திலகனுக்கு ஒரு நியாயம்.. திலீப்புக்கு ஒரு நியாயமா..


திலகனுக்கு ஒரு நியாயம்.. திலீப்புக்கு ஒரு நியாயமா..
x
தினத்தந்தி 29 Jun 2018 11:00 PM GMT (Updated: 28 Jun 2018 9:51 AM GMT)

மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ என்ற பெயரில் இயங்கி வருகிறது.

‘அசோசியேசன் ஆப் மலையாளம் மூவி ஆர்ட்டிஸ்ட்’ என்பதன் சுருக்கமே ‘அம்மா.’ இந்த சங்கத்தின் தலைவராக கடந்த 18 ஆண்டுகளாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான இன்னசென்ட் இருந்து வந்தார். இந்த நிலையில் தனது உடல்நிலையை காரணமாகக் கூறி அந்தப் பொறுப்பில் இருந்து இன்னசென்ட் விலகினார். இதையடுத்து புதிய தலைவராக போட்டியின்றி மலையாள திரையுலகின் உச்ச நடிகரான மோகன்லால் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக முகேஷ் எம்.எல்.ஏ., பொதுச் செயலாளராக இடைவேளை பாபு, துணை செயலாளராக நடிகர் சித்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதும், ‘அம்மா’ பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் தான் இப்போது பிரச்சினை வெடித்திருக்கிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப் பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பிக்கொண்டிருந்த நடிகை பாவனாவுக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்தனர். இது தொடர்பான வழக்கில் முதல் குற்றவாளியான பல்சர் சுனில் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் திடீர் திருப்பமாக பல்சர் சுனில், நடிகர் திலீப் தான் இதற்கு மூலக்காரணம் என்று கையைக் காட்டினார். இதையடுத்து திலீப் கைது செய்யப்பட்டார். 85 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு திலீப் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்த நிலையில் நடிகையின் பாலியல் வழக்கில் சிக்கி சிறைசென்ற திலீப்பை, ‘அம்மா’ சங்கத்தின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கினர். ஆனால் தற்போது தேர்வாகியுள்ள புதிய நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பதுதான் பிரச்சினைக்கு காரணம். அதற்கு கூட்டத்தில் சொல்லப்பட்ட காரணம், ‘நடிகர் சங்க விதிகளுக்கு மாறாக நடிகர் திலீப் நீக்கப்பட்டிருக்கிறார். எனவே அவர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்படுகிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.

அம்மா சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் திலீப் சேர்க்கப்பட்டதற்கு எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை என்றாலும், ரீமா கல்லிங்கல், பார்வதி உள்ளிட்ட நடிகைகள் அடங்கிய திரையுலக பெண்கள் நல கூட்டமைப்பினர் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ‘நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்த்திருப்பது, ஒட்டு மொத்த பெண்களையும் அவமானப்படுத்தும் ஒரு விஷயமாகத்தான் பார்க்க வேண்டியதிருக்கிறது. மேலும் அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில் அவரை சங்கத்தில் சேர்த்திருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது’ என்று அவர்கள் தங்கள் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

நடிகர் திலீப் மீண்டும் அவசர அவசரமாக நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டதில் பலரும் சந்தேகத்தை கிளம்பியுள்ளனர். அந்த சந்தேகம் என்னவென்றால், இன்னசென்ட் நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகியதற்கு, உடல்நலம் காரணமாக கூறப்பட்டது. ஆனால் பொதுச்செயலாளராக இருந்த மம்முட்டி திடீரென அந்தப் பதவியில் இருந்து விலகினார். அதுமட்டுமின்றி, கடந்த முறை பொறுப்பில் இருந்த நடிகர் பிருத்விராஜ், நடிகை ரம்யாநம்பீசன் ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கு, நடிகையின் பாலியல் வழக்கில் திலீப் கைது செய்யப்பட்ட வேளையில், இவர்கள் இருவரும் திலீப்புக்கு எதிராக தீவிர எதிர்ப்பைக் காட்டினர் என்பதும் ஒரு காரணம் என்று மலையாள சினிமாத் துறையினர் பேசிக்கொள்கிறார்கள். மம்முட்டி பதவி விலகல், பிருத்விராஜ், ரம்யாநம்பீசனுக்கு பொறுப்புகள் வழங்கப்படாதது போன்றவை, திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்ப்பதற்காக திட்டமிட்டே நடத்தப்பட்ட ஒன்றாக கூறப்படுகிறது.

