திலீப்பை சேர்த்ததற்கு எதிர்ப்பு : நடிகர் சங்கத்தில் இருந்து 4 நடிகைகள் ராஜினாமா


திலீப்பை சேர்த்ததற்கு எதிர்ப்பு : நடிகர் சங்கத்தில் இருந்து 4 நடிகைகள் ராஜினாமா
x
தினத்தந்தி 27 Jun 2018 9:56 PM GMT (Updated: 27 Jun 2018 9:56 PM GMT)

மலையாள நடிகர் சங்கத்தில் திலீப் சேர்க்கப்பட்டதை எதிர்த்து 4 நடிகைகள் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தார்கள். இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த ஆண்டு பிரபல நடிகையை ஒரு கும்பல் கடத்தி ஓடும் காரிலேயே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பல்சர் சுனில் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் பிரபல மலையாள நடிகர் திலீப், நடிகையை கடத்த சொன்னார் என்று வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து திலீப்பையும் போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார்.

மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் திலீப் பொருளாளராக இருந்தார். கைது நடவடிக்கையை தொடர்ந்து அவரை நீக்கினர். இதனிடையே நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து இன்னசெண்ட் விலகியதும், புதிய தலைவராக பொறுப்புக்கு வந்த நடிகர் மோகன்லால், திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மலையாள நடிகைகள் இணைந்து மலையாள சினிமா பெண்கள் கூட்டுக்குழு என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்கினர். இந்த அமைப்பில் தலைவராக உள்ள திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் மற்றும் நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், பத்மபிரியா ஆகியோர் திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்த்ததை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில் திலீப்பை சங்கத்தில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடத்தலால் பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் நடிகைகள் ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடத்தலால் பாதிக்கப்பட்ட நடிகை மலையாள சினிமா பெண்கள் கூட்டுக்குழு முகநூல் பக்கத்தில் கூறும்போது, “கடந்த காலத்தில் அந்த நடிகர் எனக்கு எதிராக சதி செய்து படவாய்ப்புகள் கிடைக்காமல் தடுத்தார். எனக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டபோதும் ‘அம்மா’ அமைப்பு அந்த நடிகரை பாதுகாப்பதில்தான் கவனமாக இருந்தது. எனவே அந்த அமைப்பில் உறுப்பினராக இருப்பதில் பயனில்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்.

நடிகை ரம்யா நம்பீசன் கூறுகையில், “சக நடிகைகள் கொடுமைகளை சந்திக்கும் சூழ்நிலையில் ‘அம்மா’ அமைப்பு மனிதநேயமற்ற முடிவுகளை எடுத்துள்ளது. எனவே அந்த அமைப்பில் இருந்து விலகுவதை தவிர வேறு வழியில்லை” என்று கூறியுள்ளார்.

இதேபோல் கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் உள்பட பல நடிகைகள் திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்த்ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.

Next Story