்க...என் காலம் வெல்லும்...வென்ற பின்னே வாங்கடா வாங்க...” என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, அந்த பாடலை பாடியவர் யார், பாடல் காட்சியில் நடித்தவர் யார்? (எஸ்.அக்கிம் பாய், கரூர்)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘எங்க ஊர் ராஜா.’ பாடலை பாடியவர், டி.எம்.சவுந்தரராஜன். பாடல் காட்சியில் நடித்தவர், ‘நடிகர்திலகம்’ சிவாஜிகணேசன்!

***

குருவியாரே, நயன்தாராவிடம், “உடனே திருமணம் செய்து கொள்ளலாம்” என்று டைரக்டர் விக்னேஷ் சிவன் அவசரப்படுத்துகிறாராமே...ஏன்? (எம்.குமரன், திருப்பூர்)

அந்த அதிர்ஷ்ட கிளி, தன் கையை விட்டு வேறு இடம் தேடி பறந்து போய்விடுமோ என்ற பயம்தான் காரணம்!

***

எம்.ஜி.ஆர். நடித்த 100-வது படம் எது, அந்த படத்தை தயாரித்த நிறுவனம் எது? (ஜெயஸ்ரீ நரசிம்மான், சங்கரன்கோவில்)

படம், ‘ஒளிவிளக்கு.’ படத்தை தயாரித்த நிறுவனம், ஜெமினி! 

***

Next Story