நடிகர் திலகனை அனைவரும் அறிவார்கள். மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்தவர். சிறந்த நடிப்புக்காக தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைக் குவித்தவர். இவர் தமிழில் ‘சத்ரியன்’, ‘மேட்டுக்குடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து முத்திரைப் பதித்தவர். இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகர் களின் ஆதிக்கம் பற்றியும், அதனால் மலையாள சினிமாத் துறைக்கு ஏற்படப்போகும் பாதிப்புகளைப் பற்றியும் பல்வேறு பேட்டிகளில் புகாராக கூறிவந்தார். இதன் விளைவாக அவருக்கு மலையாள படங்களில் நடிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் திலகன், நடிகர் சங்கத்தை கடுமையாக விமர்சித்து அறிக்கை விடுத்தார். மலையாளத்தின் முன்னணி நடிகர்களான மம்முட்டியும், மோகன்லாலும் சேர்ந்து, வேறு எவரையும் வளர்ச்சியடைய விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டினார்.

திலகன் தொடர்ந்து நடிகர் சங்கத்திற்கு எதிராக பேசி வருவதாக கூறி அவரை முதலில் தற்காலிகமாகவும், பின்னர் நிரந்தரமாகவும் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றினார்கள். 2010-ம் ஆண்டு சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட திலகன், அதன் பின்னர் உடல் நிலை பாதிக்கப்பட்டு 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இறந்தார். அவர் இறக்கும் வரை அவரை நடிகர் சங்கத்தில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி கேட்பது ஜனநாயக உரிமை என்று சொல்லிக்கொள்ளும் பட்சத்தில், நடிகர் சங்கத்திற்கு எதிராக சில கேள்விகளை முன் வைத்தார் என்பதற்காக, நீக்கப்பட்ட திலகனை கடைசி வரை சங்கத்தில் சேர்க்கவே இல்லை. ஆனால் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து, சிறைக்குச் சென்று, அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் ஒருவரை மட்டும் எப்படி.. எதன் அடிப்படையில் மலையாள நடிகர் சங்கம் மீண்டும் சேர்த்துக் கொண்டிருக்கிறது என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகிறார்கள்.

இந்தக் கருத்தை கொஞ்சம் அழுத்தமாகவே நடிகர் சங்கத்தை நோக்கி பதிவு செய்திருக்கிறார், மலையாள சினிமா உலகின் முன்னணி இயக்குனரான ஆசிப் அபு. அவர் ‘சில வருடங்களுக்கு முன்பு, நடிகர் சங்கத்திற்கு எதிராக சில கருத்துக்களைச் சொன்னார் என்பதற்காக, மூத்த நடிகரான திலகனை சங்கத்தை விட்டே நீக்கினீர்கள். அவர் இறக்கும் வரை சங்கத்தில் சேர்க்கப் படவே இல்லை. அப்படி அவர் என்ன தவறு செய்து விட்டார்? ஆனால் இப்போது திலீப்பிடம் காட்டும் கரிசனத்தை, திலகனிடம் காட்டாமல் போனதற்கு என்ன காரணம். இந்த பாரபட்சமான செயல்பாடு நல்லதல்ல’ என்று கூறியிருக்கிறார்.

‘அம்மா’ சங்கத்தின் புதிய தலைவராக எதிர்ப்பு இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால், தான் எடுக்கும் எந்த முடிவையும் அனைவரும் ஏற்றுக்கொண்டு விடுவார்கள் என்று மோகன்லால் நினைத்து விட்டாரா?. அவர் எதை நினைத்து நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் இணைத்தாரோ தெரியவில்லை. ஆனால் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற உடனேயே இந்தப் பிரச்சினையை கையில் எடுக்காமல், கொஞ்சம் ஆறப்போட்டு செய்திருக்கலாம். 

Next Story